TamilSaaga

Clementi Junction-ல் பழுதடைந்து நின்ற கார்.. மூச்சிரைக்க தள்ளி உதவிய இரு போலீஸார் – குவியும் பாராட்டு

சிங்கப்பூர்: போக்குவரத்து அதிகம் நிறைந்த Clementi Avenue 6 மற்றும் காமன்வெல்த் அவென்யூ வெஸ்ட் கிராஸ் சந்திப்பில் மிட்சுபிஷி லான்சர் கார் ஒன்று பழுதடைந்து நின்றுவிட்டது. இதனால் ஓட்டுநர் காரை அப்புறப்படுத்த முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார்.

அப்போது, அந்த வழியே ஜீப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இருவர், கார் பழுதாகி நிற்பதைக் கண்டு இறங்கி வந்து, ஓட்டுனரிடம் விசாரித்தனர். அப்போது லேசாக அங்கு மழைச் சாரலும் இருந்தது.

போக்குவரத்தும் அதிகமாக இருந்ததால், உடனடியாக அந்த காரை அங்கிருந்து அப்புறப்படுத்தி, போக்குவரத்து குறைந்த இடத்திற்கு கொண்டுச் செல்வது என்று இருவரும் முடிவெடுத்து, பிறகு காரை பின்னால் இருந்து 200 மீட்டர் வரை தள்ளிச் சென்று பார்க் செய்ய உதவினர்.

வீடியோவை முழுவதும் பார்க்க – https://www.facebook.com/1503604089895680/videos/320944009702549

பொதுவாக, போக்குவரத்து காவலர்களே, இது போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள். ஆனால், இந்த சம்பவத்தில் இரு SPF அதிகாரிகளும், தாங்களாக முன் வந்து, டிரைவரின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சிக்கல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த உதவியை செய்துள்ளனர்.

இரு போலீசாருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக, அங்க காரின் ஓட்டுநர் வீடியோ வெளியிட்டதைத் தொடர்ந்து, இந்த விஷயம் வெளியே தெரிந்தது. தற்போது அந்த இரு காவல்துறை அதிகாரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூர் காவல்துறை அறிக்கையின் படி, அந்த இரண்டு காவலர்களும் மூத்த அதிகாரிகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனியர் சர்ஜென்ட் சுஹைரின் பின் ஜெஃப்ரி மற்றும் வின்சென்ட் என்ஜி ஜாங் வீ ஆகிய இருவரும் தான் தாங்களாக முன்வந்து இந்த உதவியை புரிந்துள்ளனர். சுஹைரின் மற்றும் என்ஜி முறையே ஒன்பது மற்றும் 11 ஆண்டுகளாக காவல்துறையில் உள்ளனர்.

இதையடுத்து, இரு போலீசாருக்கு பொதுமக்களிடம் இருந்து வாழ்த்துகள் குவிகின்றன. சல்யூட் ஆஃபிசர்ஸ்!

Related posts