சிங்கப்பூர்: சிங்கப்பூரின் ஒரே இயற்கை வரலாற்று அரும்பொருளகமான லீ கோங் சியான் இயற்கை வரலாற்று அரும்பொருளகம் தனது பத்தாவது ஆண்டு நிறைவை கொண்டாடி வருகிறது. இதையொட்டி, இந்த ஆண்டு முழுவதும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
2015ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி தேசிய பல்கலைக்கழகத்தின் கீழ் தொடங்கப்பட்ட இந்த அரும்பொருளகம், அரிய விலங்கியல் கண்டுபிடிப்புகளின் களஞ்சியமாகத் திகழ்கிறது. ஆண்டுதோறும் சுமார் 65,000 பார்வையாளர்களை ஈர்க்கும் இந்த அரும்பொருளகத்திற்கு, கடந்த ஆண்டு மட்டும் 88,200 பேர் வருகை தந்துள்ளனர். பத்தாவது ஆண்டு நிறைவு கொண்டாட்டங்களால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மே 28ல் இலவச நுழைவு!
விழாவின் முக்கிய அம்சமாக, எதிர்வரும் மே மாதம் 28ஆம் தேதி பொது வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் முதல் 600 பார்வையாளர்களுக்கு நுழைவுக் கட்டணம் முற்றிலும் இலவசம். மேலும், அன்றைய தினம் வழிகாட்டியின் உதவியுடன் அரும்பொருளகத்தை இலவசமாக சுற்றிப் பார்க்க முடியும். குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வழக்கமாக, சிங்கப்பூரர்களுக்கு $18-ம், வெளிநாட்டினருக்கு $27-ம் நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
புதிய தாவரப் பூச்சி கண்டுபிடிப்பு!
இதனிடையே, லீ கோங் சியான் இயற்கை வரலாற்று அரும்பொருளகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் புதிய வகை தாவரப் பூச்சி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய பூச்சிக்கு ‘கேம்பிலோமா சிங்கப்பூரா’ (Cmapylomma singaporensis) என்று பெயரிடப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆய்வுக் கட்டுரை கடந்த மாதம் 24ஆம் தேதி வெளியிடப்பட்டது. அறிவியல் இதழான ‘ஸுடாக்ஸா’விலும் இந்த கண்டுபிடிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இந்த புதிய கண்டுபிடிப்பு குறித்த தகவல்கள் அரும்பொருளகத்தின் சமூக ஊடகப் பக்கங்களில் ஏப்ரல் 7ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளன.
லீ கோங் சியான் இயற்கை வரலாற்று அரும்பொருளகத்தின் பத்தாவது ஆண்டு நிறைவு கொண்டாட்டங்களும், புதிய பூச்சி கண்டுபிடிப்பும் சிங்கப்பூரின் இயற்கை வரலாற்று ஆய்வுகளுக்கு மேலும் வலு சேர்க்கும் என்று நம்பப்படுகிறது. பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி அரும்பொருளகத்தை பார்வையிடவும், புதிய கண்டுபிடிப்புகளை அறிந்து கொள்ளவும் அழைக்கப்படுகிறார்கள்.