சிங்கப்பூர்: பிளாக் 33 Bendemeer சாலையில், கத்தியை வைத்துக் கொண்டு மிரட்டிய 64 வயது முதியவர் ஒருவர் நேற்று (மார்ச் 23) மாலை காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதுகுறித்து சிங்கப்பூர் போலீசார் (SPF) தெரிவித்துள்ள தகவலில், Bendemeer சாலையில் உள்ள குடியிருப்பில், அந்த நபர் கூர்மையான கத்தியை கையில் வைத்துக் கொண்டு, அங்கும் இங்கும் கூச்சலிட்டுக் கொண்டும் இருந்தார்.
பிறகு, அவரை பிடிக்க ஒரு போலீசார் நெருங்கிய போது, அந்த நபர் மற்ற அதிகாரிகளை நோக்கி கத்தியை வீசினார். நாங்கள் மாலை 4.07 மணியளவில் பலமுறை எச்சரித்தும், அவர் ஆயுதத்தை கைவிட மறுத்துவிட்டார்.
பின்னர் அந்த நபர் கத்தியுடன் தொடர்ந்து அதிகாரிகளை நோக்கி முன்னேறினார். போலீஸ் அதிகாரிகள் அந்த நபரை நோக்கி மூன்று டேசர் (taser) ஷாட்களை சுட்டு, அந்த நபருக்கும் அவர்களுக்கும் இடையே இடைவெளியை உருவாக்கினர். இருப்பினும், அவர் தொடர்ந்து அதிகாரிகளை நோக்கி முன்னேறினார்.
இதனால் போலீசாரின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. அந்த நபர் அங்கு என்ன வேண்டுமானாலும் செய்திருப்பார்.எனவே, வேறுவழியின்றி அதிகாரிகளில் ஒருவர் தனது கைத்துப்பாக்கியால் அந்த நபரை நோக்கி சுட்டார். குண்டு பாய்ந்த அந்த நபர் தரையில் சுருண்டு விழுந்தார்.
இதையடுத்து, அதிகாரிகள் அந்த நபருக்கு cariopulmonary resuscitation சிகிச்சை அளித்தனர். அவர் மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட, மாலை 5.13 மணியளவில் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
பட்டப்பகலில், சிங்கப்பூரில் போலீசார் ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியிருப்பது தற்போது பேசு பொருளாகி இருக்கிறது. இந்நிலையில், எதிரியின் மூலம், கடுமையான காயம் அல்லது மரணம் போன்ற உடனடி அச்சுறுத்தல்களை தடுக்க, உடலின் மையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்த அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது என்று காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.