TamilSaaga

பிறந்தது விடிவு காலம்! இந்தியாவில் மார்ச் 27 முதல் சர்வதேச விமான சேவை தொடக்கம் – சிங்கப்பூரில் இருந்து இனி அடுத்த நொடி இந்தியா வரலாம்!

வரும் மார்ச் 27ம் தேதி முதல் இந்தியாவில் சர்வதேச விமான போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படும் என்று அந்நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் இன்று (மார்ச்.8) அறிவித்துள்ளது.

இந்திய நாட்டில் கடந்த 2020 மார்ச் மாதம் முதல் பெருந்தொற்று பரவத் தொடங்கியது. இதனால் உடனடியாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. அதேசமயம், வெளி நாடுகளில் சிக்கியிருந்த இந்தியர்களை மீட்க, வந்தே பாரத் திட்டத்தின் கீழ் விமானங்கள் இயக்கப்பட்டன. இருந்தபோதிலும், அத்தியாவசிய பொருட்களுடன் பயணிக்க ஏதுவாக சர்வதேச விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டன, மற்றபடி அனைத்து பயணிகள் விமான சேவைகளும் நிறுத்தப்பட்டன.

மேலும் படிக்க – உலகின் மிகப்பெரிய “ஓபன் மார்க்கெட்” சிங்கப்பூர்.. வெளிநாட்டு ஊழியர்கள் இல்லையெனில் ஒரேநாளில் “சர்வ நாசம்” – புரிந்து கொள்ளாமல் வெறுப்பைக் கக்கும் சிங்கப்பூரர்கள்

கொஞ்சம் கொஞ்சமாக பெருந்தொற்று குறைந்ததால், கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ம் தேதி முதல் சர்வதேச விமானப் போக்குவரத்து தொடங்கும் என இந்திய அரசு அறிவித்தது. ஆனால், புற்றீசல் போல் கிளம்பிய ஓமைக்ரான் தொற்றால், இந்த உத்தரவை இந்திய அரசு திரும்பப் பெற்றது. இதைத் தொடர்ந்து, சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடை 2022 பிப்ரவரி மாதம் 28 வரை நீடிக்கும் என்றும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று (மார்ச்.8) இந்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் மார்ச் 27 முதல், மீண்டும் சர்வதேச பயணிகள் விமான சேவை தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், சர்வதேச பயணத்திற்கான சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சுமார் 2 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர், சர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்து சேவைக்கு இந்தியாவில் மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் இருக்கும் இந்திய தொழிலாளர்களுக்கு நிச்சயம் இது நல்ல செய்தி எனலாம். ஏனெனில், இத்தனை நாட்களாக இந்தியாவில் தங்கள் குடும்பத்தில் எந்த நல்லது, கெட்டது நடந்தாலும் உடனே சிங்கப்பூரில் இருந்து அவர்களால் இந்தியா செல்ல முடியாது.

இப்போது, இந்தியா தனது சர்வதேச எல்லைகளை முழுமையாக திறந்துவிட்டதால், ‘பஸ் ஏறுவது போன்று, அடுத்த நொடி சிங்கப்பூரில் இருந்து அவர்கள் இந்தியா கிளம்பலாம். எந்தவொரு திடீர் பயணமாக இருந்தாலும், சிங்கப்பூரில் இருந்து மலேசியா வந்தோ, அல்லது துபாய் வந்தோ அங்கிருந்து எளிதாக இந்திய வந்துவிடலாம். சிங்கப்பூரில் இருந்து நேரடியாக இந்தியா செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. Emergency சமயங்களில் இந்திய அரசின் இந்த புதிய உத்தரவு, சிங்கப்பூரில் உள்ள ஊழியர்களுக்கு நிச்சயம் உதவியாக அமையும்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts