TamilSaaga

சிங்கப்பூரில் தொடங்கியது “Lit-Up” திருவிழா – இம்மாதம் முழுதும் இரவில் ஒளிரும் கட்டிடங்கள்

சிங்கப்பூரில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதத்தில் கலாச்சாரம் மற்றும் வரலாற்றுச் சின்னங்களை சிவப்பு மற்றும் வெள்ளை நிற விளக்குகளால் ஒளிரச் செய்வது வழக்கமான ஒன்றாக இருக்கின்றது. ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி சிங்கப்பூரின்தேசிய தினத்தை முன்னிட்டு பல ஆண்டுகளாக இந்த Lit-Up நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த ஆண்டு சிங்கப்பூரின் 56 வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில், பிராஸ் பாஷா-புகிஸ்ல் உள்ள பல முக்கிய பழமைவாய்ந்த கட்டிடங்கள் நேற்று ஆகஸ்ட் 1ம் தேதி முதல் சிவப்பு மற்றும் வெள்ளை நிற விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் உள்ள விக்டோரியா தியேட்டர், கச்சேரி அரங்கம் மற்றும் தி ஆர்ட்ஸ் ஹவுஸ் போன்ற பெரிய இடங்களில் கடந்த ஆண்டு கவனம் செலுத்தப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு அதைப்போல இல்லாமல் சிங்கப்பூரின் தேசிய வடிவமைப்பு மையம், புகைப்படம் மற்றும் திரைப்பட மையம் மற்றும் ஸ்டாம்போர்ட் கலை மையம் போன்ற குறைந்த அளவில் அறியப்பட்ட இடங்கள் Lit-Up நிகழ்ச்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் 1939ல் திறக்கப்பட்டபோது, மிக உயரமான கட்டிடமாக இருந்த கேத்தேவும் இந்த Lit-Up விழாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இது சிங்கப்பூரின் முதல் குளிரூட்டப்பட்ட சினிமா அரங்கம் மற்றும் அந்த காலகட்டத்தில் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் திரைப்படங்கள் இங்கு திரையிடப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

மத்திய தீயணைப்பு நிலையம், நல்ல மேய்ப்பரின் கதீட்ரல் மற்றும் சிங்கப்பூர் தேசிய அருங்காட்சியகம் உள்ளிட்ட 7 கட்டிடங்கள் இந்த ஆண்டு Lit-Up நிகழ்ச்சியில் சிவப்பு மற்றும் வெள்ளை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நேற்று ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்கி மாதம் முழுவதும் மாலை 7.30 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இந்த விளக்குகள் ஒளிரும்.

Related posts