சிங்கப்பூரில் 2020 மற்றும் 2022 க்கு இடையில் மொத்தம் 32 நிறுவனங்கள், தங்களிடம் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களின் மருத்துவக் கட்டணத்தைச் செலுத்தத் தவறிவிட்டனர் என்று மனிதவள அமைச்சகம் (MOM) இன்று (மே.10) தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரை பொறுத்தவரை, ஒரு ஊழியருக்கு வேலை செய்யவே முடியாத அளவுக்கு உடல்நிலை இருந்தால், முதலாளிகள் தங்கள் சொந்த செலவில் சிகிச்சையைத் தொடர வீட்டிற்கு அனுப்பலாம். அதுவும், அந்த ஊழியர் பயணம் செய்யும் அளவுக்கு உடல் தகுதியுடன் இருக்கிறார் என்று மருத்துவரால் சான்றளிக்கப்பட்டால் மட்டுமே சொந்த நாடு செல்ல அனுமதிக்கப்படுவார்.
சிங்கப்பூரில் வேலை செய்யும் வெளிநாட்டு ஊழியர், இங்கு தனிநபர் இன்ஷூரன்ஸ் எடுப்பது எவ்வளவு முக்கியம் என்பதை இந்த பதிவில் காணலாம். எனினும், இந்தியாவில் இருந்து ஒருவர் சிங்கப்பூருக்கு வேலை ரீதியாக வருகின்றார் என்றால் நிச்சயம் அவருக்கு இன்ஷூரன்ஸ் பதிவு செய்யப்படும். அப்படியிருக்கும் போது, தனிநபர் இன்ஷூரன்ஸ் எதற்கு என்ற கேள்வி எழலாம்.
ஒரு நிறுவனத்தின் மூலம் சிங்கப்பூருக்கு இன்ஷூரன்ஸ் எடுத்து வேலைக்கு வரும் போது, அது இக்கட்டான நேரத்தில் உங்கள் கஷ்டத்திற்கு முழுமையாக கைக்கொடுக்குமா என்றால் கேள்விக்குறி தான். உதாரணமாக நிறுவனம் மூலம் எடுக்கப்படும் இன்ஷூரன்ஸ் மட்டும் இருக்கும்பட்சத்தில், சிங்கப்பூரில் ஏதாவது எதிர்பாராத விபத்து ஏற்பட்டால், அந்த இன்ஷூரன்ஸ் கவரேஜ் மூலம், உங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகை வரை மட்டுமே கவர் செய்யப்படும்.
தேவையான முதலுதவி அளிக்கப்பட்டு, நீங்கள் ஓரளவு உடல்நலம் தேறிய நிலையில் மீண்டும் தாயகம் அனுப்பப்படுவீர்கள். ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே உங்களுக்கான முழு இன்ஷூரன்ஸ் பலன்களையும் உங்களுக்கு கிடைக்கும் படி ஏற்பாடு செய்து தருகின்றனர். இங்கு தான் தனிநபர் இன்ஷூரன்ஸ் அவசியமாகிறது.
சிங்கப்பூரில் தோராயமாக 50,000 வெள்ளிக்கு நீங்கள் மெடிக்கல் இன்ஷூரன்ஸ் எடுக்கிறீர்கள் என்றால், அதற்கு 50 வெள்ளி வரை பணம் செலுத்த வேண்டியிருக்கும். சிங்கப்பூரை பொறுத்தவரை குறைந்தபட்சமாக 10 வெள்ளி மாதம் கட்டும் இன்சூரன்ஸ் பிளான்கள் உண்டு. அதுமட்டுமின்றி, நீங்கள் வெளிநாடுகளில் எடுக்கும் இன்ஷூரன்ஸ்களை பிற நாடுகளிலும் Claim செய்யலாம் என்பது மறந்துவிட வேண்டாம்.
வெளிநாட்டு ஊழியர்களுக்கு சிங்கப்பூரில் கிடைக்கும் தனிப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களின் எண்ணிக்கை காப்பீட்டு வழங்குநரைப் பொறுத்து மாறுபடலாம். இருப்பினும், இங்கு தொழிலாளர்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களை வழங்கும் சில பொதுவான காப்பீட்டு வழங்குநர்களின் பட்டியல் இங்கே:
NTUC Income
Great Eastern
AXA
AIA
Prudential
மேலே குறிப்பிடப்பட்டுள்ள இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் ஏஜெண்ட்ஸ் மூலம், அந்தந்த நிறுவனங்களில் உங்களுக்கு தோதான தனிநபர் மெடிக்கல் இன்ஷூரன்ஸை எடுத்துக் கொள்ளலாம்.