நமது ஊர்களில் பிரசவத்திற்கு சென்று கொண்டிருக்கும் பொழுதே ஆம்புலன்ஸில் குழந்தை பிறந்த சம்பவம், ஆட்டோவில் குழந்தை பிறந்த சம்பவம் போன்றவற்றினை கேள்விப்பட்டிருப்போம். அதேபோல் பறக்கும் விமானத்தில் குழந்தை பிறக்கும் சம்பவத்தை அரிதாக நாம் செய்திகளில் படிப்பதுண்டு. பொதுவாக பறக்கும் விமானத்தில் குழந்தை பிறப்பது என்பது மிகவும் அரிதான சம்பவமாகும்.
ஏனென்றால் விமான நிறுவனங்களின் விதிமுறைகளின் படி 36 வார கர்ப்பத்திற்கு மேல் கர்ப்பிணிகள் விமானத்தில் பறக்க அனுமதிக்க பட மாட்டார்கள். ஆனால் அதையும் மீறி அரிதாக பிறக்கும் குழந்தைகள் பல வகையான சலுகைகளை அனுபவிக்க வாய்ப்பு உண்டு. பொதுவாக பறக்கும் விமானத்தில் குழந்தை பிறந்தால் அவர் எந்த நாட்டு குடிமகனாக கணக்கில் கொள்ளப்படுவார் என்ற சந்தேகம் சிலருக்கு இருக்கும். நடைமுறையில் தாய் தந்தை எந்த நாட்டைச் சேர்ந்தவர்களோ அந்த நாட்டு குடியுரிமை தான் குழந்தைகளுக்கு வழங்கப்படும்.
ஆனால், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகள் தங்கள் நாட்டு வான்வெளியில் விமானம் பறக்கும் பொழுது குழந்தை பிறந்தால் அவர்கள் நாட்டு குடியுரிமையை வழங்குவதற்கு தயாராக உள்ளனர். மேலும் சில நாடுகள் இது போன்ற சலுகைகளை வழங்குகின்றனர்.
இது மட்டுமல்லாமல் ஏர் ஏசியாவில் பிறந்த ஒரு குழந்தைக்கு அந்த விமான நிறுவனம் ஒரு மில்லியன் மைல்கள் தூரத்தினை இலவசமாக பயணித்துக் கொள்ளலாம் என்ற சலுகையை வழங்கியது. அதேபோன்று ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் குழந்தை பிறந்த பொழுது வாழ்நாள் முழுவதும் அந்த குழந்தை ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் இலவசமாக பயணிக்கலாம் என்ற சலுகையை வழங்கியது. எப்பொழுதாவது அரிதாக நடக்கும் சம்பவம் என்பதால் விமானத்தில் பிறக்கும் அதிர்ஷ்டக் குழந்தைகள் இந்த வாய்ப்புகளை பெறுகின்றனர்.