சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்….
தமிழ் சினிமாவின் கருப்பு நட்சத்திரம். வெள்ளை நிற ஆதிக்கத்தில் இருந்த சினிமா உலகத்தில், இந்தக் கருப்பு நட்சத்திரம் வெற்றி கண்டது அவ்வளவு எளிதான சங்கதியல்ல. நிறபேதம் பார்க்கும் இந்த உலகத்தில் ரஜினிகாந்த் உச்சநட்சத்திரமாக உருவெடுத்தது மிகப்பெரிய விஷயம்.
கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் வெளியான அபூர்வ ராகங்கள் படத்தின் வழியாகத் தமிழ்த்திரைக்குள் அடியெடுத்து வைத்த ரஜினி, படிப்படியாகப் பரிணாம வளர்ச்சி பெற்று கதாநாயகன் அந்தஸ்துக்கு உயர்ந்தார். கதாநாயகனாக வளர்ந்தவுடன் சாமானிய ரசிகர்களை ஈர்ப்பதில் ரஜினிகாந்த் கூடுதல் கவனம் செலுத்தினார். தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை, ரஜினி, கமல் என்கிற இருபெரும் நட்சத்திரங்களுக்கு இடையில்தான் போட்டி. அவர்கள் இருவருக்கு மட்டுமே ரசிகர்கள் அதிகம் என்று சொல்லப்படும்.
மன்னன் திரைப்படத்தில் விஜயசாந்தி , ரஜினிகாந்தை கன்னத்தில் அறைவது போல் ஒரு காட்சி இருக்கும். அந்த காட்சியை, மதுரை ரசிகர்கள் பல பேர் பார்க்கவே இல்லை. ஏன் என்ற கேள்வி எழலாம். காரணம், தனது தலைவரை விஜயசாந்தி அடிப்பதா என்கிற கோபம்தான்.
அப்படியொரு காட்சியை பார்க்கும் மனவலிமை ரஜினி ரசிகனுக்கு கிடையாது. இந்த காட்சி மட்டுமல்ல, எஜமான் படத்தில் ரஜினியை ஜஸ்வர்யா சாட்டையால் அடிப்பது போன்று ஒரு காட்சி இருக்கும்.அந்த காட்சியையும் ரசிகர்கள் பல பேர் பார்க்கவில்லை. இதுபோன்ற காட்சிகளை கூட்டம் அதிகமிருக்கும்போது சில திரையரங்குகளே ஒளிபரப்பாமல் நிறுத்திக்கொண்டன.
ரஜினியை திட்டுவது போன்ற காட்சி, அடிப்பது போன்ற காட்சிகளுக்கெல்லாம் திரையரங்குகள் சேதப்படுத்தப்படும். இது ஏதோ கற்பனை அல்ல. மதுரையில் பல திரையரங்குகள் ரஜினி பட ஓபனிங் காட்சிகளில் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன.
ரஜினி மீதான காட்டுத்தனமான அன்பு ஒரு புறம் என்றால், ரஜினியின் அருணாச்சலம் திரைப்படம் 100 நாள் ஓடி வெற்றிப் பெற்றதற்காக, அந்த திரையரங்கிற்கு ருத்திராட்சை சிலையை பரிசளித்து ரஜினி மீதுள்ள தெய்வீக அன்பை வெளிப்படுத்தினார்கள் ரசிகர்கள். ரஜினி ரசிகர்களின் ஆன்மிக அரசியல் அப்போதே தொடங்கிவிட்டது என்றுகூட சொல்லலாம். இதில் கவனிக்கவேண்டிய மற்றொரு விஷயம், அந்த ருத்திராட்ச சிலையை வைத்திருக்கும் திரையரங்கின் பெயர் “ஷா”. ஆம் அது ஒரு இசுலாமியருடைய திரையரங்கம். இன்றும் அந்த திரையரங்கை அந்த ருத்திராட்சத சிலை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது.
பாட்ஷா திரைப்படம் வெளியானதற்குப் பிறகு, பல ரஜினி ரசிகர்கள் முத்து பாட்ஷா, பழனி பாட்ஷா, முருகன் பாட்ஷா என விசித்திரமான மதநல்லிணக்கப் பெயர்களை தாங்கியவர்களாக மாறினார்கள். நாடி நரம்பெல்லாம் ரஜினி ரஜினி என உணர்வூட்டப்பட்ட ரசிகர்களால் மட்டுமே இப்படியெல்லாம் செய்யமுடியும்.
“இவன் பேருக்குள்ளே காந்தம் உண்டு உண்மைதானாடா “ என்கிற பாடல் வரிகள் ரஜினிக்கு அப்படியே பொருந்தும். தமிழ்நாட்டு ஆண்,பெண்,குழந்தைகள் என அனைவரையும் கவரக்கூடிய மந்திரத்தை ரஜினி கற்றார்.
அபூர்வ ராகங்கள் படத்தில் கோட்டுப் போட்டு கேட் திறக்கும் ரஜினிக்கு தெரியாது, நாம் திறந்தது வெறும் கேட் அல்ல, அது சொர்க்க வாழ்வுக்கான கதவு என்று. நல்ல கருப்பு, உழைக்கும் மக்களின் சாயலோடு இருக்கும் முகம்… என அதுவரை தமிழ் சினிமா கண்டிராத கதாநாயக தோற்றம். அதுவரை,அசோகன், நம்பியார் என வில்லன்களைக் கூட சிவப்பாக பார்த்து பழகிய தமிழ் மக்களை” நம்ம ஊரு சூப்பர் ஸ்டாரு ரஜினிகாந்த் கருப்புதான்” என்று பாட வைத்த பெருமை ரஜினிகாந்தையேச் சாரும்.
ரஜினிக்கு எடுத்தவுடன் கதாநாயகன் அங்கீகாரம் கிடைக்கவில்லை. ஆரம்பத்தில், வில்லன் கதாபாத்திரங்களே கிடைத்தாலும், அதனையும் ஸ்டைலாக செய்து அசத்தியவர் ரஜினி. இந்தியாவிலேயே ஒரு வில்லனுடைய மேனரிசத்தில் பெண்கள் மயங்கியது ரஜினிக்கு மட்டும்தான்.
பதினாறு வயதினிலே படத்தில் வரும் பரட்டையாகட்டும், ஆடு புலி ஆட்டம் படத்தில் ரஜினி என்கிற பெயரிலேயே வரும் கதாபாத்திரமாகட்டும், பெண்கள் மத்தியில் ரஜினிக்கு தனி முத்திரையை கொடுத்தது. ரஜினி ஸ்டைல் என்று வில்லன் ரஜினி சொல்லும் போது, எதிர்மறை கதாபாத்திரம் என்பதையும் தாண்டி பார்வையாளர்கள் ரசித்தனர். அதுவரை வில்லன்களாக இருந்த நம்பியார், வீரப்பா, அசோகன் போன்றோரை பார்த்து பயந்த ரசிகர்கள் மத்தியில் முதன் முதலாக ஒரு வில்லனின் ஸ்டைலை மக்கள் ரசிக்க ஆரம்பித்தனர். தமிழ் சினிமா வில்லன்கள் மரபில் ரஜினி ஒரு மைல்கல்.
வில்லனாக மக்கள் மனதில் இடம்பிடித்த ரஜினி, குணசித்திர காதாபாத்திரத்திலும் தனி முத்திரை பதித்தார். பைரவி, ஆறிலிருந்து அறுபது வரை போன்ற படங்களில் கதாநாயக பிம்பம் மட்டுமல்ல நல்ல குணசித்திர நடிகராகவும் தேர்ச்சிப் பெற்ற நடிப்பை வெளிப்படு்த்தியிருப்பார்.
கபாலியில் வயதான தோற்றத்தில் நடித்ததை பலரும் பாராட்டினார்கள். ஆனால், 30 வயதைக் கூட கடக்காத ரஜினிகாந்த், ஆறிலிருந்து அறுபது வரை படத்தில் குடும்ப பாரத்தை தூக்கிச் சுமக்கும் வயதான தோற்றத்தில் அசத்தியிருப்பார். அதில் இளைஞர், நாற்பது வயதுள்ள நடுத்தர கதாபாத்திரம், முதியவர் என மூன்று கதாபாத்திரத்திலும் அசாத்திய நடிப்பை வெளிப்படுத்துவார் ரஜினி.
மக்கள் நாயகனாக வலம் வருவதற்கு முன்னால், ரஜினி இயக்குனர் மகேந்திரனின் நாயகன். கிளாசிக் இயக்குனர், எதார்த்த படைப்பாளி என்று திரையுலகம் கொண்டாடும் மகேந்திரனின் ஆஸ்தான நாயகர் ரஜினிகாந்த்.
ஜானி படத்தில் நீங்கள் தான் கதாநாயகன் என்பதை ரஜினியிடம் மகேந்திரன் சொல்லும் பாங்கையும், ரஜினி அதனை எதிர்கொண்ட விதத்தையும் நானும் சினிமாவும் என்கிற நூலில் மகேந்திரன் அவ்வளவு அழகாக எழுதியிருப்பார்.
ஜானி, முள்ளும் மலரும் படத்தில் ரஜினியின் நடிப்பு உலகத்தரமானவை. பிற்கால மசாலா படங்களின் காரத்தின் வீரியம் அதிகமாக இருந்ததால், ரஜினிக்குள் இருக்கின்ற அற்புத கலைஞனை பலரும் பேசுவதே இல்லை.
சாதாரண நடிகனுக்கும் சூப்பர் ஸ்டாருக்கும் வித்தியாசமிருக்கிறது என்பதை ரஜினி மூலமாக உணர்த்திய படம் பில்லா. அந்த படத்தில் பில்லா ரஜினி எல்லா வித ஸ்டைல்களையும் கொண்ட கதாபாத்திரம்,மற்றொரு ரஜினி கதாபாத்திரம் சராசரியான வேடம். ஒரு சராசரி மனிதனின் உடல் மொழிக்கும் ரஜினியின் உடல்மொழிக்குமுள்ள வேறுபாட்டை ரஜினி அழகாக வேறுபடுத்திக் காட்டுவார். அந்த சராசரி கதாபாத்திரம் பில்லாவாக மாறும் அந்த காட்சியை நுணுக்கமாகப் பார்ப்பவர்களுக்கு அந்த வித்தியாசம் நன்றாகத் தெரியும்.
திரைத்துறைக்கு வந்து 5 வருடங்களில் ஸ்டைலான வில்லனாக, நவரசத்தையும் காட்டும் குணச்சித்திர நடிகனாக, பி அண்ட் சி சென்டர்களின் விருப்ப நாயகனாகவும் மாறிவிட்டார் ரஜினிகாந்த். முரட்டுக்காளை, ரஜினி இன்று அடைந்திருக்கும் உச்சத்திற்கான தொடக்கம். அந்த படத்தில் வரும் “பொதுவாக எம்மனதசு தங்கம்” என்கிற பாடல் இன்றைய ரஜினியின் அரசியல் ஆசைக்குத் தீனி போடும் விதமாக அமைந்துவிட்டது.
அதனைத் தொடர்ந்து, தனிக்காட்டு ராஜா, போக்கிரி ராஜா, ரங்கா, பாயும் புலி என தயாரிப்பாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் குறைந்தபட்ச உத்தரவாதம் கொடுக்கும் நடிகனாக, மாறினார் ரஜினிகாந்த். இயக்குனர் எஸ்.பி .முத்துராமன், பஞ்சு அருணாச்சலம் ரஜினிகாந்த் கூட்டணி பல வெள்ளிவிழா திரைப்படங்களை கொடுத்தது. முரட்டுக் காளையில் தொடங்கிய ஏவிஎம்மின் தொடர்பு சிவாஜி திரைப்படம் வரை நீடித்தது.
தீ படத்தில் ஒரு காட்சியில் ரஜினி ஒரு பொருளை ஸ்டைலாக தூக்கிப் போடுவார். அப்போது பாலாஜி, நீ சாதராண ஸ்டார் என்று நினைத்தேன். ஆனால், நீ ஒரு சூப்பர் ஸ்டார் என்று ஒரு பொறியை பற்ற வைப்பார். அந்த பொறி மக்கள் மனதில் காட்டுத் தீ போல் பற்றிக் கொண்டது.
விடுதலை படத்தில், ” நாட்டுக்குள்ளே நம்ம பத்திக் கேட்டுப்பாருங்க அம்மம்மா இவர்தான் சூப்பர் ஸ்டாருங்க” என்று ஒரு பாடல் வரும். அதெல்லாம் ரஜினிக்கென்று உருவாக்கப்பட்ட பாடல். அதன்பிறகு,”சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா ,சின்னக் குழந்தையும் சொல்லும்“, என்ற பாடலை அந்த காலகட்டத்தில் உச்சரிக்காத குழந்தைகளே இல்லை.
90களுக்குப் பிறகு சுரேஸ் கிருஷ்ணாவுடன் இணைந்து வெளியான அண்ணாமலை, வீரா, பாட்ஷா போன்ற படங்கள் ரஜினிக்கு அடுத்த கட்டம் என்று சொல்வதை விட ரஜினியின் உச்சக் கட்டம் என்றே சொல்லலாம்.
அண்ணாமலை படத்தில் ரஜினியின் பெயரை திரையிடும்பொழுது, சூப்பர் ஸ்டார் என்று வந்து போகும் அந்த எழுத்துக்களில் பரவசமாகாத ரசிகர்களே கிடையாது. அந்த டைட்டில் இசைக்குச் சொந்தக்காரர் இசையமைப்பாளர் தேவா. பின்னாளில் அதுவே ரஜினியின் அடையாளமாகிப் போனது.
96 க்கு பிறகு வந்த ரஜினி படங்களில் சற்று அரசியல் நெடி அடிக்க ஆரம்பித்தது. 96 தேர்தல் பிரச்சாரத்தில் மனோரமா ரஜினியை கடுமையாக தாக்கிப் பேசினார். அதன் பிறகு வெளிவந்த அருணாச்சலம் திரைப்படத்தில், மனோராமாவிற்கு வாய்ப்பு வழங்கி தனது பெருந்தன்மையை காண்பித்தார். அந்த படம் முழுவதும் மனோரமா ரஜினியின் ஸ்டைலை புகழ்ந்து கொண்டே இருப்பார்.
சந்திரமுகி 2005ம் ஆண்டின் மாபெரும் வெற்றி. சந்திரமுகி திரையிடப்பட்டது திரையரங்கா?கோவிலா? என்று ஆச்சரியப்படுமளவிற்கு பெண்கள் கூட்டம் அலைமோதியது என்று நாளிதழ்களில் விமர்சனம் வெளியானது. படத்தின் வெற்றிக்கு காரணம் ஜோதிகாவின் நடிப்பும், வடிவேலுவின் நகைச்சுவையும்தான் என்று ரஜினி பெருந்தன்மையுடன் கூறினார்.
அண்ணாத்தே முதல் காட்சி முடிவடைந்ததில் இருந்தே கடுமையான எதிர்மறை விமர்சனங்களையும், மீம்ஸ்களையும் எதிர்கொண்டது. ஆனால் பெரும்பாலான தியேட்டர்களில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியுள்ளது. பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்து வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. இதற்கு ஒரே காரணம் ரஜினி. ஒரு முறை ரஜினிகாந்த் படத்தை தியேட்டரில் பார்த்து விட வேண்டும் என்ற மக்களின் எண்ணமே அவரின் வெற்றிக்கான காரணம். 72 வயதை கொண்டாடும் ரஜினி, 40 ஆண்டுகளுக்கு முன் தனக்கு வழங்கப்பட்ட “சூப்பர் ஸ்டார் “ பட்டத்துக்கு பொருத்தமானவராக இன்றும் திகழ்கிறார் என்பதை யாராலும் மறுக்க முடியாது. பொன்விழா ஆண்டை நெருங்கும் தன்னுடைய திரைப்பயணத்தில் இன்றும் இந்திய சினிமாவின் மிகப்பெரிய உச்ச நட்சத்திரமாக ரஜினி கோலோச்சிக்கொண்டிருக்கிறார்.
ரஜினிக்கு கன்னடர் என்கிற அடையாளம் தமிழக சூழலில் அவ்வப்போது,தடைக்கல்லாகவே இருந்து வருகிறது.அந்த விசயத்தை உடைப்பதற்காகவே, “என்னை வாழ வைத்தது தமிழ்ப்பால் ” என்றும், “என் உடல் பொருள் ஆவியை தமிழுக்கும் தமிழருக்கும் கொடுப்பது முறையல்லவா”, “உப்பிட்ட தமிழ்மண்ணை நான் மறக்கமாட்டேன்” போன்ற பாடல் வரிகளை அமைக்கச் சொன்னார். இதுபோன்ற வரிகளுக்கு தமிழக திரையரங்குகளில் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. ஆனால்,கர்நாடகாவில் இதுபோன்ற வரிகளுக்கு திரையரங்குகள் அடித்து நொறுக்கப்படும் அல்லது தமிழ் என்ற வார்த்தையை மௌனமாக்கிய பின் ஒளிபரப்புவார்கள்.
ரஜினிகாந்தைப் பொறுத்தவரை 30 ஆண்டுகளாக அரசியல் ஆசையை வெளிப்படுத்தி வருகிறார். 1996 ல் முகம் காட்டி விலகி கொண்டார். தான் எதிர்த்த ஜெயலலிதாவை,” தைரிய லட்சுமி“ என பாராட்டினார். மோதல் போக்கு கண்ட பாமகவுடன் சமரசம் செய்துகொண்டார். ஆனால், இப்போது வரை அரசியல் கட்சி ஆரம்பிக்கவில்லை.
ரஜினிகாந்த்,” எஜமான் காலடி மண்ணெடுத்து நெற்றியிலே பொட்டு வைப்போம் “என்று பாடியபோது, கை தட்டி ஆர்ப்பரித்த ரசிகர்கள், அதே ரஜினிகாந்த், ”மேட்டுக்குடியின் கூப்பாடு இனி நாட்டுக்குள்ளே கேட்காது “என்று பாடியபோதும் கைதட்டி வரேவற்றார்கள்.
ரஜினி ரசிகர்களுக்கு தெரிந்த ஒரே விசயம் ரஜினியை ஆதாரிப்பது மட்டுமே. வலது சாரி கருத்தியல் தலித் கருத்தியல் என்ற எந்த கருத்தியலும் அவர்களுக்குத் தெரியாது. ஏனென்றால் அவர்கள் ரசிகர்கள்… ரஜினி ரசிகர்கள்.
ஹேப்பி பர்த்டே ரஜினிகாந்த்!