சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) விமானத்தில் பணிப்பெண்ணை பாலியல் துன்புறுத்திய 20 வயது இந்திய மாணவருக்கு மூன்று வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த ரஜத் என்ற மாணவர், ஆஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். அவர் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி பெர்த்தில் இருந்து சிங்கப்பூருக்கு விமானத்தில் பயணம் செய்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
காலை 11.20 மணியளவில், விமான பணிப்பெண் ஒருவர் கழிவறையை சுத்தம் செய்துகொண்டிருந்தபோது, தரையில் கிடந்த காகிதத்தை எடுக்க குனிந்துள்ளார். அப்போது அங்கு வந்த ரஜத், தனது இரண்டு கைகளையும் அந்த பணிப்பெண்ணின் இடுப்பில், பின்புறத்துக்கு அருகில் வைத்துள்ளார். பின்னர், அவர் அந்த பணிப்பெண்ணையும் தள்ளி கழிவறைக்குள் நுழைந்துள்ளார். இதனைப் பார்த்த பெண் பயணி ஒருவர் உடனடியாக அந்த பணிப்பெண்ணை கழிவறையிலிருந்து வெளியே அழைத்து வந்து, ரஜத்திடமிருந்து விலக்கி விமானத்தின் பின்புறம் அழைத்துச் சென்றுள்ளார். விமானம் சாங்கி விமான நிலையத்தில் தரையிறங்கியதும் ரஜத் கைது செய்யப்பட்டார்.
மூன்று முதல் ஆறு வாரங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்க வேண்டும் என்று வாதிட்ட அரசு வழக்கறிஞர், இந்த சம்பவத்தால் அந்த பணிப்பெண் மிகுந்த மன உளைச்சலுக்கும், பயத்திற்கும், அவமானத்திற்கும் ஆளானதாக குறிப்பிட்டார்.
சிங்கப்பூரில் நேர்ந்த சோகம்! அதிவேக கார் மோதலில் வசந்த்ராஜ் மரணம்!
மேலும், விமானத்தில் நடந்த இந்த குற்றம் மிகவும் கடுமையானது என்று கூறிய வழக்கறிஞர், வணிக விமானப் பயணம் என்பது நெருக்கடியான சூழல் நிறைந்தது என்றும், தேவையற்ற உடல் ரீதியான தொடர்புகளை கண்டறிவது கடினம் என்றும் சுட்டிக்காட்டினார். மேலும், பாதிக்கப்பட்டவருக்கு விமானத்தில் இருந்து தப்பிக்கவோ அல்லது உடனடியாக சட்ட உதவியை நாடவோ வாய்ப்பில்லை என்றும் அவர் வாதிட்டார்.
குற்றவாளியின் வழக்கறிஞர் ரஞ்சித் சிங், தனது கட்சிக்காரருக்கு இதற்கு முன் எந்த குற்றப் பதிவும் இல்லை என்றும், பள்ளியில் நல்ல நடத்தை உடையவராக இருந்தார் என்றும் குறிப்பிட்டார். அபராதம் விதித்தால் போதும் என்றும், இல்லையென்றால் ஒரு வாரம் மட்டுமே சிறைத்தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர் நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார்.
பாலியல் துன்புறுத்தல் குற்றத்திற்கு சிங்கப்பூர் சட்டப்படி மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம், பிரம்படி அல்லது இவை அனைத்தும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படலாம். இந்த வழக்கில் ரஜத்துக்கு மூன்று வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.