TamilSaaga

மகேஷ்பாபுவின் “சர்க்காரு வாரி பாட்டா” எப்படி இருக்கு? – தமிழ் சாகாவுக்கு இயக்குனர் ராசி அழகப்பனின் #Exclusive விமர்சனம்

சர்க்காரு வாரி பாட்டா மகேஷ்பாபு நடித்த தெலுங்கு படத்தின் சிறப்பு கண்ணோட்டம்

தெலுங்கு படத்தில் பாகுபலி R R R போன்ற pan-india படம் வந்த பிற்பாடு மகேஷ்பாபு தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் என்ன செய்யப் போகிறார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது வந்து ஸ்க்கிரீனை அலற விட்டு துவம்சம் செய்ய வந்திருக்கும் படம் தான் சர்க்காரு வாரி பாட்டா.. RRRஐ வெல்லுமா என்ற எதிர்பார்ப்புடன் எல்லோரும் தியேட்டர்களில் ரசிகர்கள் சென்று பார்த்தார்கள். அந்த வகையில் நானும் போய் பார்த்தேன்.

மகேஷ்பாபு நம்மூர் தளபதி விஜய்க்கு இணையான ஒரு நடிகர். ரசிகர் பட்டாளம் அதிகம் இருக்கிறது .
தியேட்டருக்கு போனால் “கம் ப்ளக் மகேஷ்காரு“ என்று கத்திக் கூச்சல் போட்டு ஆரவாரம் செய்வதை பார்க்க முடிகிறது.

மகேஷ்பாபு இந்த திரைப்படத்தில் மிகவும் பிரமாதமாகவே வருகிறார். இளமையாக இருக்கிறார். கச்சிதமான உடல் மொழி, ஸ்டைலிஷாக நடிக்கிறார். அவரிடம் எந்த குறையும் சொல்ல முடியாது. நல்ல அழகான நடிப்பு என்றுதான் சொல்லலாம்.

ஆனால் கதை தான் கொஞ்சம் இடிக்கிறது. சொன்ன விதம் அட போங்கப்பா எத்தனை காலம் இந்த கமர்ஷியல் ஹீரோ பார்முலாவை பார்த்துத் தொலைப்பது. ஜரகண்டி பாபு, ரியாலிட்டி காவாலி.
வாஜிக் ஏமெய்ந்தி?

அட அப்படி என்ன இடிபாடுகளுடன் வந்த கதையா என்று நீங்கள் கேட்கக்கூடும். கதையை கேளுங்கள்.

மகேஷ்பாபு அப்பா அம்மா வங்கியில் வாங்கிய 15 ஆயிரம் ரூபாய் கடனை கட்ட முடியாமல் தூக்குப் போட்டு இறந்துவிடுவார்கள். இதைப் பார்த்த மகேஷ்பாபு பின்னாளில் வளர்ந்து அமெரிக்காவில் சென்று மஹி ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் என்று பணம் கொடுத்து திருப்பி வட்டி வாங்கும் ஹீரோவாக மாறுகிறார்.

நம்மூரில் கடன் கொடுத்து வாங்க முடியாதா என்றெல்லாம் கேட்கக்கூடாது. வெளிநாட்டில் போய் கடன் கொடுத்து வாங்குவது என்பதே பலே கில்லாடியான வேலை தானே! அதை செய்தால் தானே டிபரண்ட்.

ஆரம்பத்திலேயே அதிரி புதிரி துவங்குகிறது. மகேஷ்பாபு காரில் செல்ல பெரிய ராபரிக் கூட்டம் கார்கள் பைக்கில் துரத்தி மடக்க.. யாருகிட் சின்னவயசுலேயே கழுத்துல் ஒத்த ரூபாய் பச்ச குத்திகிட்ட ஹீரோகிட்ட நடக்குமா? துரத்தி துரத்தி அடித்து ஒரு ரூபாய் கூட விடாமல் வசூல் செய்கிறார் மகேஷ்பாபு . சும்மா சொல்லக் கூடாது இரசிக்க முடிகிறது.

நம்மூர் சந்தானம் மாதிரியே மகேஷ்பாபுவுடன் கிஷோர் புகுந்து விளையாடுகிறார். உண்மையிலேயே பிரமாதமாக இருக்கிறது. ஹீரோயினை பற்றி சொல்லுங்கள் என்றால்… சொல்லி விடுவோமே!

நடிகர் திலகம் சாவித்திரியின் சுய வாழ்க்கையை பிரமாதமாக நடித்து பேரெடுத்த அதே கீர்த்தி சுரேஷ் அமெரிக்காவில் சீட்டு விளையாடும் இடத்தில பணம் கட்டி தோத்து போய் இருக்காங்க. அந்த பணம் கட்டி தோத்துப் போறதுக்கு ஈடுகட்டுவதற்காக மறுபடியும் 10,000 டாலர் கிடைச்சா அடுத்த வாரம் ஞாயித்துக்கிழமை சூதாடி திருப்பி கொடுப்பேன் என்று முழிக்கும் போது தோழிகள் “கவலையே படாத நம்மூரு பையன் பைனான்ஸ் நடத்தறான் என ஆலோசனை சொல்கிறார்கள்.

டாக்குமெண்ட் எதுவும் இல்லாமல் பணம் தர மாட்டார் மகேஷ், அதனால் ஒரு ஐடியா செய்கிறாள் கீ சு. கல்லூரி படிக்கும் பெண்ணாக சென்று அவன் மேல் இடித்து புத்தகங்கள் கீழே விழ மகேஷ்பாபு அவரை பார்க்க கீர்த்தி மகேஷ்பாபுவைப் பார்க்க… பின்னாடி இருந்து மியூசிக் டைரக்டர் தமன் ரவி மூட் பிளே பண்ண போங்கடா அதுக்கப்புறம் ரவி சீட்டிங் தான், காதல் பற்றிக் கொள்கிறது.

பிறகென்ன வழக்கமான கமர்ஷியல் பார்முலா உள்ள மேட்டர்தான் போனில் மகேஷ் மெசேஜ் அனுப்புவது கீர்த்தி திருப்பி அனுப்புவது. காதல் நாடகம் ஆடுவது. அவர் பணம் கொடுத்து ஏமாறுவது. டூயட். மஜாதான் போங்கோ…

ஒரு நாள் ஒருவன் பெண்ணுக்கு கிஸ் கொடுத்துக் கொண்டிருக்க – மகேஷ்“ என் பணம் கொடுத்துட்டு கிஸ் அடிடா” என அவன் அலறி ஓட மகேஷ் துரத்த கடைசியில் சூதாடும் இடத்தில் போய் நிற்கிறார். அங்கே ஹீரோயின் குடித்துக்கொண்டு சூதாடுகிறார். ஷாக்.

கீர்த்தி சுரேஷிடம் ஏமாந்து விட்டோம் என நினைத்து தன் நண்பருடன் சென்று கறாராக பணம் திருப்பி கேட்க – பளார் என அறைய
“ தர முடியாது போடா “ என்று பதில் சொல்ல –
“வாங்காமல் விடமாட்டேன் “ என்று சொல்ல –
உடனே கீர்த்தி சுரேஷ் அப்பாவிடம் போன் செய்து கொடுக்க அம்மா உன்னை அடிச்சானா ?” என் கேட்க,
“ஆமா ஆமா அடிச்சிட்டான்“. “அப்போ ஒரு பைசா கூட கொடுக்காத பார்த்துக்கோ “ என்று சொல்ல அய்ய ய்யோ அப்புறம் விடிவாரா ஹீரோ. 10,000 டாலர் வசூல் செய்வதற்காக அமெரிக்காவில் இருந்து ஆந்திராவுக்கு பறந்து ஓடி வந்து பணம் வசூலிக்க துவங்குகிறார்.

ராஜ்யசபா எம்பி சமுத்திரக்கனி ராஜேந்திரநாத் இடம் வசூல் செய்ய முயல ..

அவன் பலே கேடியாக் இருக்கிறான் என்ன செய்வது என தெரியாமல் முழிக்க அவனிடம் விடுவேனா பார் என்று வசூல் செய்வதற்கு போராடுகிறார் மகேஷ்பாபு.

சவால் சவாலை மிஞ்சும் சவால். நடுவே இண்டர்வெலில் ஒரு ட்விஸ்ட்.

பத்தாயிரம் டாலரில் ஆரம்பித்து 10 ஆயிரம் கோடி பணத்தை வசூல் செய்து திருப்பி வசூல் செய்வதுதான் மீதிக் கதை.

முதலில் முட்டிக் கொண்ட கீர்த்தி சுரேஷ் இந்தியாவுக்கு திரும்பி வந்து அவனோடு சமாதானம் ஆகி விடுகிறார். வழக்கமான கதைதான்.

தமிழில் வில்லனுக்கு – தெலுங்கில் இருந்து இறக்குமதி செய்வார்கள் .
அவரை சேஞ்ச் செய்து, இந்தமுறை தமிழிலிருந்து தெலுங்குக்கு இறக்குமதி செய்திருக்கிறார்கள் .
நன்றாக நடித்துக் கொண்டிருந்த சமுத்திரக்கனியை அங்கே வில்லனாக மாற்றிவிட்டார்கள். சமுத்திரகனி ஏமாற்றவில்லை நன்றாகவே செய்திருக்கிறார்.

நதியா இரண்டு மூன்று சீன்களில் வருகிறார், என்னடா என்று பார்த்தால் அந்த சமுத்திரக்கனி 10,000 கோடி வாங்கி போலி டாக்குமெண்ட் கொடுத்து மாட்டிக்கொண்ட அதிகாரிதான் நதியா .

நதியா வை மகேஷ்பாபு மீட்கிறார் அதுதான் ரிமார்க்கபுள் ட்விஸ்ட்.

இது ஒரு வரி கதை தான்.

ஒரு பேங்கில் இருந்து 10 ஆயிரம் கோடி பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றிய மிகப் பெரிய முதலாளி .
மீட்கிறான் ஹீரோ.

ஒரு வரியை முழு படமாக இயக்குனர் பரசுராம் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கிறார்.

மகேஷ்பாபுவுக்கு ஒன்று சொல்லவேண்டும்.
காலம் மாறிவிட்டது .
ரசனை மாறிவிட்டது .
நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் .
நல்ல கதையை எடுத்தால் நீங்கள் பாகுபலியை மிஞ்சி விடலாம் .

கேமராவும் பாடல்களும் சிறப்பாகத்தான் இருக்கிறது. ஆனால் என்ன செய்ய?

நம்மூர் சித்து ஸ்ரீராம் மிக அழகாகவே பாடி லைக்குகிறார்.
மகேஷ்பாபு வைப் பிடித்தவர்கள் போய் தாராளமாய் பார்க்கலாம் .
மற்றவர்கள் “இன்னும் சினிமாவை இப்படித்தான் எடுத்துக் கொண்டிருக்கிறார்களா ?” என்று பார்த்துவிட்டு வரலாம்.
பேஸட் லக் அகெய்ன்.


ராசி அழகப்பன்

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts