சிங்கப்பூரின் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் (CNB) அதிகாரிகள் 5 நாளாக தீவு முழுவதும் போதைப்பொருள் கடத்தலில் சந்தேகத்திற்கிடமான 102 போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.
சிங்கப்பூரில் போதை பொருள் சம்மந்தமாக 102 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் ஒரு 17 வயது சிறுமியும் அடங்குவார் என்ற தகவலை நேற்று மே 13ம் தேதி வெளியிட்டுள்ளது CNB.
கடந்த மே 9ம் தேதி முதல் நேற்று மே 13 வரை நடந்த தேடுதல் நடவடிக்கையின் போது, அங் மோ கியோ, புக்கிட் பாடோக் மற்றும் யியோ சூ காங் போன்ற பகுதிகளில் இருந்து சுமார் S$1,195,000 மதிப்புள்ள கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
இதில் சுமார் 6,227 கிராம் ஹெராயின், 724 கிராம் ICE, 20,438 கிராம் கஞ்சா, 3 கிராம் நியூ சைக்கோஆக்டிவ் பொருள்கள் (NPS), ஒரு எக்ஸ்டஸி மாத்திரை, GHB (காமா-ஹைட்ராக்ஸிபியூட்ரேட்) இருப்பதாக சந்தேகிக்கப்படும் இரண்டு பாட்டில்கள் ஆகியவை அடங்கும்.
20 கிலோ கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது இந்த 2022ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய அளவாகும். கைது செய்யப்பட்ட அனைத்து சந்தேக நபர்களிடமும் போதைப்பொருள் நடவடிக்கைகள் தொடர்பிலான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
சிங்கப்பூரை பொறுத்தவரை 15 கிராம் Pure ஹெராயின் (டயமார்ஃபின்) அல்லது 500 கிராம் கஞ்சாவை கடத்தும் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் குற்றம் நிரூபணம் ஆகும் பட்சத்தில் அவர்களுக்கு கட்டாய மரண தண்டனை விதிக்கப்படும்.
கைதான 102 பேரில் ஒரு வெளிநாட்டவரும் அடங்குவர் என்று தகவல் வெளியாகியுள்ளது, மலேசியரான அவரிடம் இருந்து 952 கிராம் ஹெராயின் மற்றும் 4,093 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.