TamilSaaga

சிங்கப்பூரில் சொந்தமாக தொழில் தொடங்க ஆசையா?? அதற்கான தகுதிகள், நடைமுறைகள் தெரிந்து கொள்ளுங்கள்!!

சிங்கப்பூரில் பணிக்காக வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் ஏராளம் என்றாலும், சிங்கப்பூரில் புதிதாக தொழில் துவங்க விரும்புவர்களும் ஏராளம் என்றே கூறலாம். அந்த அளவுக்கு சிங்கப்பூர் பல்வேறு தொழில் வாய்ப்புகளைக் கொண்டுள்ளது என்பதை மறுக்க இயலாது.

இருப்பினும் சிங்கப்பூரில் ஒரு வெளிநாட்டவர் தொழில் துவங்குவது எளிதானதா? இல்லையா?எப்படி தங்களின் தொழிலை சிங்கப்பூரில் பதிவு செய்ய வேண்டும் போன்ற சந்தேகங்கள் மற்றும் கேள்விகள் தொழில் முனைவோர்களுக்கு இருக்கவே செய்கிறது. அதற்கான விடைகளை இப்பதிவில் காண்போம்

ஒவ்வொரு சிறிய தகவலும் அவர்கள் தங்கள் தொழிலில் விரைந்து முடிவு எடுக்கவும், முன்னேறவும் வாய்ப்பு அளித்திடும். இருப்பினும் முதன் முறையாக தொழில் துவங்குபவர்கள் நம்பகமான பதிவு செய்யப்பட்ட முகவரை அணுகுவது நன்மை அளிக்கும்

சிங்கப்பூரில் ஒரு நிறுவனத்தை (Company) வெளிநாட்டினர் எவ்வாறு பதிவு செய்யலாம்?

ஒரு உள்ளூர் சிங்கப்பூர் குடிமகனைப் போலவே, வெளிநாட்டவரும் ஒரு நிறுவனத்தை சிங்கப்பூரில் எளிதாக  பதிவு செய்வதோடு அதன் 100% பங்குகளையும் எந்த சிரமமும் இல்லாமல் சொந்தமாக வைத்திருக்கவும் செய்யலாம்.

பொதுவாக, 18 வயதுக்கு மேற்பட்ட எவரும் சிங்கப்பூரில் ஒரு கம்பெனி தொடங்க இயலும். ஆனால் அவர் எந்தவொரு சட்டப்பூர்வ குற்றத்திற்காகவும் அல்லது வங்கிகளில் கடன் வாங்கி திருப்பி செலுத்தாததற்காக தண்டிக்கப்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

சிங்கப்பூர் குடிமக்களைப் போன்றே, அதன் நிரந்தர குடியிருப்பாளர்கள் (PR), மற்றும் Employment Pass, EntrePass, Dependents Pass வைத்திருப்பவர்கள், ஒரு company ஐப் பதிவு செய்து அதன் பங்குதாரர்களாக இருக்க முடியும்.

ஆனால் ஒரு கம்பெனி அமைக்கும் போது, அவர்கள் சிங்கப்பூரில் தங்கி இருப்பது அவசியம் ஆகும்.

சிங்கப்பூரில் புதிய வணிகத்தை அமைப்பதற்கான முக்கிய தேவைகள்

சிங்கப்பூர் குடிமக்கள் தங்கள் கம்பெனியை பதிவிட BizFile+ போர்ட்டலில் சுய-பதிவு செய்யும் போது அவர்களே இருக்குனராக பதிவிடலாம். இருப்பினும் அவர்கள் ஒரு உள்ளூர்காரரை அவர்கள் கம்பெனியின் இயக்குனராக நியமிக்க வேண்டும். இதற்கு அவர் 18 வயது நிரம்பியவராகவும், எந்த வங்கியிலும் கடனை திருப்பி செலுத்தாத குற்ற பின்னணி இல்லாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வெளிநாட்டவர்கள் என்ன செய்ய வேண்டும்?

  • வெளிநாட்டவர்கள் தங்கள் கம்பெனியை துவங்க கண்டிப்பாக முதலில் ஓர் உள்ளூர் இயக்குநரை நியமிக்க வேண்டும்
  • வெளிநாட்டவர்கள் சிங்கப்பூரில் தங்கள் நிறுவனத்தை சுயமாகப் பதிவு செய்ய முடியாது என்பதால், தங்கள் நிறுவனத்தைப் பதிவு செய்ய பதிவு செய்யப்பட்ட ஏஜெண்டை அணுக வேண்டும்.

உள்ளூர் இயக்குநரை நியமிப்பதில் உள்ள விருப்பங்கள் (options)

  • Option 1: ஒரு சிங்கப்பூர், நிரந்தர வசிப்பாளர் (PR) அல்லது EntrePass வைத்திருப்பவரை உள்ளூர் இயக்குநராகப் பணியமர்த்தலாம்.
  • Option 2: உங்கள் புதிய நிறுவனத்திற்கு, நீங்கள் பரிந்துரைக்கும் ஒருவரை (nominee) இயக்குநராக நியமிக்கலாம்
  • Option 3: முதலில் EntrePass க்கு விண்ணப்பித்து அதனை பெற்று நீங்களே புதிதாக கம்பெனி துவங்கலாம்.

உங்கள் வணிக நடவடிக்கைகளில் இருந்து நியமன இயக்குனரை விலக்கி வைக்க, அவருடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்.

நிறுவனம் மற்றும் அதன் கார்ப்பரேட் வங்கிக் கணக்கின் மீது உங்களுக்கு மட்டுமே முழு உரிமை இருக்குமாறும் பார்த்துக் கொள்ள வேண்டும்

எம்ப்ளாய்மென்ட் பாஸ் வைத்திருப்பவர் சிங்கப்பூரில் தனது கம்பெனியைப் பதிவு செய்ய முடியுமா?

நிச்சயமாக செய்ய முடியும். அதன் 100% பங்குகளையும் அவர்கள் சொந்தமாக வைத்திருக்க முடியும்.

ஆனால் அவர்கள் மற்றொரு Employer வழங்கும் Employment Pass கீழ் பணிபுரிவதால், அவர்கள் துவங்கும் கம்பெனிக்கு உள்ளூர் இயக்குனராக இருக்க முடியாது. எனவே அவர்கள் கம்பெனி துவங்கும் போது ஒருவரை தங்களது கம்பெனி இயக்குனராக பணியமர்த்த வேண்டும்

சிங்கப்பூரில் ஒரு கம்பெனி அமைப்பதற்கு எவ்வளவு செலவாகும்?

உண்மையில், சிங்கப்பூர் குடியுரிமை பெறாதவர்களோ அல்லது வெளிநாட்டவர்களோ சிங்கப்பூரில் தங்கள் நிறுவனத்தை சுயமாகப் பதிவு செய்ய முடியாது. அவர்கள் அதற்கு பதிவு செய்யப்பட்ட முகவரை (Agent) நியமிக்க வேண்டும்.

இதற்கான ACRA ( Accounting and Corporate Regulatory Authority) கட்டணம்:

ACRA என்பது கணக்கியல் மற்றும் நிறுவன ஒழுங்குமுறை ஆணையம் (ACRA) எனப்படுகிறது. இது சிங்கப்பூரின் ஒரு கம்பெனி பதிவாளர் ஆகும். இது சிங்கப்பூரின் பதிவு செய்யப்படும் கம்பெனிகளின் செயல்முறையை மேற்பார்வை செய்கிறது.

  1. கம்பெனியின் பெயர் விண்ணப்பத்திற்கு S$15 செலவாகக் கூடும். இது 60 நாட்களுக்கு முன்பதிவு செய்யப்படும், மேலும் அதை நீட்டிக்க கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.
  2. கம்பெனியின் பதிவு கட்டணம் S$300 ஆகும்
  3. நீங்கள் ACRA இல் வெற்றிகரமாக பதிவு செய்த பிறகு, ACRA தங்களுக்கு ஒரு Incorporate Email அனுப்புகிறது. சிங்கப்பூரில், இது Incororation Certificate ஆக செயல்படுகிறது. தகுந்த கட்டணம் செலுத்தி அதன் பிரதியைப் பெற்றுக் கொள்ளலாம்.

வெளிநாட்டு தனிநபர்கள் சிங்கப்பூரில் எப்படி தங்கள் கம்பெனியைப் பதிவு செய்யலாம்?

சிங்கப்பூரில் கம்பெனி அமைக்க, நீங்கள் 2 விஷயங்கள் மட்டுமே செய்ய வேண்டும். அவை
  • முதலில் உங்கள் கம்பெனியின் பெயருக்கு ACRA Approval வாங்க வேண்டும். இதற்கு உங்கள் கம்பெனி பெயரை தனித்துவமானதாகவும், வேறு எந்த கம்பெனியின் சாயலைப் பின்பற்றி இல்லாமலும் பார்த்து கொள்வது அவசியமாகும்.
  • பின்பு உங்கள் விண்ணப்பத்தை ACRA விடம் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் சரியான வணிக அமைப்பைத் தேர்ந்தெடுப்பது சிங்கப்பூரில் வெற்றிகரமான கம்பெனி பதிவுக்கான திறவுகோலாகும். ஒருவேளை சரியாக தேர்வு செய்யாவிடில் அது உங்கள் வணிகத்தின் வரிவிதிப்பைப் பாதிக்கலாம்.

நீங்கள் உங்கள் கம்பெனியைப் பதிவு செய்திட

  1. முதலில் உங்கள் வணிகத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வணிக அமைப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  2. அடுத்ததாக உங்கள் நிறுவனத்தை ACRA உடன் பதிவு செய்ய வேண்டும்.
  3. இறுதியாக கார்ப்பரேட் வங்கிக் கணக்கைத் திறக்க வேண்டும்

ஒரு வெளிநாட்டு நபர் சிங்கப்பூரில் பின்வரும் வகையான வணிக அமைப்புகளில் தங்களின் கம்பெனியை பதிவு செய்யலாம்:

  • பிரைவேட் லிமிடெட் நிறுவனம் (Private Limited Company)
  • ஒரே உரிமையாளர் ( Sole Proprietorship)
  • வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மை (Limited Liability Partnership)

Private Limited Company (Pte Ltd)

  • இந்த வணிக முறையே சிங்கப்பூரில் அதிகம் விரும்பப்படுகிறது.
  • இதில் 1-50 பங்குதாரர்கள் (உரிமையாளர்கள்) இருக்கலாம்.
  • பொதுவாக சிங்கப்பூரில் வசிக்கும் ஒரு உள்ளூர் இயக்குனராவது இதற்கு தேவை.
  • Pte Ltd அதன் பங்குதாரர்களின் பொறுப்பை அவர்கள் அதன் பங்குகளில் முதலீடு செய்த தொகைக்கு ஏற்ப வரம்பிடுகிறது.
  • இது கார்பரேட் வரி (0%-17%) செலுத்த வேண்டும்.

Sole Proprietorship

  • Sole Proprietorship என்பது ஒரு ஒருங்கிணைந்த கம்பெனியாக கருத இயலாது. ஆனால் இது ஒரு வணிக நிறுவனம் ஆகும்
  • அதிக ரிஸ்க் இல்லாத வணிகங்களுக்கு மட்டுமே இந்த வணிக முறை பரிந்துரைக்கப்படுகிறது.
  • அதன் கடன்கள் மற்றும் இழப்புகளுக்கு உரிமையாளருக்கு வரம்பற்ற பொறுப்பு உள்ளது
  • ஒரு தனி உரிமையாளரின் வருமானம் இதன் வருமானமாகக் கருதப்படுகிறது.
  • உரிமையாளர் தனிப்பட்ட வருமான வரி (0%-22%) செலுத்த வேண்டும்.

Limited Liability Partnership (LLP)

  • சிங்கப்பூரின் கம்பெனி விதிப்படி, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் இணைந்து கூட்டாக வணிகம் செய்வதற்கு பதிவு செய்ய முடியும்.
  • இதன் வணிக இழப்பிற்கு அனைவரும் பொறுப்பேற்க வேண்டி வரலாம்.
  • கூட்டாளர்கள் தங்கள் வருமானத்தின் மீது தனிப்பட்ட வருமான வரி (0%-22%) செலுத்த வேண்டும்.

சிங்கப்பூரில் உங்கள் கம்பெனியைப் பதிவு செய்ய எவ்வளவு நேரம் ஆகும்?

  • வழக்கமாக, சிங்கப்பூர் ஒரு கம்பெனியைப் பதிவு செய்ய ACRA, 1-3 நாட்கள் எடுத்துக் கொள்ளும்
  • ஒருவேளை உங்கள் விண்ணப்பம் அமைச்சருக்கு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டால், ஒப்புதல் கிடைக்க 2 மாதங்கள் வரை கூட ஆகலாம்.
  • நீங்கள் மற்றும் பிற பங்குதாரர்கள் மற்றும் இயக்குநர்கள் தேவையான ஆவணங்களை உங்கள் நிறுவனத்தின் செயலாளரிடம் எவ்வளவு விரைவாகச் சமர்ப்பிக்கிறீர்கள் என்பதையும் இது சார்ந்துள்ளது.

சிங்கப்பூரில் கம்பெனி துவங்கிட உங்களிடம் இருக்க வேண்டிய முக்கியமான தேவைகள் என்னென்ன?

  1. கம்பெனி பெயர்: இது ACRA மூலமாக அங்கீகரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
  2. குறைந்தபட்சம் ஒரு இயக்குனர்: இவர் சிங்கப்பூர் வசிப்பாளர் அல்லது EntrePass வைத்திருப்பவராக இருத்தல் வேண்டும்.
  3. குறைந்தது 1 – 50 பங்குதாரர்கள்: குறைந்தபட்சம் 1 மற்றும் அதிகபட்சம் 50 பங்குதாரர்கள்
  4. உள்ளூர் அலுவலக முகவரி : இது பதிவு செய்யப்பட்டு கம்பெனியின் உள்ளூர் முகவரியாக இருக்க வேண்டும்.
  5. நிறுவனச் செயலர்: உங்கள் நிறுவனம் சிங்கப்பூரில் உருவாக்கப்பட்ட நாளிலிருந்து ஆறு மாதங்களுக்குள் குறைந்தபட்சம் ஒரு நிறுவனச் செயலரையாவது நியமிக்க வேண்டும்.
  6. ஆரம்ப மூலதனம்: ஆரம்ப செலுத்தப்பட்ட மூலதனமாக குறைந்தபட்சம் S$1 இருக்க வேண்டும்.
  7. குறைந்தபட்சம் 1 ஆடிட்டர்: உங்கள் நிறுவனத்திற்கு தணிக்கைத் தேவைகளில் இருந்து விலக்கு அளிக்கப்படவில்லை எனில், உங்கள் வணிகப் பதிவு செய்யப்பட்ட சிங்கப்பூர் தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள் குறைந்தபட்சம் ஒரு தணிக்கையாளரையாவது நியமிக்க வேண்டும்.

மேற்கூறிய தகவல்கள் மூலமாக சிங்கப்பூர் அரசாங்கமானது எந்த அளவுக்கு தொழில் முனைவோர்களுக்கு சாதகமாக உள்ளது என்பதை நன்கு அறியலாம். மேலும் சிங்கப்பூரில் தொழில் துவங்க விருப்பம் உள்ளவர்கள் மேலே கூறிய தகவல்களை அறிந்து செயல்படுவதன் மூலமாக தொழில் துவங்குவதில் உள்ள சிரமங்கள் கடந்து எளிதாக வெற்றிவாகை சூடலாம்.

Related posts