சிங்கப்பூரின் சைனா டவுனுக்கு உட்பட்ட தெற்கு பாலம் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ மாரியம்மன் கோயில்.
மாரி என்றால் மழை என்று பொருள். மழை போன்ற தனது கருணையால் பயிர் போன்ற மக்களை காத்து வாழவைக்கும் தெய்வமாக விளங்குகிறாள். பல்வேறு நோய்களை தீர்த்து காத்து நிற்கும் தெய்வமாக மக்கள் இங்கு மாரியம்மனை வணங்குகிறார்கள்
ஆலய வரலாறு:
இந்த கோயிலை கட்டுவதற்கு பிரதான காரணமாக இருந்தவர் நாராயண பிள்ளை என்பவர். தமிழகத்தில் கடலூர் நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் உள்ள தமிழர்கள் உதவியோடு அவர் இங்கு கோயில் கட்டும் பணிகளை செய்தார்.
ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி 1822 ஆம் ஆண்டு கோயில் கட்டுவதற்கான இடத்தை அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு 1823 ஆம் ஆண்டில் அனுமதி வழங்கப்பட்டது
அதன் பிறகு 1827 ஆம் ஆண்டு கடலூரை சேர்ந்த ஒருவர் அம்மன் சிலையை இங்கு கொண்டு வந்து கூரை மற்றும் மரப்பலகைகளால் அமைப்பு ஏற்படுத்தி பிரதிஷ்டை செய்து வணங்க துவங்கினார்கள். அப்போது சின்ன அம்மன் என அழைக்கப்பட்டது பிறகு மகா மாரியம்மனாக தற்போது வரை வணங்கப்படுகிறது.
1862 ஆம் ஆண்டுக்கு பிற்பகுதியில் இந்த கோயிலானது முழுவதும் செங்கல் கொண்டு கட்டப்பட்டு தற்போது இருக்கும் பெரிய அம்மன் சிலை கொண்டுவரப்பட்டது.
அதன் பிறகு 1962 ல் தான் தற்போது உள்ள கோயில் அமைப்பாக புனரமைக்கப்பட்டது.
சமூக சேவை :
பழங்காலம் தொட்டே இந்த கோயில் அமைப்பு பல சமூக சேவைகளை செய்து வருகிறது. இங்கு வேலை தேடி வருபவர்கள் நல்ல வேலை அல்லது தொழில் அமையும் வரை கோயிலில் தங்கிக்கொள்ளலாம்.
இந்து திருமண சட்டத்தின் படி திருமணங்களை நடத்தி பதிய வைக்கும் பதிவகமாக உள்ளது.
கோயில் அமைப்பு சார்பில் மருத்துவ முகாம், சமய வகுப்புகள், கல்வி சேவைகள் செய்யப்பட்டு வருகிறது.
சீனர்கள் அதிகம் வாழும் பகுதியில் இந்த கோயில் அமைந்துள்ளதால் சீன மக்களும் வந்து மகா மாரியம்மனை தரிசித்து செல்கிறார்கள்.
இங்கு தீ மிதி திருவிழாவும், நவராத்திரி திருவிழாவும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.