வாழ்க்கையில் சில விஷயங்களை, சில தருணங்களை நாமே அழகாக்கிக் கொள்ளலாம். அப்படி ஒரு தருணத்தை அழகாக்கி, தன் குடும்பமே மறக்க முடியாத நிகழ்வாக மாற்றிவிட்டார் ஒரு வெளிநாட்டு ஊழியர்.
ஆம்! துபாயில் பணிபுரியும் ஊழியர் ஒருவரின் குடும்பத்தில் ஒரு முக்கியமான திருமண வைபவத்துக்கு நாள் குறிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த நபரோ தனக்கு வேலை அதிகமாக இருப்பதால், ஊருக்கு வர முடியாது என்றும், நீங்களே திருமணத்தை நடத்தி விடுங்கள் என்றும் கூறியிருக்கிறார்.
அதுமட்டுமின்றி, கல்யாணத்தை நான் வீடியோ Call-ல் பார்க்கிறேன். அதற்கு மட்டும் ஏற்பாடு செய்துவிடுங்கள் என்று தனது குடும்பத்தாரிடம் கூறியிருக்கிறார். இதனால் ஏமாற்றமடைந்த அவரது குடும்பத்தினர், வேறு வழியின்றி திருமண வேலைகளை கவனிக்க தொடங்கிவிட்டனர்.
ஆனால், திருமண நாள் அன்று, யாருமே எதிர்பார்க்காத விதமாக அந்த ஊழியர் நேரடியாக கல்யாணம் நடக்கும் மண்டபத்துக்கே வந்துவிட்டார். இதனை சற்றும் எதிர்பார்க்காத அவரது குடும்பத்தினர் திக்குமுக்காடிவிட்டனர். பிள்ளைகள் ஓடி வந்து அப்பாவை கட்டிப்பிடித்து முத்தமழை பொழிய, அவரது மனைவியால் இதனை நம்பவே முடியவில்லை. அவரும் ஓடிவந்து கணவனை கட்டியணைத்து முத்தமிட அந்த கல்யாணாமே நெகிழ்ச்சி கோலமானது.
2019ல் வெளிவந்த இந்த வீடியோ, இப்போதும் இணையதளங்களில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. அதனை எப்போது பார்த்தாலும் வெளிநாட்டு ஊழியர்களின் கண்களில் ஒரு சொட்டு நீராவது எட்டிப்பார்த்துவிடும். நாம் நினைத்தால், வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடங்களையும் அழகாக்கலாம் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சிறந்த உதாரணம்.