நேற்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 3) நிலவரப்படி சிங்கப்பூரில் 216 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக 210 பேர் உள்ளூர்வாசிகள் என்பது அதிர்ச்சி தரும் தகவலாக இருக்கின்றது. சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் (MOH) வெளியிட்ட தரவுகளின்படி, இந்த ஆண்டு ஜூன் மாதம் 20ம் தேதி அன்று பதிவு செய்யப்பட்ட 182 சமூக வழக்குகளைத் தாண்டி 210 ஆக பதிவாகியுள்ளது. சிங்கப்பூரில் இந்த பெருந்தொற்று காலம் தொடங்கியதிலிருந்து பதிவாகும் அதிக அளவிலான தொற்று இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் மீதமுள்ள 6 உள்ளூர் வழக்குகளில் கடந்த வெள்ளிக்கிழமை வெளிநாட்டு ஊழியர்கள் தங்குமிடங்களில் பதிவாகியுள்ளது. உள்நாட்டில் பரவிய 216 புதிய வழக்குகளில், 109 வழக்குகள் முந்தைய நோய்த்தொற்றுகளுடன் இணைக்கப்படவில்லை என்று MOH தகவல் அளித்துள்ளது. இதனையடுத்து 56 புதிய தொற்றுநோய் வழக்குகள் முந்தைய தொற்று வழக்குகளுடன் இணைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டதாக MOH தெரிவித்துள்ளது. கண்காணிப்பு சோதனை மூலம் மேலும் 51 முந்தய வழக்குகளுடன் இணைக்கப்பட்ட நோய்த்தொற்றுகள் கண்டறியப்பட்டன.
பதிவாகியுள்ள புதிய வழக்குகளில் இருவர் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும் தடுப்பூசி போடப்படாத அல்லது ஓரளவு தடுப்பூசி போடப்பட்டவர்களாக அவர்கள் உள்ளதால் கடுமையான நோய் அபாயத்தில் உள்ளனர் என்று MOH தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரின் சாங்கி பொது மருத்துவமனையில் புதிய நோய் குழுமம் கண்டறியப்பட்டுள்ளது. இது அங்கு பதிவாகும் இரண்டாவது தொற்று குழுமமாகும்.