சிங்கப்பூரில் சீனோஃபார்ம் தடுப்பூசியை போட்டுக்கொள்ள விரும்பும் முதியவர்கள் நாளை புதன்கிழமை (செப்டம்பர் 8) முதல் “ஹெல்த்வே” கிளினிக்குகளில் தங்களுக்கான இலவச தடுப்பூசிகளைப் பெறலாம் என்று அரசு தெரிவித்துள்ளது. 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 1000 முதியவர்களுக்கு முழு தடுப்பூசியை வழங்குவதற்காக சிங்கப்பூர் மருத்துவ குழு OUE எனும் ரியல் எஸ்டேட் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது.
இந்த முயற்சியானது, கோவிட் -19 தடுப்பூசி செலுத்தும் விகிதத்தை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஆதரவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்கள் இலவச தடுப்பூசிக்கு ஆன்லைனில் பதிவு செய்யலாம் மேலும் ஏற்கனவே “ஹெல்த்வேயில்” தங்கள் ஆர்வத்தை பதிவு செய்தவர்கள் தற்போது தங்கள் appointmentகளை பதிவு செய்ய அழைக்கப்படுகிறார்கள். 60 வயது என்பது இந்த ஆண்டு செப்டம்பர் 1ம் தேதியை பொறுத்து அமையும்.
சினோஃபார்ம் தடுப்பூசி வரும் வாரங்களில் ஹெல்த்வே ஜிபி கிளினிக்கில் அறிமுகப்படுத்தப்படும், வரும் புதன்கிழமை மூன்று கிளினிக்குகளில் இது தொடங்குகிறது. தடுப்பூசி மூன்று முதல் நான்கு வார இடைவெளியில் இரண்டு அளவுகளில் கொடுக்கப்படுகிறது. அனாபிலாக்ஸிஸ் வரலாறு இல்லாத மற்றும் கர்ப்பமாக இல்லாத 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட எவருக்கும் பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹெல்த்வேயில் இரண்டு டோஸ் தடுப்பூசிக்கு 99 வெள்ளி செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூர் தனது முதல் கோவிட் -19 தடுப்பூசி பூஸ்டர் ஷாட்களை இந்த மாதம் முதல் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், முதியோர் பராமரிப்பு வசதிகளில் வசிப்பவர்கள் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு வழங்கத் தொடங்கும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யே குங் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.