TamilSaaga

“சிங்கப்பூரில் FICA சட்டம், சாதாரண வெளிநாட்டுத் தொடர்புகளை பாதிக்காது” : அமைச்சர் விளக்கம்

சிங்கப்பூரில் கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட வெளிநாட்டு தலையீடுகள் தொடர்பான FICA சட்ட முன்வரைவு அக்டோபர் 4 அன்று நாடாளுமன்றத்தில் இரண்டாம் கட்ட விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. கடந்த ஒரு மாதமாக பல்வேறு வித சந்தேகங்களையும், விவாதங்களையும் ஏற்படுத்தியிருந்த இந்த சட்டம் குறித்து மேலும் விளக்கங்களும் ஆய்வுகளும் தளர்வுகளும் தேவை என எதிர்க் கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் வலியுறுத்தி வந்த நிலையில், அது குறித்த விளக்கங்களையும், சட்டத்தின் முக்கிய தரவுகளையும், நாடாளுமன்றத்தில் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர் திரு . சண்முகம் அவர்கள் தெளிவுபடுத்தினார். அவரது விளக்கத்தின் முக்கிய கூறுகள் இங்கு…

முன்மொழியப்பட்டு இருக்கிற FICA சட்டமானது,எதிர்க்கட்சியினர், கல்வியாளர்கள், நிபுணர்கள் மத்தியில் அதனுடைய எல்லைகள் மற்றும் தரவுகள் குறித்த பல்வேறு குழப்பங்களையும், கேள்விகளையும் எழுப்பி இருக்கிறது.

பொதுவாக இந்த FICA சட்டமானது வெளிநாட்டினர் உடனான சாதாரண தொடர்புகளுக்கு எந்தவிதத்திலும் இடையூறுகளை உண்டாகாது. சிங்கப்பூர் தனது வெற்றிக்கும் வளர்ச்சிக்கும் அதன் திறந்த தன்மையையே ஆதாரமாகக் கொண்டு இருக்கிறது. அதில் பாதிப்பு ஏற்படுத்த விளைகிற அல்லது அந்த வெளிப்படைத் தன்மையை நிறுத்த நினைக்கிற எந்த அரசும் ஆட்சி செலுத்த முடியாது .

அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வெளிநாட்டு தலையீடுகள் குறித்த சட்டங்களோடு ஒப்பிடும்போது சிங்கப்பூரில் வெளிநாட்டு தலையீடுகள் குறித்த சட்டம் மிக மிக சாதாரணமான, மிக மிக குறுகிய ஒன்று. இது வரையறுக்கப்பட்ட, நியமிக்கப்பட்ட, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நபர்கள் மற்றும் சில செயல்பாடுகளை மட்டுமே மையப்படுத்துகிறது.

அடிப்படையில் பார்க்கும் பொழுது சிங்கப்பூரர்களுக்கு வெளிநாட்டினரோடு உள்ள சாதாரண தொடர்புகள், வியாபார இணைப்புகள், இதற்குள் உள்ளடங்காது. அதே சமயம் ஒரு வெளிநாட்டு நபர் அல்லது அமைப்புடன் இருக்கிற தொடர்பு, அரசு விரோத கொள்கைகளை பரப்புவதற்கும், சிங்கப்பூருக்கு சேதம் ஏற்படுத்துவதற்கும் காரணமாக இருக்கும் பொழுது அரசாங்கம் தலையிட்டு அதை நிறுத்த வேண்டியது தேவையாகிறது.

இந்த சட்ட வரைவு ஏதோ ஒரு மாதத்திற்கு முன்னதாக முன்மொழியப்பட்டது அல்ல. 2018 லிருந்தே இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு சான்றுகள் பெறப்பட்டிருக்கின்றன .

சிங்கப்பூரின் தேசிய அடையாளத்தையும் தாண்டிய, மிகப்பெரிய அடையாளம் ஒன்று உருவாக்கப்பட முயற்சிகள் நடக்கிறது. இது உண்மையிலேயே நாம் சந்திக்கக் கூடிய ஒரு மிகப்பெரிய சவால் என்று நான் கருதுகிறேன். நாடாளுமன்றத்தில் பல உறுப்பினர்களுக்கு அதைப் பற்றிய தெளிவு இன்னும் ஏற்படவில்லை. எனவே தான் அவைகளை எதிர் கொள்வதற்கு தேவையான சட்ட வரைவுகள் அவசியமாகின்றன.

இணைய ரீதியிலான எதிர்ப்பு பிரச்சாரங்களை மேற்கொள்வது, உலகளாவிய தளங்களை பயன்படுத்தி வெளிநாடுகளில் இருந்து தேவையற்ற எதிர்ப்புகளை உருவாக்குவது, போன்றவைகளை எதிர்கொள்ள தேவையான சட்டத்தின் புதுப்பிக்கப்பட்ட வடிவமே FICA என்று கருதவேண்டும்.

இவ்வாறு சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர் சண்முகம் அவர்கள் விளக்கினார். இந்த சட்டம் குறித்த இன்னும் பல உள் கூறுகளை உள்துறை அமைச்சர்கள், திரு. பைசல் இப்ராஹிம் மற்றும் திரு. டெஸ்மாண்ட் டான் ஆகியோர் விளக்கிக் கூறினர். அதன் சில முக்கிய பகுதிகள்…

இந்த சட்டத்தில் குறிப்பிடப்படுகின்ற மின்னணு தகவல் தொடர்பு செயல்பாடுகள் என்பது – தகவல் பரிமாற்றங்கள் அல்லது செய்திகளை பரப்புவது, குறிப்பாக SMS,MMS,சமூக ஊடக தொடர்பு, அதற்கு ஒத்த மின்னணு சேவை, இணையவழி சேவை, ஆகியவற்றின் வழி வழியாக சிங்கப்பூருக்கு எதிரான தகவல்களை பரப்புவது போன்றவை குறிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் இந்த சட்டத்தின் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன. அதன் வழியாக இதுபோன்ற செய்திகள் பரப்பப்படும் முன்னதாகவோ, அல்லது பரப்பப்பட்ட உடனோ நடவடிக்கைகள் எடுக்கப்படும். அந்த நடவடிக்கைகளுக்கு காவல்துறையினருடன் சேர்ந்து சிங்கப்பூர் ஆயுதப் படையும் இணைந்து செயல்படும்.

இந்த சட்டத்தின் கீழ் முதல் குற்றம் என்று கருதப்படுவதற்கு மூன்று கூறுகள் வரையறுக்கப்படுகின்றன.

முதலாவது இந்த குறிப்பிட்ட நபர் ஒரு குறிப்பிட்ட வெளிநாட்டு கொள்கை அல்லது வெளிநாட்டு நபர் சார்பாக செயல்பட்டு மின்னணு தொலைத்தொடர்பு செயல்பாடுகளை மேற்கொண்டிருக்க வேண்டும்.

இரண்டாவது மறைவான ஏமாற்றக் கூடிய வரையில் மக்களிடம் பரப்புவது.

மூன்றாவது இது நாட்டிற்கு எதிரானது என்று அறிந்தே செய்வது. இந்த கூறுகளின் அடிப்படையில் முதல் குற்றம் வரையறுக்கப்படுகிறது

அதே சமயம் இந்த சட்டம் சிங்கப்பூரரும் , வெளி நாட்டினரும்,தங்களது கருத்துக்களை, விமர்சனங்களை வெளிப்படுத்துவதற்கு எதிராக இருக்காது. உதாரணமாக வெளிநாட்டு பத்திரிக்கைகள் வெளியிடுகின்ற கட்டுரைகள் போன்றவை குற்றமாகாது. ஆனால் அதே சமயம் வெளிநாட்டு அரசியல் ஆய்வாளர்களும், அல்லது அரசியல் விமர்சகர்களும் உள்ளூரின் சமூக வலைதளங்களை பயன்படுத்தி, சிங்கப்பூரர்களை தொடர்ந்து மடைமாற்றம் செய்ய கூடிய, அரசுக்கு விரோதமான கருத்துக்களை பரப்பி வந்தால் அது கவனத்தில் கொள்ளப்படும்.

மின்னணு ஊடக பிரசாரங்கள் என்பதற்கும் டாக்டர் ஃபைசல் ஒரு உதாரணம் தருகிறார். முதலில் சாதாரண நகைச்சுவையான பதிவுகள், சில விலங்குகளின் காணொளிகள் போன்ற பொதுவான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி அதிக அளவிலான பயனர்களை சேர்ப்பது. அப்படி அதிக எண்ணிக்கையிலான பயனர்கள் சேர்ந்த பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் விரோத, அரசு விரோத, சிங்கப்பூருக்கு எதிரான கருத்துக்களை பதிவு செய்வது . அதிலும் குறிப்பாக தேர்தல் சமயங்களில், அல்லது நாட்டின் ஒரு அவசரநிலை நிலவும் பொழுது, இத்தகைய சமூக வலைதள கணக்குகளை பயன்படுத்தி நாட்டிற்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபடுவது இந்த சட்டத்தின் மூலம் முற்றிலுமாக தடுக்கப்படும்.

சட்டத்தில் குறிப்பிடப்படும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நபர்கள், மற்றும் அவர்களின் பங்கு என்ன ? என்பது குறித்தும் திரு. டான் விளக்கம் அளித்தார். அவரது உரையில் இருந்து ….

இந்த சட்டத்தின் பின்னணியில் ‘அரசியல் நன்கொடைகள்’ சட்டத்தில் பெரிய அளவிலான மாற்றங்கள் எதுவும் செய்யப்படாது. புதிதாக ஏதாவது ஒன்று அறிமுகப்படுத்தப்படும் போது எப்பவுமே எப்பொழுதுமே ஒரு இடைவெளி ஏற்படுவது சாதாரணமானது. ஆஸ்திரேலிய அமெரிக்க சட்டங்களோடு ஒப்பிடும்போது சிங்கப்பூரின் வெளிநாட்டு தலையீடுகள் சட்டம் எவ்வளவு சாதாரணமானது என்பது புரியவரும் .

இந்த சட்ட மசோதாவில் குறிப்பிடப்பட்டு இருக்கிற அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நபர்கள் என்பவர்கள் – அரசியல் கட்சிகள், அரசியல் அலுவலகம் வைத்திருப்பவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சபை தலைவர், எதிர்க்கட்சித் தலைவர், தேர்தல் வேட்பாளர், மற்றும் தேர்தல் முகவர்கள் ஆகியோர் ஆவர்.

திறமையான அதிகார அமைப்பு அல்லது அமைச்சரால் நியமிக்கப்பட்ட, உள்துறை அமைச்சகத்தின் ஒரு அரசு ஊழியர், அல்லது மற்ற தனி நபர்களையும் நிறுவனங்களையும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக இணைக்கவும் முடியும்.

அதற்கு சில நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். அதாவது அவர்கள் வெளிநாட்டு அரசியல் அல்லது சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்க வேண்டும் அல்லது அவர்களின் செயல்பாடுகள் ஓரளவு அரசியல் முடிவுகளை நோக்கியதாக இருக்க வேண்டும். இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதாக இருந்தால் மேற்குறிப்பிட்டது போல அவர்களும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக கருதப்படுவார்கள்.

அதேபோல வெளிநாடுகளின் தலையீட்டின் அபாயத்தில் இருக்கக்கூடிய தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள், அரசுக்கு சிங்கப்பூருக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அபாயங்களை சந்திக்கும் வாய்ப்பு இருப்பதால் அவைகளையும் கவனத்தில் வைத்திருப்பது முக்கியம்.

இந்த சட்டமானது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த கட்சிகளுக்கு நன்கொடைகள் வழங்குதல், தன்னார்வலர்கள் சேர்ப்பு ,மற்றவர்களுடனான இணைந்த செயல்பாடுகள் மற்றும் தலைமை, உறுப்பினரை ஏற்றுக்கொள்வது போன்றவைகளுக்கான புதிய தேவைகளையும் வரையறை செய்கிறது.

மேலும் அனைத்து அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த கட்சிகளும் 10,000 சிங்கப்பூர் டாலர்கள் அல்லது அதற்கு அதிகமான நன்கொடைகளை பெற்றால் அவைகளையும், குறிப்பிட்ட நபரிடம் இருந்து குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து 10,000 சிங்கப்பூர் டாலர்கள் அதற்கு குறைவான தொகையை நன்கொடையாக பெற்றாலும் அவைகளையும் குறிப்பிட்ட ஆணையத்திற்கு வெளிப்படுத்த வேண்டும், என்றும் திரு.டான் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற இன்னும் நுணுக்கமான இந்த சட்டத்தின் உள் கூறுகளை உள்துறை அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டு விளக்கம் அளித்துள்ளனர். அவைகளை உற்று நோக்கும்பொழுது ஆளும் அரசு வெளிநாட்டு தலையீடுகள் தொடர்பான சட்டத்தை நிறைவேற்றுவதில் மிகவும் முனைப்போடு இருப்பதையும் , அது குறித்த எல்லா விவாதங்கள், கேள்விகள் போன்றவற்றுக்கும் தயாராக இருப்பதும் தெளிவாக தெரிகிறது.

Related posts