சிங்கப்பூரின் ஹூகாங் அவென்யூ 3ல் உள்ள Built-to-Order (BTO) திட்டப் பணித்தளத்தில் 43 வயதுடைய வெளிநாட்டு தொழிலாளி, தோண்டப்பட்ட குழி ஒன்றில் நின்றுகொண்டிருந்தபோது மேலிருந்து கீழே விழுந்த இரும்புத் தகடு ஒன்றினால் தாக்கப்பட்டு கடந்த சனிக்கிழமை (மார்ச் 12) இறந்துள்ளார். தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸின் கேள்விகளுக்கு பதிலளித்த மனிதவள அமைச்சகம் (MOM) Trench எனப்படும் அந்த பள்ளத்தின் ஓரங்களில் நிறுவப்படவிருந்த இரும்பு தகடுகளில் ஒன்று தான் அந்த சீன நாட்டு ஊழியரின் மீது விழுந்துள்ளது என்று கூறியது.
ஹூகாங் அவென்யூ 3ல் வரவிருக்கும் ஹூகாங் ஆலிவ் BTO திட்டத்தின் தளத்தில் தான் விபத்து நடந்ததாக ST தெரிவித்துள்ளது. சம்பவத்தன்று காயமடைந்த தொழிலாளி டான் டோக் செங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார், ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் அங்கு காலமானார். அந்த வெளிநாட்டு தொழிலாளி சாங் ஹுவா கன்ஸ்ட்ரக்ஷனில் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சம்பவம் நடந்தபோது Trenchக்குள் இருந்த மற்றொரு தொழிலாளி, 56 வயதான சீன நாட்டவர், மேலிருந்து கீழே விழுந்த அந்த இரும்புத் தகட்டை கைகளால் தடுக்க முயன்றபோது அவருக்கும் காயம் ஏற்பட்டது. அவருக்கும் டான் டோக் செங் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
MOM இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகிறது, மேலும் பணியிடத்தில் அனைத்து வகையான வேலைகளையும் நிறுத்துமாறு சாங் ஹுவா கட்டுமான நிறுவனத்திற்கு அறிவுறுத்தியுள்ளது. கடந்த நவம்பர் 2021ல் தொடங்கப்பட்ட இந்த ப்ராஜெக்ட், வரும் 2025ம் ஆண்டின் முதல் காலாண்டில் இந்த திட்டம் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சனிக்கிழமையன்று நடந்த அந்த பயங்கர விபத்து இந்த ஆண்டு நிகழ்ந்த ஐந்தாவது பணியிட மரணமாகும்.
கடந்த 2020ல் 30 இறப்புகள் மற்றும் 2019ல் 39 இறப்புகளுடன் ஒப்பிடுகையில், கடந்த 2021ம் ஆண்டில் அந்த அளவு குறைந்து 37 பணியிட இறப்புகளாக இருந்தது.