TamilSaaga

கடல் கடந்து இருந்தாலும் தமிழகத்தை மறக்காத கபாடி வீரர்கள்… இறந்த சிவகங்கை கபாடி வீரர் குடும்பத்துக்கு சிங்கப்பூரில் இருந்து வந்த ரூ.1 லட்சம்… #Exclusive

கபடி விளையாட்டு மைதானத்தில் உயிரிழந்த இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த சிவகங்கையைச் சேர்ந்த 19 வயது இளம் வீரர் அடைக்கலத்தின் குடும்பத்தினருக்கு சிங்கப்பூர் கபாடி தோழர்கள் இயக்கம் சார்பாக ஒரு லட்ச ரூபாய் நிதியுதவி அளித்திருப்பது நெகிழவைத்திருக்கிறது.

சிவகங்கை கபடி வீரர்

இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த சிவகங்கை மாவட்டம் தி.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் 19 வயதான அடைக்கலம். சிறுவயது முதலே கபடி விளையாட்டின் மீது பெருங்காதல் கொண்டிருந்த அவர், தமிழ்நாடு அளவில் ஜூனியர் கபடி சாம்பியன்ஷிப் போட்டியிலும் பங்கேற்றார். திருப்பத்தூர் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்துக் கொண்டிருந்த இவர், சுற்றுவட்டாரங்களில் நடக்கும் கபடி போட்டிகளிலும் கலந்துகொண்டு சிறப்பாகத் தனது திறமையைக் காட்டி வந்தார்.

இந்தநிலையில், பொன்னமராவதியை அடுத்த நரியங்காடு பகுதியில் தீபாவளியை ஒட்டி நடந்தப்பட்ட கபடி போட்டியில் குன்றக்குடி அணிக்காகக் கலந்துகொண்டு விளையாடினார். கடந்த அக்டோபர் 26-ம் தேதி நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் அசத்தல் வெற்றிபெற்று அரையிறுதிக்கு அந்த அணி தகுதிபெற்றது. அந்தப் போட்டியில் வெற்றிபெற்ற பின்னர் மைதானத்துக்கு வெளியே நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த அடைக்கலம், திடீரென மயக்கமடைந்து விழுந்தார்.

அவரை அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்கும் பின்னர் மேல்சிகிச்சைக்காக பொன்னமராவதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 19 வயதே ஆன இளம் கபடி வீரர் திடீரென உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. அவரது உடலைப் பார்த்து நண்பர்கள் கதறி அழுதனர்.

சிங்கப்பூர் கபடி தோழர்களின் உதவி

இந்தத் தகவல் இந்தியா மட்டுமின்றி உலக அளவில் இருக்கும் கபடி வீரர்கள், ஆர்வலர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்தநிலையில், சிங்கப்பூரைச் சேர்ந்த சிங்கப்பூர் கபாடி தோழர்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் இளம் வீரரான அடைக்கலத்தின் குடும்பத்துக்கு உதவிக்கரம் நீட்டியிருக்கிறார்கள். இதுகுறித்து தமிழ் சாகாவிற்கு அவர்கள் அளித்துள்ள பேட்டியில், வெளிநாடு வாழ் தமிழர்கள் சார்பாக அவர்கள் நிதியுதவி திரட்டி அடைக்கலம் குடும்பத்தினருக்கு உதவ முயற்சி எடுத்தோம். அதன்படி, வெளிநாடு வாழ் தமிழர்கள் ஒன்றிணைந்து ஒரு லட்ச ரூபாய் நிதியைத் திரட்டினார்கள்.

இந்த நிதியானது சிவகங்கை உள்ளூர் கவுன்சிலர் மற்றும் கபடி நண்பர்கள் வாயிலாக அடைக்கலம் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது. கபடி களத்தில் உயிரிழந்த 19 வயது வீரர் அடைக்கலம் குடும்பத்தினருக்கு சிங்கப்பூர் கபடி தோழர்கள் செய்த உதவி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நிதியுதவி அளித்த நல்ல உள்ளங்களுக்கும் அதை அடைக்கலத்தின் குடும்பத்தினரிடம் சேர்க்க உதவிய நண்பர்களுக்கும் சிங்கப்பூர் கபடி தோழர்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

இதைப்போல கடலூரில் இறந்த கபடி வீரருக்கு இந்த இயக்கம் சார்பாக 30 ஆயிரம் கொடுக்கப்பட்டது. பிழைக்க வந்த இடத்தில் நாங்கள் எங்கள் சொந்த மண்ணில் இருக்கும் கபடி வீரர்களுக்கு நாங்கள் செய்யும் சின்ன உதவி. இதை அரசாங்கமும் முன்னெடுத்து செய்ய வேண்டும் என சிங்கப்பூர் கபாடி தோழர்கள் இயக்கம் சார்பாக கோரிக்கை விடப்பட்டது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts