TamilSaaga
illegal marriage

இரண்டு திருமணம் செய்து ஏமாற்றிய இந்தியர் – கண்டிப்புடன் தண்டித்த சிங்கப்பூர் அரசு..!

சிங்கப்பூரில் 15 வருடங்களுக்கு முன்பு திருமணமான ஒருவர், தன்னுடன் பணிபுரியும் சக ஊழியரை ரகசியமாக மணந்துகொண்டுள்ளார். ஆனால் சிங்கப்பூர் சட்டப்படி இந்த இரட்டை திருமணம் ஒரு கிரிமினல் குற்றம் என்பதால் அவரை போலீசார் கைது செய்துள்ளனர். 49 வயதான இந்திய பிரஜையான வைத்தியலிங்கம் முத்துக்குமாருக்கு நேற்று வியாழக்கிழமை மூன்று மாதங்கள் மற்றும் மூன்று வார சிறைத்தண்டனை விதித்து சிங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

முதல் திருமணத்தை மறைந்து இரண்டாவது திருமணம் செய்த குற்றச்சாட்டும், சிங்கப்பூரில் நிரந்தர குடியிருப்புக்கான விண்ணப்பத்தில் தனக்கு வேறு எந்த திருமணங்களும் நடக்கவில்லை என்று பொய்யாக அறிவித்ததாக மற்றொரு குற்றச்சாட்டையும் அவர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். வைத்தியலிங்கம் தனது முதல் மனைவியான தற்போது 55 வயதாகும் சிங்கப்பூர் பெண்ணை, கடந்த 2007ம் ஆண்டு இந்தியாவில் திருமணம் செய்து கொண்டதாக நீதிமன்ற விசாரணையில் தெரியவந்தது.

கடந்த 2011ம் ஆண்டு, வைத்தியலிங்கம் தனது முதல் மனைவியுடன் சிங்கப்பூருக்கு வந்து இங்கு வேலை செய்யத் தொடங்கியுள்ளார். பின்னர் அவர் தனது இரண்டாவது மனைவியான 43 வயதான சிங்கப்பூரைச் சேர்ந்த சல்மா பீ அப்துல் ரசாக்கை சந்தித்துள்ளார். அப்போது வைத்தியலிங்கத்தின் சக ஊழியராக அவர் பணியாற்றி வந்துள்ளார். கடந்த ஜூன் 2022ல், வைத்தியலிங்கமும் சல்மாவும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளனர்.

குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பிய வைத்தியலிங்கம், சல்மாவை மணந்த பிறகு தனது முதல் மனைவியிடமிருந்து விவாகரத்து பெறுவதாக சல்மாவிடம் உறுதியளித்ததால், சல்மாவும் இந்த திருமணத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளார். வைத்தியலிங்கமும், சல்மாவும் ஆகஸ்ட் 2022ல் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்துகொண்டனர். அவர்களது திருமணம் இந்தியாவின் நாகூரில் உள்ள ஒரு மதத் தலைவரால் பதிவு செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திருமணம் ரத்து செய்யப்படாமல் உள்ளது என்று அந்நாட்டு அரசு உறுதிப்படுத்தியுள்ளது.

சிங்கப்பூர் அரசின் அதிரடி அறிவிப்பு – ஆபத்தான பயணிகள் இனி உள்ளே நுழைய முடியாது!

வைத்தியலிங்கமும் சல்மாவும் சிங்கப்பூர் திரும்பிய பிறகும் தனது முதல் மனைவியுடன் சில காலம் தங்கி வந்துள்ளார் வைத்தியலிங்கம். அதே நேரம் சல்மாவுடனும் உறவில் இருந்துள்ளார், அதன் காரணமாக செப்டம்பர் 14, 2023 அன்று, சல்மாவுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இப்பொது வைத்தியலிங்கம் ஒரு மகனுக்கு தந்தையாகி நிலையில் மருத்துவமனையில் இருந்த குழந்தை மற்றும் மனைவியை பார்க்க சென்றுள்ளார். ஆனால் அதே மருத்துவமனையில் தான் அவரது முதல் மனைவியும் பணியாற்றி வந்த நிலையில், வைத்தியலிங்கம் பிரசவ வார்டில் இருந்து வெளியே வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அதன் பிறகு தான் அவர் சட்டவிரோதமாக இரண்டு பேரை திருமணம் செய்துகொண்டு, அதை பயன்படுத்தி Long Term பாஸ் எடுக்க முற்பட்டது தெரியவந்துள்ளது.

Related posts