பண்டிகை என்றாலே வழக்கமான பாரம்பரிய கொண்டாட்டங்களுடன், புது படங்களில் ரிலீஸ் இருக்கத் தான் செய்யும். சினிமா ரசிகர்களை உற்சாகப்பட்டுத்துவதற்காக தீபாவளி, பொங்கல், ஆங்கில புத்தாண்டு, தமிழ் புத்தாண்டு, இந்திய சுதந்திர தினம், மே தினம், கிறிஸ்துமஸ் என ஒவ்வொரு பண்டிகையையும் குறி வைத்து சினிமா துறையினர் புது படங்களை ரிலீஸ் செய்வது வழக்கம். அதுவும் ஏப்ரல் மாதம் வந்து விட்டால் இரட்டிப்பு எதிர்பார்ப்பு இருக்கத் தான் செய்யும். தமிழ் புத்தாண்டுடன், கோடை விடுமுறையும் இணைந்து கொள்வதால் பெரிய நடிகர்களின் படங்கள், அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களின் ரிலீஸ் கண்டிப்பாக இருக்கும்.
2024 ம் ஆண்டு தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14ம் தேதியை முன்னிட்டு தமிழில் 6 படங்கள் ரிலீஸ் செய்யப்பட உள்ளன.
- ஜி.வி.பிரகாஷ்குமார் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள டியர் (ஏப்ரல் 11)
- தேவலா கவிதா – அன்னா ஆஷா நடித்துள்ள இனிமே நாங்க தான் ஹெட் லைன்ஸ் (ஏப்ரல் 12)
- சூர்யா – திஷா பதானி நடித்துள்ள கங்குவா (ஏப்ரல் 14)
- சந்தானம் – பிரியாலயா நடித்துள்ள இங்க நான் தான் கிங்கு (ஏப்ரல் 14)
- விஜயக்குமார் – ப்ரீத்தி அஷ்ராணி நடித்துள்ள எலெக்ஷன் (ஏப்ரல் 14)
- சுந்தர்.சி – சந்தோஷ் பிரதாப் நடித்துள்ள அரண்மனை 4 (ஏப்ரல் 15)
ஆகிய படங்கள் ஏப்ரல் மாதம் 2வது வாரத்தில் ரிலீசாக காத்திருக்கின்றன.
இவற்றுள் அதிகம் எதிர்பார்க்கப்படும் என்றால் சூர்யா நடித்துள்ள கங்குவா படம் தான். டைரக்டர் சிவா இயக்கத்தில், கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த படம் fantasy action film படமாக தயாராகி உள்ளது. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் பேனரில் தயாராகி உள்ள இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இவருடன் பாபி தியோல், திஷா பதானி, ஜெகபதி பாபு, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லே, கோவை சரளா, ஆனந்தராஜ், ரவி ராகவேந்தர், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கிட்டதட்ட ரூ.350 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிக பொருள் செலவில் எடுக்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்றாக உள்ளது. 3டி மற்றும் ஐமேக்ஸ் வடிவில் ஏப்ரல் 14 ம் தேதி உலகம் முழுவதிலும் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
கமல்ஹாசன் நடிப்பில், டைரக்டர் ஷங்கர் இயக்கி உள்ள இந்தியன் 2 பல ஆண்டுகளாக ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் படமாக இருந்து வருகிறது. இந்த படம் 2024ம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் மாதத்திற்குள் வெளியாகும் என இந்த படத்தின் வெளியீட்டாளரான நடிகர் உதயநிதி ஸ்டாலின் பல மாதங்களுக்கு முன்பே அறிவித்திருந்தார். இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி துவங்கி நடைபெற உள்ளதால் அந்த சமயத்தில் இந்தியன் 2 கண்டிப்பாக ரிலீஸ் செய்யப்படும் என ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேர்தல் நடத்தை விதிகளின் காரணமாக அந்த படம் தேர்தல் முடிந்த பிறகு மே 24ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது. ஆனால் இதுவரை இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
இதனால் தமிழ் புத்தாண்டிற்கு வெளியாகும் தமிழ் படங்களின் ரேசில் சூர்யா நடித்த கங்குவா படம் தான் முந்திக் கொண்டிருக்கிறது. அதே சமயம் தேர்தல் சமயம் என்பதால் எலக்ஷன் படத்திற்கும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சுந்தர்.சி படம் என்றால் காமெடிக்கு பஞ்சம் இருக்காது என்பதால் அந்த படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. இதில் ரசிகர்களின் மனங்களை கவர்ந்து, வசூல் ரேசில் வெல்ல போகும் படம் எது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.