வெளிநாடுகளில் வசிப்பவர்கள், இந்தியாவில் உள்ள உறவினர்களுக்கும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் ரூ.10 லட்சம் வரையிலும் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் பணம் அனுப்ப அனுமதிக்கும் வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்ட (FCRA) திருத்தம் அமலுக்கு வந்துள்ளது. இதுகுறித்து திருத்தம் செய்யப்பட்டுள்ள விதிகள் குறித்த அரசாணையை இந்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது.
இந்த அரசாணையில் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் பின்வருமாறு,
வெளிநாட்டு நன்கொடை விதிகள் 2011, விதி 6ன்படி, வெளிநாட்டில் வசிப்பவர்கள் இந்தியாவில் உள்ள உறவினர்களுக்கு ஒரு நிதியாண்டில் ரூ.1 லட்சம் வரை மட்டுமே பணம் அனுப்ப முடியும். இதுநாள் வரை இந்த நடைமுறையே அமலில் இருந்தது. அதற்கு மேற்பட்ட தொகை அனுப்பினால், அதுதொடர்பான நிதி விவரங்களை ஒன்றிய அரசுக்கு 30 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும். இதில் மாற்றம் செய்யப்பட்டு, தற்போது நிதியாண்டில் ரூ.10 லட்சம் வரை எந்த கட்டுப்பாடும் இல்லாமல் அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சட்டத்தின் கீழ் நிதி பெறுவதற்கு தனிநபர்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள் பதிவு அல்லது முன் அனுமதி பெற விண்ணப்பிக்கும் போது, வங்கி கணக்கு மற்றும் நிதியை எதற்காக பயன்படுத்தப் போகிறார்கள் என்ற ஆவணங்களை 30 நாட்களில் தர வேண்டும் என்ற விதிமுறை முன்பு இருந்தது. இப்போது அந்த கெடு 45 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இச்சட்டத்தின் கீழ் வெளிநாட்டு நிதி பெறும் என்ஜிஓ.க்கள் நன்கொடையாளர்களின் விவரங்கள், பெறப்பட்ட தொகை, ரசீது தேதி போன்றவற்றை ஒவ்வொரு காலாண்டிலும் அவர்களின் இணையதளத்தில் வெளியிட வேண்டும். இது தற்போது நீக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக, தணிக்கை செய்யப்பட்ட கணக்கு விவரங்கள் அனைத்தும், நிதியாண்டு தொடங்கும் ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து 9 மாதத்திற்குள் இணையதளத்தில் வெளியிட வேண்டும்.
ஒருவேளை அவர்கள் வங்கி கணக்கு, முகவரி, பெயர் உள்ளிட்ட விவரங்களை மாற்றினால், அது குறித்து 15 நாட்களுக்கு பதிலாக 45 நாட்களில் தகவல் தெரிவிக்க வேண்டும்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.