சிங்கப்பூர்: சிங்கப்பூர்க்கும் இந்தியாவுக்கும் இடையே சேவையாற்றி வரும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) தனது விமானங்களில் வழங்கப்படும் உணவுப் பட்டியலை புதுப்பித்துள்ளது. முதல் வகுப்பு, பிஸ்னஸ் வகுப்பு பயணிகளுக்கு மே 1-ம் தேதி முதல் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட இந்திய உணவு வகைகள் பரிமாறப்பட உள்ளன.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இந்தியாவில் இருந்து வாரந்தோறும் 92 முறை அகமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, ஹைதராபாத், கொச்சி, கொல்கத்தா மற்றும் மும்பை ஆகிய எட்டு நகரங்களுக்கு விமானங்களை இயக்குகிறது.
எஸ்ஐஏ வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ‘சுவீட்’ மற்றும் முதல் வகுப்பு பயணிகளுக்கான ஆறு வகையான ‘ஷாஹி தாலி’ உணவு இனி எட்டு வகையான உணவுடன் மேம்படுத்தப்படுகிறது. இதில் சோறு, பராத்தாவுடன் ஆறு விதமான காய்கறிகள் அல்லது இறைச்சி உணவுகள் இடம்பெறும். மேலும், சூடான அல்லது குளிர்ந்த பானத்துடன், பிரபலமான இந்திய இனிப்பு பானமான ‘லஸ்ஸி’யும் வழங்கப்படும். இந்த உணவு செம்பு நிறத்திலான பிரத்யேக தட்டுகளில் பரிமாறப்பட்டு பயணிகளுக்கு ஒரு சிறப்பான அனுபவத்தை அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ‘பிஸ்னஸ்’ வகுப்பு பயணிகளுக்கான ‘ருச்சி தாலி’ நான்கு வகை உணவிலிருந்து ஆறு வகை உணவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சோறு, பராத்தாவுடன் நான்கு விதமான காய்கறிகள் அல்லது இறைச்சி உணவுகள், ஒரு தின்பண்டம் (Starter), லஸ்ஸி பானம் மற்றும் பழக்கூட்டு (சாலட்) ஆகியவை இந்த தாலியில் இடம்பெறும். இந்த உணவுகள் வெள்ளி நிறத்திலான தட்டுகளில் வழங்கப்படும் என எஸ்ஐஏ தெரிவித்துள்ளது.
புகழ்பெற்ற இந்திய சமையற்கலைஞர் சஞ்சீவ் கபூரின் மேற்பார்வையில் இந்த புதிய உணவு வகைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்திய பாரம்பரிய சமையல் முறைகளான மண் ‘தந்தூர்’ அடுப்பு மற்றும் இரும்புப் பாத்திரங்கள் பயன்படுத்தப்பட்டு இந்த உணவுகள் தயாரிக்கப்படும். காய்கறிகள், மஞ்சள், இஞ்சி போன்ற ஆரோக்கியமான பொருட்களை உள்ளடக்கிய இந்த உணவுகள் புரதம் மற்றும் மாவுச்சத்து நிறைந்ததாக இருக்கும் என எஸ்ஐஏ குறிப்பிட்டுள்ளது.
இந்த புதிய உணவு பட்டியல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளின் உணவு கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் இருக்கும் என்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதன் மூலம், சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் பயணிக்கும் இந்திய பயணிகள் மேலும் சுவையான மற்றும் பாரம்பரிய உணவு அனுபவத்தைப் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.