சிங்கப்பூர்: அடடா! என்று சொல்ல வைக்கும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
அதாவது பெற்றோர் இந்திய குடியுரிமையை துறந்து, சிங்கப்பூர் குடியுரிமையை பெற்றாலும், வயிற்றில் சிசுவாக இருந்த குழந்தைக்கு இந்திய குடியுரிமை பெற உரிமை உள்ளது என்று தீர்ப்பு வழங்கியுள்ளது சென்னை ஐகோர்ட்.
சிங்கப்பூரைச் சேர்ந்தவர் பிரணவ் சீனிவாசன். இவரது பெற்றோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். பின்னர் அவர்கள் இந்திய குடியுரிமையை துறந்து, சிங்கப்பூர் குடியுரிமை பெற்றனர். 1998ம் ஆண்டு அவர்கள் இந்திய குடியுரிமையை துறந்தபோது, பிரணவ் ஏழரை மாத சிசுவாக தாயின் வயிற்றில் இருந்தார்.
இந்த நிலையில், சிங்கப்பூரில் பிறந்த பிரணவ், வளர்ந்து ‘மேஜர்’ ஆன பின், கடந்த 2017ம் ஆண்டு இந்திய குடியுரிமை கோரி, சிங்கப்பூரில் உள்ள இந்திய துாதரகத்தில் விண்ணப்பித்தார்.
எனினும், இந்திய குடியுரிமையை அவரது பெற்றோர் துறந்து விட்டதால், பிரணவ்வுக்கு மீண்டும் இந்திய குடியுரிமை வழங்க இந்திய உள்துறை அமைச்சகம் மறுத்துவிட்டது. அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து, பிரணவ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி அனிதா சுமந்த் விசாரித்தார்.
இறுதியில் நீதிபதி அனிதா சுமந்த் தனது உத்தரவில், “கருவில் இருக்கும் சிசு, ஏழரை மாதமாக இருக்கும்போது, குழந்தை அந்தஸ்தை பெற்று விடுகிறது. அந்த அந்தஸ்துடன், பெற்றோரின் குடியுரிமையையும் பெறுகிறது. எனவே, குடியுரிமையை மறுக்க முடியாது. மத்திய அரசின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இந்திய குடியுரிமை பெற, மனுதாரருக்கு உரிமை உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது.
குறிப்பு: மேலே புகைப்படத்தில் இருப்பவர் தான் தீர்ப்பு வழங்கிய நீதிபதி அனிதா சுமந்த்