சிங்கப்பூரில் ஹெராயின் என்ற போதைப்பொருள் விற்பனையில் கடத்தல்காரர்களுக்கு இடைத்தரகராக செயல்பட்டதற்காக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலேசியர் ஒருவருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிஷோர் குமார் என்ற அந்த 41 வயது நபர் கடந்த 2016ம் ஆண்டு சிங்கப்பூருக்குள் மோட்டார் சைக்கிள் மூலம் 900 கிராம் பவுடர் போன்ற பொருளை எடுத்து சென்றதாகவும், அதை சோதனை செய்து பார்த்தபோது அதில் 36.5 கிராம் ஹெராயின் போதை பொருள் இருந்ததும் கண்டறியப்பட்டது.
நமது சிங்கப்பூரை பொறுத்தவரை கடத்தப்பட்ட போதைப்பொருள் அளவு 15 கிராமுக்கு மேல் இருந்தால் மரண தண்டனை விதிக்க சட்டம் வழிவகை செய்கிறது என்பது நினைவுகூரத்தக்கது. அதே போல கிஷோரிடம் இருந்து இந்த போதை பொருட்களை பெற்றுக்கொண்ட சீன வம்சாவளியை சேர்ந்த சிங்கப்பூரர் Pung Ah Kiang என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 4) வெளியிடப்பட்ட எழுத்துப்பூர்வ ஆதாரத்தில், கிஷோர் மற்றும் பங் ஆகிய இருவருக்குமே அந்த மூட்டையில் ஹெராயின் இருப்பது தெரியும் என்று உயர் நீதிமன்ற நீதிபதி ஆட்ரி லிம் தெரிவித்தார். டெலிவரி செய்யப்பட வேண்டிய பொருட்கள் “கல்லு” என்று அழைக்கப்பட்டதாகவும், ஆனால் அது ஹெராயினை தான் குறிக்கின்றது என்று கிஷோருக்கு தெரியும் என்று நீதிபதி கூறினார். மேலும் பையில் என்ன இருக்கிறது என்று தனக்குத் தெரியாது என்றும், அதைத் தற்காலிகமாகத் தன் மைத்துனருக்காக வைத்திருக்கிறேன் என்றும் “பங்” கூறியதை நீதிபதி லிம் நிராகரித்தார்.
போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை சீர்குலைப்பதில் மத்திய போதைப்பொருள் பணியகத்திற்கு (CNB) கணிசமான அளவில் உதவியதாக அரசு தரப்பு சான்றளிக்கப்பட்டதால், அவர் புங்கிற்கு ஆயுள் தண்டனை விதித்தார். அதே நேரத்தில் “கிஷோருக்கு ஆதாரபூர்வமான உதவிக்கான சான்றிதழை அரசு தரப்பு வழங்காததால். நான் அவருக்கு மரண தண்டனையை நிறைவேற்றினேன்” என்று நீதிபதி கூறினார்.