TamilSaaga

செப்டம்பர் முதல் நாளே “அதிரடி”… புதிய வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுப்பதில் கட்டுப்பாடு – சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு ஒரே அறிக்கையில் “செக்” வைத்த அரசு!

SINGAPORE: பாதுகாப்பற்ற சூழல் அல்லது மோசமான risk controls கொண்ட நிறுவனங்கள் புதிய வெளிநாட்டுப் பணியாளர்களை பணியமர்த்துவதில் இருந்து 3 மாதத்திற்கு தடை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இந்த 2022ல் மட்டும், பணியிட விபத்தில் சிக்கி, இன்றைய தேதி (செப்.1) வரை 36 ஊழியர்கள் பலியாகியுள்ளனர்.

குறிப்பாக, கடந்த 2 மாதங்களில், இரண்டு தமிழக ஊழியர்கள் உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார்கள். அதில், ராஜேந்திரன் எனும் ஊழியரும் அடக்கம். மூன்று பெண் குழந்தைகளுக்கு தந்தையான ராஜேந்திரனின் (வயது 32) மரணம் அவரது ஒட்டுமொத்த குடும்பத்தையும் உலுக்கிவிட்டது.

இதையடுத்து, நமது “தமிழ் சாகா சிங்கப்பூர்” தளத்தின் முன்னெடுப்பு காரணமாக, அவரது குடும்பத்துக்கு சிங்கப்பூரில் பணிபுரியும் ஊழியர்கள் மூலம் ரூ.18,000 வரை நிதியுதவி கிடைத்தது.

இந்த சூழலில், சமீபத்திய நாடாளுமன்றத்தில் பேசிய, சிங்கப்பூர் மனிதவளத்துறையின் மூத்த அமைச்சர் Zaqy Mohamad, பணியிடத்தில் தகுந்த பாதுகாப்பின்றி ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டாலோ, விபத்து ஏற்பட்டாலோ, அந்த குறிப்பிட்ட நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் இயக்குனர்கள் மீது வழக்கு தொடர முடியும் என்று தெரிவித்திருந்தார். சிங்கை பாராளுமன்றத்தில் பணியிட விபத்து குறித்து கேள்வி எழுப்பிய எம்.பி Melvin Yong-ன் கேள்விக்கு பதிலாக அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இந்நிலையில், மற்றொரு மிக முக்கிய அறிவிப்பை சிங்கப்பூர் மனித வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, பாதுகாப்பற்ற சூழல் அல்லது மோசமான risk controls கொண்ட சிங்கை நிறுவனங்கள் புதிய வெளிநாட்டுப் பணியாளர்களை பணியமர்த்துவதில் இருந்து 3 மாதத்திற்கு தடை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது கட்டுமானம், உற்பத்தி, கடல், செயல்முறை அல்லது போக்குவரத்து மற்றும் சேமிப்புத் தொழில்களில் உள்ள அனைத்து நிறுவனங்களையும், லாரிகள் மற்றும் ஃபோர்க்லிஃப்ட் போன்ற கனரக அல்லது தொழில்துறை வாகனங்களைப் பயன்படுத்தும் பிற தொழில்களில் உள்ள நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

மேலும் படிக்க – சிங்கப்பூர் ட்ரான்சிட் பேருந்து மீது மோதியதில்.. அப்பளம் போல் நொறுங்கிய கார் – சம்பவ இடத்திலேயே டிரைவர் பலி – ஒரு நொடியில் முடிந்த வாழ்க்கை!

செப்டம்பர் 1 மற்றும் 15 க்கு இடையில், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தங்களின் பாதுகாப்பு நடைமுறைகளை மறுபரிசீலனை செய்வதற்கும், பாதுகாப்பு காலக்கெடு நடவடிக்கைகளின் பட்டியலை முடிக்கவும் தற்காலிகமாக நிறுவன செயல்பாடுகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று சிங்கை மனிதவளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி, நிறுவனத்தின் உயர் நிர்வாக அதிகாரிகள், தனிப்பட்ட முறையில் பணியிடத்துக்கு சென்று, பாதுகாப்பு அபாயங்கள் மற்றும் பணியிடத்தில் நிலவும் குறைகள் குறித்த புகாரை சென்று கேட்டறிய வேண்டும் என்றும் MOM தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கைகள் ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்றும், இது ஆய்வுகளின் போது MOM அதிகாரிகளால் சரிபார்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் safety time-out நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிட்டால், ஒரு மாதம் முதல் 3 மாதத்திற்கு புதிய Pass Holders-களை பணியமர்த்த நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts