லிட்டில் இந்தியா என்றதுமே கண்டிப்பாக சிங்கப்பூரில் வாழும் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்களின் மனம் துள்ளும் என்பதில் வியப்பில்லை. அந்த அளவிற்கு அவர்களின் வா!ழ்வோடு ஒன்றிய இடம் என்று தான் லிட்டில் இந்தியாவைக் கூற வேண்டும்.
லிட்டில் இந்தியா என்பது சிங்கப்பூரில், சிங்கப்பூர் ஆற்றின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு நகர்ப்புறப் பகுதியாகும். இந்த நகர்ப்பகுதி, சிங்கப்பூர், சைனாடவுனுக்கு எதிரே ஆற்றுக்கு அடுத்த பக்கத்திலும், கம்போங் கிலாமுக்கு வடக்கிலும் அமைந்துள்ளது. உள்ளூர் தமிழ் மக்கள் இதனைத் தேக்கா என்றும் அழைக்கிறார்கள்.
முன்பொரு காலத்தில் கால்நடை மேய்ப்பவர்கள், சுண்ணாம்பு சூளைகள் மற்றும் பந்தயப் போட்டிகளின் இருப்பிடமாக ஐரோப்பியர்கள் வசம் இருந்த இந்த வண்ணமயமான பகுதி படிப்படியாக பல நூற்றாண்டுகளாக மாறத்துவங்கி தற்போது உள்ளூர்வாசிகளுக்கும் பயணிகளுக்கும் பிரியமான இடமாக மாறியுள்ளது.
அதிலும் லிட்டில் இந்தியா நகரத்தின் இதயம் என்றால் அது வரலாற்று புகழ் Serangoon Road என்றே கூற வேண்டும். முன்பு இந்த பகுதியில் சுண்ணாம்பு சூளைகள் நிறைய இருந்த காரணத்தினால் Soonambu Kamban என்று அழைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூரில் தமிழர்கள் அதிகமாக வாழும் லிட்டில் இந்தியா சிங்கப்பூரின் மிக அழகான சிட்டி என்று சொல்வதைவிட, செல்பவர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் வண்ணமயமான கட்டிடங்கள், கோவில்கள், கடைத்தெருக்கள், இந்திய உணவகங்கள், மற்றும் பல்வேறு வணிக வளாகங்கள் நிறைந்த எப்போதும் மக்கள் கூட்டத்துடன் துடிப்புடன் காணப்படும் நகரம் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். அதிலும் தமிழர்களின் பண்டிகைகளான தீபாவளி மற்றும் பொங்கல் போன்ற சமயங்களில் இங்கு வீதிகள் திருவிழா கோலம் கொண்டு களைகட்டும் என்றே கூறலாம்.
பல்வேறு சூழல் காரணமாக சொந்த நாடு, ஊர், உறவுகளை விட்டு சிங்கப்பூர் வந்தவர்களுக்கு, மீண்டும் தாய் நாட்டின் மடியில் இருப்பது போன்று ஆறுதல் கிடைத்தால் யார் தான் லிட்டில் இந்தியா செல்லாமல் இருக்க முடியும்.
லிட்டில் இந்தியாவில் காணவேண்டிய முக்கிய இடங்கள்
Sri Veeramakaliamman Temple மற்றும்
Srinivasa Perumal Temple
தமிழர்களின் மரபு, கலாச்சாரத்தோடு கோவில்கள் என்றும் நெருக்கமானவை. அந்தவகையில் லிட்டில் இந்தியா செல்லும் இந்துக்கள் Serangoon Road இல் அமைந்திருக்கும் பழம்பெருமை வாய்ந்த ஸ்ரீ வீரமாக்காளியம்மன் மற்றும் ஸ்ரீனிவாச பெருமாள் கோவில்களுக்கு செல்வது அவர்களின் ஆன்மீகத் தேடலுக்கு நற்பலன் அளித்திடும்.
Indian Heritage Center
இங்கு தொன்றுதொட்டு சிங்கப்பூரில் குடியேறிய இந்திய மற்றும் தெற்காசிய முன்னோர்களின் வாழ்க்கை வரலாறு, கலாச்சாரம் போன்றவற்றை அறிந்து கொள்வது நம் முன்னோர்கள் மீதான பிணைப்பை அதிகரித்திடும் என்பதில் ஐயமில்லை.
Former House of Tan Teng Niah
இது லிட்டில் இந்தியாவில் எஞ்சியிருக்கும் கடைசி chinese villa ஆகும். இதன் வானவில் வண்ணங்கள் காண்போரை புகைப்படம் எடுக்க வைக்கக்கூடியது.1900 இல் Tan Teng Niah என்ற chinese வணிகரால் கட்டப்பட்ட இந்த இரண்டு மாடி villa தற்போது பல வணிக நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
Abdul Gaffoor Mosque மற்றும் Sakya Muni Buddha Gaya Temple
இந்தியாவில் மட்டுமல்லாது லிட்டில் இந்தியாவிலும் மதச்சார்பின்மை கடைபிடிக்கப்படுவதற்கு உதாரணமாக Abdul Gaffoor Mosque மற்றும் Sakya Muni Buddha Gaya temple ஆகியவற்றைக் கூறலாம். அதிலும் 13 அடி உயர புத்தர் சிலையை காணும்போது நம்மை அறியாமல் மனம் அமைதி கொள்வது இயல்பானது. நாடு, மதங்களைத் தாண்டி மனிதம் தழைத்தோங்க செய்திட லிட்டில் இந்தியா வரும் அனைவருக்கும் நல்வாய்ப்பு என்றே இவற்றைக் கூற வேண்டும்.
லிட்டில் இந்தியாவில் எங்கே என்ன கிடைக்கும்?
Mustafa Center
நீங்கள் லிட்டில் இந்தியாவிற்கு சென்றுவிட்டு Mustafa departmental store செல்லாவிட்டால் உங்கள் பயணம் முழுமை பெற்றதாக சொல்லவே இயலாது. ஏனெனில் அந்த அளவிற்கு உங்களுக்கு தேவையான அத்தனை பொருட்களும் கிடைக்ககூடிய ஒரே இடம் என்றால் அது Mega store Mustafa மட்டுமே. மளிகைப் பொருட்கள், காய்கறிகள் , பழங்கள் என்று அன்றாட வாழ்வுக்கு தேவையான சகலமும் வாங்க அனைத்து மக்களின் சாய்ஸ் mustafa தான். இங்கு இரவு 2 மணி வரை கடை திறந்திருப்பது கூடுதல் சிறப்பு ஆகும்.
Jothi Store and Flower Shop
உங்களுக்கு மணம் வீசும் மலர்கள் இஷ்டம் என்றால் நீங்கள் லிட்டில் இந்தியாவில் செல்ல வேண்டிய இடம் இதுதான். அதோடு பூஜை சம்மந்தமான பொருட்கள், சில்வர், பித்தளை பொருட்கள் மற்றும் இந்தியாவிற்கே உரித்தான அழகுசாதனப் பொருட்கள், இயற்கை மூலிகைப் பொடிகள், எண்ணெய்கள் வாங்கவும் இங்கு செல்லலாம்.
Tekka Centre ( Tekka Market )
லிட்டில் இந்தியாவில் இந்திய உடைகள் மற்றும் இந்திய உணவு வகைகளுக்கு பிரசித்தி பெற்றது Tekka சென்டர் ஆகும். Tekka Centre இந்திய உணவு பிரியர்களுக்கு கண்டிப்பாக விருந்தாக அமையும் என்பதில் ஐயமில்லை.அதுமட்டுமில்லாமல் இங்கு இறைச்சி வகைகள் மற்றும் பல்வேறு கடல் மீன் வகைகளும் வாங்க இயலும்.
Little India Arcade
இங்கு பாரம்பரிய இந்திய இனிப்பு வகைகள் மிகவும் பிரபலமானவை. தீபாவளி பொங்கல் போன்ற விழாக்காலங்களில் கூட்டம் அலைமோதும் என்பதில் சந்தேகமில்லை.மேலும் இங்கு பெண்களுக்கான imitation வளையல், நகைகள் போன்றவைக்கான கடைகளும் உண்டு
.
Serangoon Road
லிட்டில் இந்தியாவில் தங்க நகைகள் வாங்க விருப்பம் உள்ளவர்கள் இங்கு சென்றால், பல விதமான இந்திய மற்றும் மாடர்ன் டிசைன்களில் நகைகளை வாங்கலாம்.
Buffalo Road
Tekka centre க்கு எதிரே இருக்கும் Buffalo Road இந்திய காய்கறிகள் வாங்க சிறந்த இடம் ஆகும். இங்கு வெண்டைக்காய், சேனைக் கிழங்கு என்று தனிப்பட்ட இந்திய காய்கறிகள் மற்றும் வாசனை மசாலாப் பொருட்கள் வாங்கி பயனடையலாம்.
லிட்டில் இந்தியாவில் எங்கு என்ன சாப்பிடலாம்?
ஷாப்பிங் முடித்த கையோடு தங்களின் பசியாற்ற லிட்டில் இந்தியாவில் ஏராளமான North Indian மற்றும் South Indian சைவ அசைவ உணவகங்கள் உள்ளன. அவற்றில் குறிப்பாக சப்பாத்தி வகைகளுக்கு Azmi Restaurant, பிரியாணி வகைகளுக்கு My Briyani, தந்தூரி வகைகளுக்கு Khansama Tandoori, இந்திய சாட் சிற்றுண்டி வகைகளுக்கு Kailash Parbat, பஞ்சாபி உணவு வகைகளுக்கு Jaggi’s, மற்றும் Banana Leaf Apolo போன்ற உணவகங்கள் பெயர் பெற்றவை ஆகும்.
பணியின் நிமித்தம் தாய்நாட்டை விட்டு சிங்கப்பூருக்கு வந்தவர்கள் அங்கு நினைத்தபோதெல்லாம் செல்ல இயலாவிட்டாலும் லிட்டில் இந்தியாவில் நிச்சயம் தாய் நாட்டிற்கு சென்ற வந்த உணர்வை பெற முடியும் என்பது நிதர்சனமான உண்மை.
சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை உள்ளதை உள்ளபடி தெரிந்து கொள்ள தமிழ் சாகா ஃபேஸ்புக் பக்கத்தை நீங்க ஃபாலோ பண்ணலாம்.