இந்த டிஜிட்டல் உலகில் கடந்த சில வருடங்களாக YOUTUBE சேனல்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. அதே சமயம் இந்த யூடியூப் சேனல்களுக்கு மக்களிடையே பெரிய அளவில் வரவேற்பும் கிடைத்து வருகிறது. இந்நிலையில் YOUTUBEல் ஒரு கோடி சப்ஸ்க்ரைபர்களைக் கடந்த முதல் தமிழ் சேனல் என்ற பெருமையை பெற்றுள்ளது Village Cooking Channel.
மேலும் இந்த சேனலை சேர்ந்தவர்கள் கொரோனா நிவாரண நிதியாக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை சந்தித்து சுமார் பத்து லட்சம் ரூபாய் நன்கொடை அளித்த இந்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வருடத்தில் சுமார் 6 மாதங்கள் விவசாய தொழில் செய்துவிட்டு, மீதமுள்ள மாதத்தில் கிடைத்த வேலைகளை செய்து வரும் ஒரு இளைஞர்கள் குழு, சோதனை முறையில் கடந்த 2018ஆம் ஆண்டு ஒரு யூடியூப் சேனலை தொடங்கி சமையல் செய்யும் வீடியோக்களை பதிவிட ஆரம்பித்தனர்.
பெரியதம்பி என்னும் பெரியவரே இக்குழுவின் பிதாமகன் என்றால் அது மிகையல்ல. சமையல் வீடியோக்களை பகிரும் பல்லாயிரக்கணக்கான யூடியூப் சேனல்களுக்கு மத்தியில் கிராமத்து இளைஞர்களின் வெகுளியான பேச்சும். மண் வாசம் மாறாத பாரம்பரிய சமையல் முறையும். திறந்த வெளியில் அவர்கள் உணவு சமைக்கும் முறையும் உலகளவில் ஒரு கோடி ரசிகர்களை ஈர்த்தது.
இது மட்டுமல்லாமல் தமிழகத்தில் தேர்தல் பரப்புரைக்காக வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இவர்களை நேரில் சென்று சந்தித்து அவர்களோடு உணவு சமைத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சேனல் தொடங்கிய மூன்றே ஆண்டுகளில் ஒரு கோடி சப்ஸ்க்ரைபர்களைக் கடந்து யூடியூப் நிறுவனத்தின் டைமண்ட் பட்டன் அங்கீகாரம் பெற்ற முதல் தமிழ் சேனல் என்ற பெருமையை பெற்றுள்ளது வில்லேஜ் குக்கிங் சேனல்.