சிங்கப்பூரின் சிறப்பு வாய்ந்த சாங்கி விமான நிலையம் 1981ல் திறக்கப்பட்டு சேவையை துவங்கிய 6 மாதத்தில் 4.3 மில்லியன் பயணிகளுக்கு சேவையளித்தது. தற்போது 40 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் இந்த விமான நிலையத்தின் நினைவாக போக்குவரத்து அமைச்சர் திரு.ஈஸ்வரன் ஒரு முகநூல் பதிவை வெளியிட்டுள்ளார்.
சுமார் 6 ஆண்டுகளில் கட்டிமுடிக்கப்பட்ட இந்த விமான நிலையம் 1986ல் 10 மில்லியன் பயணிகளுக்கும், 2019ல் ஏறத்தாழ 70 மில்லியன் பயணிகளுக்கும் தனது சேவையை அளித்தது.
கட்டுமான பொறியியலின் சிறந்த சாதனை படைப்பாக பார்க்கப்படும் இந்த சாங்கி விமான நிலையம் ஆகச்சிறந்த விமான நிலையம் என்பதற்கான விருதுகளையும் பெற்றது.
கொரோனா தொற்று பரவல் தாக்கத்தின் காரணமாக சாங்கி விமான நிலைய பயன்பாடு வீழ்ச்சியை கண்டிருந்தாலும் மீண்டும் பாதுகாப்பு நிறைந்த, உலக விமான போக்குவரத்தில் சிறந்த மற்றும் மையமாக வளர்ச்சியடையும் என போக்குவரத்து துறை அமைச்சர் ஈஸ்வரன் தனது முகநூல் பதிவில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.