சிங்கப்பூர்: சிங்கப்பூரில் WeChat, UnionPay, Alipay போன்ற சீன நாட்டு குறுஞ்செய்தி மற்றும் கட்டணச் சேவைகள் மூலம் நடக்கும் மோசடிகள் அதிகரித்துள்ளதாக சிங்கப்பூர் காவல்துறையும் சிங்கப்பூர் நாணய வாரியமும் எச்சரித்துள்ளன.
ஜனவரி மாதம் முதல் தற்போது வரை சுமார் 680 மோசடி புகார்கள் பதிவாகியுள்ளன. இதன் மூலம் குறைந்தது 17.4 மில்லியன் வெள்ளி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசடிகள் எவ்வாறு நடந்தன?
- மோசடிக்காரர்கள் “8” அல்லது “+65” ஆகிய எண்களில் தொடங்கும் தொலைபேசி எண்களில் இருந்து பாதிக்கப்பட்டவர்களை அழைத்தனர்.
- அவர்கள் WeChat, UnionPay அல்லது Alipay போன்ற நிறுவனங்களின் ஊழியர்கள் என்று பொய்யாக கூறி, பாதிக்கப்பட்டவர்களின் சேவை சந்தாக் கட்டணங்கள் காலாவதியாகிவிட்டதாக தெரிவித்தனர்.
- இதன்பின்னர், WhatsApp செயலி மூலம் பாதிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட தகவல்களையும், வங்கிக் கணக்கு விவரங்களையும் அவர்கள் பெற்றனர்.
- மோசடிக்காரர்களைத் தொடர்புகொள்ள முடியாமலோ அல்லது சந்தாக் கட்டணங்களுக்கான பணத்தைத் திரும்பப் பெற முடியாமலோ போகும் போதுதான் பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தனர்.
அடையாளம் தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்க வேண்டாம் என்றும், தெரியாத நபர்களிடம் தனிப்பட்ட அல்லது வங்கிக் கணக்கு விவரங்களைப் பகிர வேண்டாம் என்றும், அவர்களுக்கு பணம் அனுப்ப வேண்டாம் என்றும் காவல்துறை பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
இந்த மோசடிகள் குறித்து பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சந்தேகத்திற்கிடமான எந்தவொரு அழைப்பு அல்லது குறுஞ்செய்தி கிடைத்தாலும் உடனடியாக காவல்துறையைத் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.