சிங்கப்பூரின் Shell’s Pulau Bukom சுத்திகரிப்பு ஆலையில் 128 மில்லியன் வெள்ளி கடல் எரிபொருள் திருட்டில் ஈடுபட்டதற்காக துரைசாமி என்ற தமிழர் உள்பட 12 சர்வேயர்கள் மீது இன்று வியாழன் (ஏப்ரல் 14) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குற்றம்சாட்டப்பட்ட 12 பேரும் எண்ணெய் நிறுவனங்களால், கப்பல்களில் ஏற்றப்பட்ட எண்ணெயின் அளவை ஆய்வு செய்வதற்காக ஷெல் நிறுவனத்தின் கூட்டமைப்பில் உள்ள நிறுவனங்களின் சர்வேயர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அங்கீகரிக்கப்படாத எண்ணெய் பரிமாற்றங்களை மறைப்பதற்காக அவர்கள் பணம் பெற்றதாக ஊழல் நடைமுறைகள் புலனாய்வுப் பணியகம் (CPIB) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு மற்றும் 2017க்கு இடையில், முன்னாள் ஷெல் ஊழியர்களான ஜுவாண்டி புங்கோட், முசாஃபர் அலி கான் முகமது அக்ரம் மற்றும் ரிச்சர்ட் கோ சீ கியோங் ஆகியோரிடமிருந்து இந்த 12 பேர் குறைந்தது US$213,000 (S$288,000) லஞ்சம் பெற்றதாகக் CPIB தெரிவித்துள்ளது.
தனித்தனியாக அந்த 12 நபர்களும் தலா 3,000 அமெரிக்க டாலர்கள் முதல் 90,000 அமெரிக்க டாலர்கள் (S$122,000 வரை) லஞ்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது. இந்த மோசடியில் 55 வயதான முஹம்மது அலி என்பவரால் மிகப்பெரிய தொகையான 90,000 அமெரிக்க டாலர்கள் பெறப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
மேலும் அந்த நபர் வாங்கிய லஞ்ச பணத்தில் BMW 523i கார் ஒன்றை வாங்கியதாகவும் கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட மற்ற 11 Surveyorகள் பட்டியல் பின்வருமாறு..
ஏ.துரைசாமி, 60; ஜஸ்பிர் சிங் பரம்ஜித் சிங், 37; ஆனந்த் ஓம்ப்ரேகாஸ், 39; நொருலிமான் பக்தி, 40; எர்வின் சுஹர்தி ஜமாலுதீன், 38; லீ பீன் லியான், 57; நௌஷாத் கேரிம் தெங்கூர், 45; முஹம்மது கைருல் அஸ்ரி முகமது ஹனாஃபியா, 38; குமுனன் ரெத்தன குமரன், 40; பரமானந்தம் சீனிவாசன், 39; மற்றும் Rizal Zulkeflee, 38 ஆகியோர் அடங்குவர்.
கடந்த 2007ம் ஆண்டிலேயே எரிவாயு எண்ணெயை தவறாகப் பயன்படுத்தும் இந்த ஊழல் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதித்திட்டத்தில் ஈடுபட்டதாக இதுவரை 26 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் இதுவரை இருவருக்கு தலா 9 ஆண்டுகள் மற்றும் 8 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் சிக்கிய மற்றவர்களுக்கு ஊழல் குற்றத்திற்கான அதிகபட்ச தண்டனையாக $1,00,000 அபராதம் மற்றும் ஐந்து ஆண்டுகள் சிறை விதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது.