அடுத்த மாதம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் நெடுந்தொலைவு நீச்சல் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார் சிங்கப்பூரை சேர்ந்த சாண்டல் லியூ. அந்த பிரிவு போட்டியில் பங்கு பெறும் முதல் சிங்கப்பூர் குடிமக்கள் என்ற பெருமையை பெற்றுள்ளார் சாண்டல் லியூ.
போர்ச்சுகல் நாட்டில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளுக்கான தகுதி சுற்று போட்டியில் சாண்டல் 29ஆம் இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 10 கிலோ மீட்டர் தூரத்தை அவர் சுமார் 2 மணிநேரம் 12 நிமிடங்களில் நீந்திக் கடந்து உள்ளார்.
22 வயது நிரம்பிய சாண்டல் 2017 ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற தென்கிழக்காசிய போட்டிகளில் திறந்தவெளி நீச்சல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் சிங்கப்பூர் பெண் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். அப்போது அவர் வெள்ளிப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூருக்கு பெருமை தேடித்தந்துள்ள சாண்டல் லியூவுக்கு அமைச்சர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் டோக்கியோவில் நடைபெற உள்ள பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க சிங்கப்பூரர்கள் 6 பேர் தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.