சிங்கப்பூரில் கடந்த செப்டம்பர் 6ம் தேதி முதல் அரசாங்கத்தின் ஆலோசனையைப் பின்பற்றி, பொதுமக்கள் சமூகக் கூட்டங்களைக் குறைப்பதற்காக பல பொதுவெளி நடவடிக்கைகளை தவிர்த்து வருகின்றனர். இதனையடுத்து உணவகங்கள் கடந்த இரண்டு வாரங்களில் அவர்களுடைய வணிகத்தில் பெரிய அளவிலான சரிவைக் கண்டுள்ளது.
குறிப்பாக வார நாட்களில் வீட்டிலிருந்து வேலை செய்யும் தொழிலாளர்களால் சிங்கப்பூரின் மத்திய வணிக மாவட்டத்தில் (CBD) உணவு மற்றும் பானம் விற்பனை நிலையங்களில் இந்த தாக்கம் அதிகமாக உணரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல CBDக்கு வெளியில் உள்ளவர்கள், வார இறுதி நாட்களில் அதிக குடும்பங்கள் தொற்று பரவலால் வீட்டிலேயே தங்கியிருப்பதால் இந்த வியாபார வீழ்ச்சி பெரியதாக இருந்தது.
சிங்கப்பூரின் தி கிரிஸ்டல் ஜேட் குழுமத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், வணிகம் அதன் பல்வேறு பிராண்டுகளில் சுமார் 15 சதவிகிதம் குறைந்துவிட்டது. முன்பதிவு செய்து உணவு தயாரிக்கும் சில மேல்நிலை உணவகங்களில் உணவு உண்ண முன்பதிவு செய்திருந்த நிலையில் அவை ரத்து செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். தி கிரிஸ்டல் ஜேட் குழுமத்தின் கீழ் இங்கு சுமார் 20 சீன உணவகங்கள் இயங்குகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
நாட்டில் தற்போது தொற்றின் அளவு கிடுகிடுவென உயர்ந்து வருகின்றது, வல்லுநர்கள் கணித்ததைப் போலவே தற்போது தினசரி தொற்று 1000ஐ கடந்து பதிவாகி வருகின்றது. ஆனால் பொருளாதார நிலைமையை முன்னிட்டு கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்க அரசு இன்னும் முடிவுகளை எடுக்கவில்லை என்பது நினைவுகூரத்தக்கது.