TamilSaaga

உலகின் ரியல் “KGF” சிங்கப்பூர்.. 200 வருடங்களாக உழைத்து சிங்கையை கட்டி எழுப்பிய “அசாத்திய” தமிழர்கள்

சிங்கப்பூர, வெறும் 728.6km² அளவில் உள்ள ஒரு சிறிய நாடு, சரியாகசொல்லப்போனால் சென்னையை விட கொஞ்சம் பெரிய நிலப்பரப்பை கொண்ட ஒரு சொர்க்கபூமி. உலகின் பிற பல நாடுகளை போலவே 1819ம் ஆண்டு இங்கு வந்த வெள்ளையர்களின் ஆட்சியின் கீழ் இயங்கிய ஒரு நாடு தான் சிங்கப்பூர்.

சரி இவ்வளவு சிறிய நாடு ஒன்று இன்று உலகின் மிகசிறந்த நாடுகளின் பட்டியலில் நீடித்து நிற்பது எப்படி என்று கேட்டால், நிச்சயம் அதை ஆட்சி செய்த பல நல்ல அரசியல்வாதிகளும் ஒரு காரணம் என்று கூறலாம். ஆனால் 1965ம் ஆண்டு சிங்கப்பூர் சுதந்திரம் பெறுவதற்கு முன்பிலிருந்தே ஒரு கூட்டம் இந்த சிங்கையின் வளர்ச்சிக்காக பாடுபட்டு வந்துள்ளது.

சிங்கையும் தமிழரும்

சிங்கப்பூரில் சுமார் 200 வருட வரலாறு கொண்ட அந்த கூட்டம் தான் இன்று உலகே வியந்து பார்க்கும் நமது தமிழ்ச் சமூகம். 19ம் நூற்றாண்டில் அதாவது 1824ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி அப்போதைய சிங்கப்பூரில் வெறும் 756 இந்தியர்கள் மட்டுமே இருந்துள்ளனர். சிங்கப்பூர் மற்றும் இந்தியா என்று அப்போது இரு நாடுகளும் வெள்ளையர்கள் ஆட்சியின் கீழ் இருந்த நிலையில் பல இந்தியர்கள் சிங்கப்பூருக்கு வேலை தேடியும் அல்லது ராணுவ பணிகளுக்காக இங்கு புலம்பெயர்ந்தனர்.

அதேபோல விடுதலைக்காக பல தமிழர்கள் போராடி வந்த நிலையில், நிரம்பிய இந்திய சிறைகளை குறைக்கும் நோக்கில் ஆங்கிலேயர்கள் இந்திய குற்றவாளிகளை சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி சிறிய அளவில் தான் தமிழ் மக்கள் சிங்கப்பூருக்குள் வர துவங்கியுள்ளனர். அதன் பிறகு வியாபாரம், கூலி வேலை போன்ற பணிகளுக்காக சிங்கப்பூர் வந்த தமிழர்கள் சிங்கையின் ஒரு அங்கமாக மாறத்துவங்கினர்.

சிங்கையில் சிறைவைக்கப்பட்ட கைதிகள், கூலி வேலை செய்தோர், வியாபார நிமித்தமாக இங்கு வந்தோர் என்று பலரும் இங்கு தங்கி தங்கள் வாழ்க்கையை துவங்க சிங்கப்பூரும் வளரத்துவங்கியது. சிங்கப்பூரின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் தங்கள் பங்கை அளிக்கத்துவங்கினார்கள் தமிழர்கள்.

காலனித்துவ காலம் 1820 முதல் 1950 வரை

சிங்கப்பூரை வணிக ரீதியாக உயர்த்தியதில் பெரிய பங்கு தமிழர்களுக்கு உண்டு, மெல்ல மெல்ல சிங்கப்பூர் வளர துவங்கியது. ஒரு கட்டத்தில் இங்கிருந்த மலாய் மக்களின் எண்ணிக்கையை விட அதிகமான அளவில் இந்தியர்கள் இங்கு புலம்பெயர் தொடங்கினார்.

சாலை போடும் பணி, உணவகம், மளிகைக்கடை, வட்டிக்கு பணம் கொடுக்கும் வியாபாரம் என்று சிங்கையில் வேரூன்றி நின்றனர் தமிழர்கள். பி.கோவிந்தசாமி பிள்ளை போன்ற பல வியாபார ஜாம்பவான்கள் இங்கு உருவாகினர்.

தாங்கள் வளர்ந்தது மட்டுமல்லாமல் சிங்கப்பூரையும் அவர்கள் தங்களோடு சேர்ந்து வளரச்செய்தனர். 1965ம் ஆண்டு சிங்கப்பூர் தனி நாடக பிரிந்த பின்னர் லீ குவான் யூ என்ற மாபெரும் சக்தியோடு துணை நின்ற பல தமிழ் அமைச்சர்கள் இங்கு உண்டு.

சிங்கப்பூர் அரசியலில் தமிழர்கள்

இன்றைய காலகட்டத்தில் சிங்கப்பூர் அமைச்சரவையை பல தமிழர்கள் அலங்கரித்து நிற்பதே சிங்கையின் வளர்ச்சியில் தமிழர்களின் பங்கை நமக்கு எடுத்துக்காட்டுகிறது. ராணுவம், ஊழல்தடுப்புத்துறை, போதைப்பொருள் தடுப்பு, மருத்துவம், கல்வித்துறை, அரசியல் என்று சிங்கப்பூர் தமிழர்களுக்கு அளித்திருக்கும் கௌரவம் தான் எத்தனை எத்தனை.

தமிழர்கள் தங்களுக்கு செய்த பல நன்மைகளை போற்றும் வகையில் இன்று தமிழை தனது ஆட்சி மொழியாக கொண்டுள்ளது சிங்கப்பூர். சிறு துரும்பை போல இருந்த சிங்கப்பூரை இன்று பார் போற்றும் மாபெரும் அழகிய சிற்பமாக மாற்றியதில் தமிழர்களின் பங்கு அசாத்தியமானது என்பதை மறுக்க முடியுமா என்ன?

தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts