சிங்கப்பூரில் 3 குழந்தைகளுக்கு தாயான 36 வயதான பெண் 3 வெவ்வேறு இடங்களில் வேலை செய்து தன் பிள்ளைகளை காப்பாற்றி வருகிறார்.
இது குறித்து mothership செய்தி நிறுவனத்துக்கு, Ash* (முழு பெயர் வெளியிடவில்லை) எனும் அந்த பெண் தன் வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
13 வயது, 6 வயது, 3 வயது என்று மொத்தம் மூன்று பிள்ளைகளுக்கு தாயானவர் Ash. கணவர் இல்லாமல் Single Mother-ஆக தன் பிள்ளைகளை வளர்த்து வருபவர். வாழ்க்கையில் எவ்வளவு துயரங்கள் நேர்ந்தாலும், யார் நம்மை விட்டுச் சென்றாலும், எவர் தயவுமின்றி வாழ வேண்டும் என்று மற்ற Single Mother-களுக்கு நம்பிக்கையாக இருந்து வருகிறார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், “2019 இல் எனது மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு, என் கணவர் பணப்பிரச்சனையால் என்னை குழந்தைகளுடன் தவிக்கவிட்டு சென்றுவிட்டார்.
இதனால் மனதளவில் நான் பாதிக்கப்பட்டேன். அந்த இரவுகளை என்னால் இன்னும் நினைவுகூர முடிகிறது. இரவு முழுவதும் அழுதேன். பேருந்தில் செல்லும் போதும் அழுவேன், தனியாக இருக்கும் போதும் அழுவேன், வாலி வாலியாக அழுவேன்.
இருப்பினும், என் நண்பர்கள் மற்றும் என் குழந்தைகளை நான் எதிர்கொள்ளும் போது, அவர்கள் முன்னால் புன்னகையுடன் இருப்பேன். அது மிகவும் வேதனையான காலம்.
ஒரு நாள், இவை அனைத்தையும் நான் நிறுத்த வேண்டும், நான் முன்னோக்கி செல்ல வேண்டும் என்று முடிவு செய்தேன். நான் அழுகையை நிறுத்த வேண்டும், என் குழந்தைகளை கவனித்துக் கொள்ள வேண்டும், நான் செய்ய வேண்டியதைச் செய்ய வேண்டும் என்று எனக்கு நானே சொன்னேன். ஒவ்வொரு நாளும் நான் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள என்னை நானே தூண்டினேன், ஒவ்வொரு நாளும் நான் சிறப்பாக இருக்க என்னைத் தூண்டினேன்.
திருமணமாகி எட்டு ஆண்டுகளுக்கு எனக்கு சமைக்கவே தெரியாது. ஆனால், மூன்று பிள்ளைகளையும் வளர்க்க நான் கூகுள் மூலம் சமைப்பது குறித்து கற்றுக்கொண்டேன். இப்போது சமையலில் நான் கைத்தேர்ந்து விட்டேன். வீட்டிலேயே வணிகம் செய்கிறேன். இறால் மாவு போன்ற சமையல் வகைகளை நான் செய்து ஆர்டர்களுக்கு ஏற்ப கொடுத்து வருகிறேன்.
அதேபோல், ஒரு MNC நிறுவனத்தில் முழு நேர ஊழியராக பணியாற்றி வருகிறேன். அதே நேரத்தில், சாங்கி விமான நிலையத்தின் MRT நிலையத்தில் உள்ள செக்-இன் பாயின்ட்டில், வார இறுதி நாட்களில், எட்டு முதல் ஒன்பது மாதங்களுக்கு பகுதி நேர SafeEntry வேலையும் செய்தேன்.
என் மூத்த பெண் பிள்ளைக்கு ஐந்து வயதாக இருந்தபோது லேசான அறிவுசார் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால், மற்ற இருவரும் ஆரோக்கியமாக இருந்தனர். இப்போது என் பெரிய கவலை என்னவென்றால், கடவுள் என்னை சீக்கிரம் அழைத்துச் சென்றுவிடக் கூடாது என்பது தான். ஏனென்றால் என் குழந்தைகளை கவனித்துக் கொள்ள யாரும் இல்லை.
அவர்களை ஒரு நல்ல நிலைக்கு கொண்டுச் சேர்க்கும் வரை நான் கண்டிப்பாக இறக்கக் கூடாது என்று முடித்தார்.