சிங்கப்பூர், இந்தியர்களின் இரண்டாம் தாயகம் என்று அழைக்கப்படும் ஒரு சொர்க்கபுரி. சிங்கப்பூரின் வளர்ச்சியில் இந்தியர்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கும் ஒரு மிகப்பெரிய பங்கு உண்டு என்பதை யாராலும் மறுக்க முடியாது. அந்த வகையில் சிங்கப்பூரில் சாதித்து நம் நாட்டு பிரதமரே தனிப்பட்ட முறையில் பாராட்டும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறார் இந்தியரான நீரஜ் அகர்வால்.
யார் இந்த நீரஜ் அகர்வால்? இவரை பற்றி தெரிந்துகொள்ள நாம் சற்று காலத்தை பின்னோக்கி பார்க்கவேண்டும். அப்போது வருடம் 2006. சிங்கப்பூரின் டெமாசெக் பாலிடெக்னிக்கில் தனது பட்டப்படிப்பை முடித்தவர் தான் நீரஜ் அகர்வால். தனது 23வது வயதில், கணினி வன்பொருள் மற்றும் மென்பொருளை (Hardware and Software) விற்கும் மற்றும் சேவை செய்யும் ஐந்து கடைகளை நடத்தி வந்தவர். அப்போதே சிங்கப்பூர் மதிப்பில் 8.2 மில்லியன் ஆண்டு வருமானத்துடன் வலம் வந்தவர் அவர்.
ஏன் அந்த ஆண்டு (2006) நமது சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங், தனது தேசிய தினப் பேரணி உரையில், நீரஜின் வெற்றிக் கதையைக் குறிப்பிட்டு சிலாகித்தார். வெளிநாட்டுத் திறமைகளை ஈர்ப்பதன் முக்கியத்துவத்தை விளக்கிய அவர், இது போன்ற திறமைகளை சிங்கப்பூரர்கள் வரவேற்கும்படி கேட்டுக் கொண்டார்.
6 ஆண்டுகளில் ஏற்பட்ட இந்த வளர்ச்சி துவங்கியது 2000மாவது ஆண்டில் தான். சிங்கப்பூர் கல்வி அமைச்சகத்தின் உதவித்தொகையின் கீழ் நீரஜ் முதலில் சிங்கப்பூர் வந்தார். சிங்கப்பூரில் படிக்கும் போது, கூடுதல் பணம் சம்பாதிக்க, இந்தி மொழி ஆசிரியர்களை நியமித்து, மாதிரி தேர்வுத் தாள்களை அமைத்து, அவற்றை ஆன்லைனில் மாணவர்களுக்கு விற்றார் நீரஜ்.
காலம் கடந்தது அவர் தனது பட்டப்படிப்பையும் முடித்தார். நீரஜ் நிரந்தரக் குடியுரிமை பெற்றவர் என்பதால் வேறு ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்வதை விட தனது சொந்த முயற்சியில் நிறுவனம் ஒன்றை அமைக்க அவர் ஆர்வமாக இருந்தார். உடனே 2004ல், $5,000 என்ற முதலீட்டில் தனது சொந்த கணினி சேவைத் தொழிலைத் தொடங்கினார்.
நீரஜ் தனக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூரில் இதே போன்ற ஸ்காலர்ஷிப்பில் வந்திருந்த தனது மூத்த சகோதரரையும் தன்னுடன் இணைய கேட்டுக்கொண்டார். இருவரும் இணைந்து கடுமையாக உழைத்தனர். அது கம்ப்யூட்டர்களின் துவக்க காலம் என்பதால் இவர்களுக்கு நல்ல வியாபாரம் நடந்தது.
இருவரும் இணைந்து இரவு பகல் பாராது உழைத்தனர், ஒரு நாளில் 20 கம்ப்யூட்டர்களை கூட பழுது பார்த்திருக்கிறோம் என்று அவர் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டவர்கள் வேறு நாட்டில் தொழில் துவங்குவது என்பது எளிதல்ல, ஆகையால் முதல் 2 ஆண்டுகள் நாங்கள் காணாத துன்பமில்லை. ஆனாலும் நாங்கள் இருவரும் மனம் தளரவில்லை, வெற்றி மட்டுமே நமது இலக்கு என்று எண்ணி ஒவ்வொரு நாளும் கடுமையாக உழைத்தோம்.
இறுதியில் அவர்களுக்கான காலம் கனிந்தது. உள்ளூர் வியாபாரிகளும் இந்த வெளிநாட்டு இளைஞர்கள் மீது நம்பிக்கை கொண்டனர். அவர்களும் தங்கள் தொழில் விஸ்வரூபம் எடுத்தனர். 2006ம் ஆண்டு இறுதியில் சிங்கப்பூர் மட்டுமில்லாமல் ஹாங்காங் வரை தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்த உள்ளூர் கூட்டாளருடன் இணைந்து பணியாற்ற துவங்கினர்.
வெளிநாட்டில் இருந்து வந்து, அறிவை மட்டும் மூலதனமாக கொண்டு மாபெரும் தொழிலதிபராக மாறியவர் தான் நீரஜ் அகர்வால். இதுபோல ஒரு சிறந்த மனிதரின் வாழ்க்கை பயணத்தை நினைவுக் கூறுவதில் தமிழ் சாகா உண்மையில் பெருமகிழ்ச்சி அடைகின்றது. இந்த கட்டுரையை படித்து உத்வேகம் கொண்டு வாழ்க்கையில் அடுத்த நிலைக்கு செல்ல யாரேனும் ஒருவருக்கு ஆர்வம் பிறந்தாலும் அதையே இந்த கட்டுரைக்கு கிடைத்த பரிசு என்றால் அது மிகையாகாது.