அண்டை நாடான மலேசியாவின் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சகம் இவ்வாண்டு ஜனவரி 1, 2022 முதல் கடந்த ஏப்ரல் 27, 2022 வரை வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு மானிய விலையில் ரோன்95 பெட்ரோலை விற்பனை செய்தது தொடர்பாக 18 புகார்களைப் பெற்றுள்ளது.
நன்யாங் சியாங் பாவின் கூற்றுப்படி, ஆச்சர்யம் அளிக்கும் விதமாக இந்த 18 புகார்களும் ஜோகூர் மாநிலத்தில் உள்ள வழக்குகள் தொடர்பானவை என்பது குறிப்பிடத்தக்கது, அவற்றில் பெரும்பாலானவை ஜோகூர் பாருவிலிருந்து வந்தவை.
மலேசியாவின் பிற மாநிலங்களிலிருந்து இதுபோன்ற புகார்கள் எதுவும் வருவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மலேசியாவின் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகாரங்களுக்கான அமைச்சர் அலெக்சாண்டர் நந்தா லிங்கி, இந்த புகார்கள் குறித்து அந்நாட்டு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகக் கூறினார்.
கடந்த ஏப்ரல் 27ம் தேதி அன்று ஜோகூர் பாரு பெட்ரோல் நிலையத்தில் வெளிநாட்டு வாகனங்களுக்கு பிரத்யேக எரிபொருள் நிரப்பும் பாதையை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் அவர் பேசினார்.
Ron95 பெட்ரோலை வெளிநாட்டவர்களுக்கு விற்பது மலேசிய சட்டப்படி தண்டனைக்குரிய செயலாகும். மலேசியர்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் ரோன்95 பெட்ரோலை வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு விற்க அனுமதித்ததன் மூலம் குற்றவாளிகளாகக் காணப்பட்ட பெட்ரோல் நிலைய நடத்துநர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று நந்தா கூறினார்.
அந்த நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக RM2 மில்லியன் (~S$635,000) வரை விதிக்கப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார். எல்லைக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதிலிருந்தே சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் மலேசியா சென்று மலேசியர்களுக்கு என்று உள்ள மானிய எரிபொருளை நிரப்பிக்கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும், இந்த சட்டங்களை மீறும் வெளிநாட்டு பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கும் திட்டம் தற்போது இல்லை என்று பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் ஹரி ராயா விடுமுறையில், சிங்கப்பூரர்கள் அதிக அளவில் ஜோகூருக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் பார்த்துக் கொள்வதன் மூலம் மலேசிய அதிகாரிகளுக்கு உதவ பெட்ரோல் நிலைய நடத்துனர்களை அவர் வலியுறுத்தியுள்ளார்.