TamilSaaga

Exclusive : “சிங்கப்பூரில் இருந்து தமிழகம் வர ஆகஸ்ட் 12 வரை டிக்கெட் இல்லை” – செய்வதறியாது தவிக்கும் மக்கள்

உலக அளவில் பெருந்தொற்று பரவல் காரணமாக உள்ளூர் மற்றும் பன்னாட்டு போக்குவரத்து பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக உலகின் பல நாடுகளில் இன்னும் முழுமையாக விமான சேவை அனுமதிக்கப்படவில்லை. அதேபோல சிங்கப்பூர் அரசும் கடந்த ஓர் ஆண்டிற்கு மேலாக பல நாடுகளுக்கு தங்களுடைய எல்லைகளை மூடி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. அண்டை நாடான இந்தியாவில் பெருந்தொற்று பரவல் சற்று அதிகமாக காணப்படும் நிலையில் சிங்கப்பூர், இந்தியாவிற்கு இன்னும் தனது எல்லைகளை திறக்கவில்லை.

ஆனால் அவ்வப்போது சில இந்திய தொழிலாளிகள் மிகுந்த பாதுகாப்போடும் உரிய அனுமதியோடும் சிங்கப்பூர் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வரவிருக்கும் ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி வரை சிங்கப்பூரில் இருந்து திருச்சி செல்வதற்கான வந்தே பாரத்தின் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத்தீர்ந்து விட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து நமது Tamil Saaga Singapore செய்தி நிறுவனத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

நேற்று ஜூலை 30ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12ம் தேதி வரை சிங்கப்பூரில் இருந்து திருச்சி செல்வதற்கான அனைத்து டிக்கெட்டுக்களும் விற்றுத்தீர்ந்துள்ள நிலையில் ஆகஸ்ட் 13ம் தேதி முதல் மட்டுமே தற்போது சிங்கப்பூர் – திருச்சி டிக்கெட்டுகள் புக்கிங் செய்யப்படுகிறது. மேலும் இந்த இடைப்பட்ட காலத்தில் சிங்கப்பூரில் இருந்து தமிழகம் செல்ல நினைக்கும் மக்கள் சென்னை வழியாகவும் செல்லலாம். ஆனால் சிங்கப்பூர் சென்னை மார்க்கமாகவும் இந்த இடைப்பட்ட காலத்தில் ஒரே ஒரு விமான சேவை மட்டுமே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மீதமுள்ள அந்த டிக்கெட்டுகள் புக்கிங் ஆகும் பட்சத்தில் ஆகஸ்ட் 12 வரையிலான இந்த இடைப்பட்ட காலத்தில் சிங்கப்பூர் முதல் தமிழகம் வரை செல்லும் பயணிகள் விமானங்கள் இல்லாமல் பெரும் சிரமங்களுக்கு உள்ளாவார்கள். குறிப்பாக அவசர தேவை உள்ளவர்கள் பயணிப்பதில் பெரும் சிக்கல் ஏற்படும்.

இந்த இக்கட்டான சூழலில் சிங்கப்பூரில் இருந்து தமிழகம் செல்லவிரும்பும் பல பயணிகளின் முக்கிய கோரிக்கையாக இருப்பது என்னவென்றால் “கூடுதல் விமானங்கள்” என்பது தான். குறிப்பிட்ட வழித்தடத்தில் இயக்கப்படும் விமானங்கள் அனைத்தும் முன்பதிவு செய்யப்படும் நிலையில் கூடுதலாக சில விமானங்களை இடையிடையே இயக்கினால் பலரும் உரிய நேரத்தில் தமிழகம் சென்றடையமுடியும் என்று கருதுகின்றனர். மேலும் இந்தியாவில் உள்ள விமானத்துறை அதிகாரிகளும் இங்கு சிங்கப்பூரில் பணியாற்றும் இந்திய தூதரக அதிகாரிகளும் இந்த விஷயத்தில் தலையிட்டு சிறப்பு விமானங்கள் இயங்க அனுமதிக்குமாறு பலர் தங்களது கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

Related posts