TamilSaaga

சிங்கப்பூரில் வேலைக்கு சேர ஏஜெண்ட்டிடம் கொடுத்த பணம்.. ஒரு ரூபாய் விடாமல் மொத்த பணத்தையும் திரும்பப் பெறுவது எப்படி?

சிங்கப்பூரில் வேலைக்கு வர வேண்டுமெனில், 90 சதவிகிதம் நாம் சார்ந்திருப்பது ஏஜெண்டுகளைத் தான். காரணம், சிங்கப்பூரில் உள்ள முக்கால்வாசி நிறுவனம், ஏஜெண்டுகள் இல்லாமல் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுப்பதில்லை. நேரடியாக வேலைக்கு எடுப்பதை விட, ஏஜெண்ட்ஸ் மூலம் எடுப்பதையே சிங்கை நிறுவனங்களும் விரும்புகின்றன. அதற்கு ஆயிரம் காரணங்கள் இருந்தாலும், இதுதான் எதார்த்தம்.

சிங்கப்பூரில் உள்ள ஏஜெண்டுகள், இந்தியாவில் உள்ள ஏஜெண்டுகளுடன் இணைந்து திறமையான ஆட்களை வேலைக்கு எடுக்கின்றனர். ஆனால், இதில் சிலர் பணத்தை வாங்கிக் கொண்டு வேலைக்கு ஏற்பாடு செய்வதில் தாமதம் செய்வது அல்லது வேலைக்கே ஏற்பாடு செய்யாமல் டிமிக்கி கொடுப்பது என்று உள்ளனர்.

குறிப்பாக, இந்த ஏப்ரல் மாதம் இறுதி முதல், மீண்டும் சிங்கப்பூரில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, வொர்க் பெர்மிட் கோட்டாவை சிங்கப்பூர் அரசு குறைத்திருந்தாலும், அடுத்தடுத்த மாதங்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தெரிகிறது. எனவே, ஏஜெண்டுகளும் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்த சூழலில், சில ஏஜெண்டுகள் சிங்கப்பூரில் நல்ல வேலை வேண்டும் என்று கேட்டு வருபவர்களிடம், பாஸ்போர்ட்டை வாங்கி வைத்துக் கொள்கின்றனர். அதுமட்டுமின்றி, ஜஸ்ட் 10 ஆயிரம் கொடுங்கள், 15 ஆயிரம் கொடுங்கள்.. மீதி பணத்தை ஆர்டர் வாங்கிக் கொடுத்த பிறகு தந்தால் போதும் என்று சொல்லி வாங்கி வைத்துக் கொள்கின்றனர்.

மேலும் படிக்க – சிங்கப்பூர் செல்ல விசா வந்துவிட்டதா? ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுங்க.. ஏஜெண்ட்டிடம் பணத்தை கொடுக்கும் முன்பு.. இதை செக் பண்ணுங்க!

இப்படி தலைக்கு 10,000 என்று 20 பேரிடம் வாங்கினாலே 2 லட்சம் சம்பாதித்து விடுவார்கள். பாஸ்போர்ட்டையும் கொடுத்துவிட்டு, பணத்தையும் கொடுத்துவிட்டு காத்திருக்க வேண்டியது சூழலை ஏற்படுத்தி விடுவார்கள். இன்னும் சிலர், வேலை கிடைத்தாக வேண்டும் என்ற ஆர்வத்தில் முழு பணத்தையும்.. அதாவது மூன்றரை லட்சம், நான்கு லட்சம் என்று செலுத்திவிட்டு மாதக்கணக்கில் காத்திருப்பார்கள்.

இப்படிப்பட்ட சூழலில், ஏஜெண்ட் உங்களை ஏமாற்றுகிறார் என்று தெரிந்தால், இன்னும் தொடர்ந்து காத்திருக்காமல், உடனடியாக பணத்தை திரும்பப் பெற நினைப்பதே புத்திசாலித்தனமான ஒன்றாக இருக்கும். அந்த குறிப்பிட்ட ஏஜென்ட் மீது நீங்கள் சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கலாம்.

இதற்கு முதலில் ஆன்லைன் மூலம் காவல்துறையின் பிரத்யேக தளத்தில் புகாரை பதிவு செய்ய வேண்டும். பிறகு, உங்கள் மொபைல் எண்ணிற்கு காவல்துறையில் இருந்து 2 நாட்களுக்குள் அழைத்து பேசுவர். பிறகு, நீங்கள் புகார் அளித்த நபரிடம் விசாரித்து, உங்கள் புகாருக்கான ஆதாரங்களை சரி பார்த்த பிறகு, ஏஜெண்ட் தவறு செய்திருப்பது உறுதி செய்யப்பட்டால், அவர் மீது FIR பதிவு செய்யப்படும்.

ஒருவேளை, போலீஸ் தரப்பில் உங்கள் புகாருக்கு எந்த ரெஸ்பான்ஸும் இல்லை எனில், அருகில் இருக்கும் நீதிமன்றத்தை அணுகி உங்கள் புகாரை FIR-ஆக மாற்றுமாறு மனு தாக்கல் செய்யலாம். இந்த மனுவிற்கு ரூ.2000 முதல் 3000 வரை செலவாகும். வக்கீல் கட்டணமாக ரூ.4000 வரை கேட்கப்படலாம். ஒட்டுமொத்தமாக 6-7 ஆயிரம் வரை இதற்கு செலவாகலாம்.

ஒருவேளை நீங்கள் லட்சக்கணக்கில் பணத்தை கொடுத்திருந்தால், உங்கள் பகுதிக்கான ஐகோர்ட் கிளையில் மனுத் தாக்கல் செய்யலாம். மிக முக்கியமான ஒரு விஷயம் என்னவெனில், நீங்கள் ஏஜெண்ட்டிடம் பணம் கொடுக்கும் போது, முடிந்தால் ஒரு புகைப்படம் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த வழக்கில் இது மிக முக்கிய ஆதாரமாக இருக்கும் என்பதை மறக்க வேண்டாம். அதேபோல், ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி இருந்தால், அதற்கான ஸ்க்ரீன் ஷாட் மற்றும் Reference Number-ஐ மறக்காமல் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

ஏஜெண்ட் மீது FIR பதிவு செய்யப்பட்டுவிட்டாலே, உங்களது பணத்தின் 60 – 70 சதவிகிதம் மீண்டும் கிடைத்துவிடும் என்று நம்பலாம். உங்கள் புகார் வழக்காக மாறும் போது, எதிர்தரப்பு முன்ஜாமீன் பெற மனுத் தாக்கல் செய்யும். அப்போது, உங்கள் தரப்பில் அந்த முன் ஜாமீன் மனுவுக்கு தடை கோரி மனுத் தாக்கல் செய்தால், ‘உங்களுக்கு கொடுக்க வேண்டிய தொகையில் ஒரு குறிப்பிட்ட பணத்தை கொடுத்தால் மட்டுமே முன்ஜாமீன் கொடுக்கப்படும்’ நீதிமன்றம் செக் வைக்கும். இங்கேயே நீங்கள் இழந்த பணத்தில் பாதிக்கு மேல் மீட்டு விடலாம்.

மீதி தொகையை வழக்கு தீர்ப்பு வரும் பொழுது பெற்றுவிடலாம். கொஞ்சம் அலைச்சல்.. மன உளைச்சல் என்று இருந்தாலும், உங்கள் பணத்தை மீட்டுவிடலாம். ஒரு நல்ல வாழ்க்கைக்காக சிங்கப்பூரில் வேலைக்கு செல்ல பணத்தை கொடுத்து ஏமாறும் நிலையில், இப்படி போராடி தான் பணத்தை மீட்க வேண்டியிருக்கும். என்ன செய்வது.. எல்லாம் நல்ல வாழ்க்கைக்கான தேடலுக்காகத் தான்!

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts