சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் (NUS) Cinnamon கல்லூரியை சேர்ந்த 19 வயது மாணவி ஒருவர் வளாகத்தில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Cinnamon கல்லூரியில் வசிப்பவர்களில் பல்கலைக்கழக அறிஞர்கள் திட்ட (USP) மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் சர்வதேச மாணவர்கள் உள்ளனர் என்று தகவல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த இளம் பெண்ணின் மரணம் குறித்து கல்லூரியில் வசிக்கும் மாணவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டதை ஊடகங்கள் வாயிலாக அறியப்பட்டது.
அந்த அறிக்கையில் “அன்புள்ள மாணவர்களே மற்றும் சக ஊழியர்களே,
12 பிப்ரவரி 2022 அன்று காலை Cinnamon கல்லூரியில் வசிக்கும் மாணவி ஒருவர் காலமானதை எண்ணி நாங்கள் மிகவும் வருந்துகிறோம்.
கல்லூரியில் உள்ள உயரமான இடத்தில் இருந்து அந்த மாணவி விழுந்துள்ளார். சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கும் காவல்துறைக்கும் உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டு சிறிது நேரத்தில் அவர்கள் அங்கு வந்தனர். இந்த விவகாரம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் எங்கள் ஆதரவையும், உதவியையும் வழங்குவதற்கு அந்த மாணவியின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் தொடர்பில் இருக்கிறோம்.
இந்த விஷயம் காவல்துறையின் கையில் உள்ளது. இந்த இக்கட்டான நேரத்தில் குடும்பத்தின் தனியுரிமைக்கு மதிப்பளிக்கும் வகையில், சரிபார்க்கப்படாத தகவல்களை ஊகிக்கவோ அல்லது பகிரவோ வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். குறிப்பாக நாம் அனைவரும் படங்களை எடுப்பதையோ அல்லது பகிர்வதையோ தவிர்க்க விரும்புகிறேன். ஊடகங்கள்/பத்திரிகைகள் உங்களை அணுகினால், USP அலுவலகத்தில் உள்ள எங்களை முதலில் தொடர்பு கொள்ளவும்” என்று குறிப்பிட்டுள்ளது.
ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக, பிப்ரவரி 12 அன்று காலை 5:48 மணிக்கு 22 கல்லூரி அவென்யூ கிழக்கில் இயற்கைக்கு மாறான மரணம் குறித்து எச்சரிக்கப்பட்டதாக மதர்ஷிப் மூலம் போலீசார் உறுதிப்படுத்தினர். இறந்த அந்த மாணவி சீனாவின் செங்டுவைச் சேர்ந்த சர்வதேச மாணவி என்பதை அவர்கள் உறுதி செய்தனர். இந்த வழக்கு குறித்து தீவிர விசாரணை நடந்து வருகின்றது.