TamilSaaga

மரணத்தின் எல்லைக்கே சென்ற ரஜினிகாந்த்… கடைசி நேரத்தில் உயிரைக் காப்பாற்றி.. மரணக் கணக்கை திருத்தி எழுதிய சிங்கப்பூர் “மவுண்ட் எலிசபெத்” மருத்துவமனை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிங்கப்பூரின் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் கடந்த 2011 மே மாதத்தில் அனுமதிக்கப்பட்டார். சுமார் 46 நாட்கள் சிங்கப்பூரில் தங்கியிருந்து அவர் சிகிச்சை பெற்றபோது என்ன நடந்தது என்பதன் ரீவைண்ட்தான் இந்தக் கட்டுரை.

ராணா படப்பிடிப்பில் ரஜினி

முத்து, படையப்பா என இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரோடு பல பிளாக்பஸ்டர் ஹிட் படங்களைக் கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினி, அவரோடு இணைவதாக அறிவிக்கப்பட்ட படம்தான் ராணா. இந்தப் படத்தின் ப்ரீ-புரடக்‌ஷன் வேலைகள் முடிந்து ஷூட்டிங் தொடங்கிய நிலையில், 2011 ஏப்ரல் 29-ல் ஷூட்டிங்கின் முதல் நாளிலேயே ரஜினிகாந்துக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து மையிலாப்பூரில் உள்ள இசபெல்லா மருத்துவமனையில் 2011 மே மாதம் 3-ம் தேதி அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு சில நாட்கள் சிகிச்சைபெற்ற பின்னர், வீடு திரும்பிய ரஜினிக்கு மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

காய்ச்சல் மற்றும் நுரையீரலில் நீர்க்கோர்ப்பு போன்ற பிரச்னைகளால் அவதிப்பட்ட ரஜினிகாந்த் இரண்டாவது முறையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என அப்போது ஆங்கில நியூஸ் சேனல்கள் ஃபிளாஷ் செய்தன. இதையடுத்து தமிழக செய்தி சேனல்களும் அந்த செய்தியை வெளியிடவே, தமிழ்நாடு முழுவதும் பரபரத்தது. ரஜினி ரசிகர்கள் சென்னை நோக்கி வரத் தொடங்கினர்.

ஒரு கட்டத்தில் இசபெல்லா மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவர், அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு பின்னர், சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த மருத்துவமனையிலேயே அனைத்து வசதிகளும் இருக்கும் நிலையில், நகருக்கு ஒதுக்குப்புறமான ராமச்சந்திரா மருத்துவமனையில் திடீரென அவர் அனுமதிக்கப்பட என்ன காரணம்… அவரது உடல்நலனில் என்ன பிரச்னை போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டன.

மேலும் படிக்க – உலகுக்கே முன்னோடியாக 56 கட்டிடங்களில் “ஆச்சர்யம்” நிகழ்த்தப்போகும் சிங்கப்பூர் – உலக தண்ணீர் தினத்துக்கே இதுதான் பெருமை!

தமிழகத்தின் தலைநகரான சென்னை மாநகரின் முக்கியமான பகுதியில் இருக்கும் இசபெல்லா மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைபெறும் நேரத்தில், செய்தி சேனல்கள் அங்கிருந்து லைவ் வாகனங்கள் மூலம் அதிகமாக செய்தி பரப்பும் வாய்ப்பு இருப்பதாக ரஜினி தரப்பில் எண்ணப்பட்டது. இதையடுத்தே, கொஞ்சம் ஒதுக்குப்புறமாக இருக்கும் ராமச்சந்திரா மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர்.

மேலும், அது அதிநவீன மருத்துவ வசதிகள் அனைத்தும் கொண்ட பல்கலைக்கழக மருத்துவமனை என்பதும் கூடுதல் பலமாக அமைந்தது. அந்த காலகட்டத்தில் போரூரில் மேம்பாலப் பணிகள் நடந்து வந்ததால், போக்குவரத்து நெரிசல்களை எல்லாம் தாண்டி போரூர் மருத்துவமனைக்கு செய்தி சேனல்கள் வருவதும் ஓரளவுக்குக் குறையும் என்ற காரணமும் அப்போது சொல்லப்பட்டது.

அந்த மருத்துவமனையில் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும் தி.மு.க தலைவருமான மு.கருணாநிதி அனுமதிக்கப்பட்ட அதே அறையில் அனுமதிக்கப்பட்டு ரஜினிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், ஒரு கட்டத்தில் அவரின் சிறுநீரக செயல்பாடு திருப்தி அளிக்கும் வகையில் இல்லாததால், சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது.

சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனை

காய்ச்சல், நுரையீரல் நீர்க்கோர்ப்பு உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து ஓரளவு மீண்டு வந்த ரஜினிக்கு சிறுநீரகத்தில் இருக்கும் பிரச்னை கண்டறியப்பட்டது. இதையடுத்து அவருக்கு மேல்சிகிச்சையை சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் மேற்கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, 2011-ம் ஆண்டு மே மாதம் 28-ம் தேதி இரவு 10 மணியளவில் ரஜினி, சிறப்பு ஆம்புலன்ஸ் மூலம் சென்னை விமான நிலையம் சென்றார். அங்கிருந்து விமானம் மூலம் சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார். ரஜினி போரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அரசியல் பிரபலங்கள், அப்போதைய நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த், திரையுலகப் பிரபலங்கள் உள்பட ஏராளமான ரசிகர்கள் அவரை நேரில் சந்திப்பதற்காக மருத்துவமனை வந்தனர்.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் ஒரேயொரு தடுப்பூசி போட்டிருக்கும் ஊழியர்கள்.. சொந்த ஊர் சென்றுவிட்டு மீண்டும் சிங்கப்பூர் திரும்ப முடியுமா?

ஒரு கட்டத்தில் ரஜினியின் உடல்நிலை குறித்து நேரடியாக பத்திரிகைகளிடம் அவரது மனைவி லதா ரஜினிகாந்த், அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் தணிகாச்சலம் உள்ளிட்டோர் பேச வேண்டிய சூழல் ஏற்பட்டது. சிங்கப்பூர் செல்வதற்கு முன்னர், ரஜினி தனது குரலில் பேசி பதிவு செய்த ஆடியோவை அவரது மகள் சௌந்தர்யா வெளியிட்டார்.

அதில், “ஹலோ…. நான் ரஜினிகாந்த் பேசுறேன். நான் ’HAPPY’-யா போயிட்டு வந்துகிட்டு இருக்கேன் கண்ணுங்களா… நீங்கள் என் மேல காட்டுற அன்புக்கு நான் எண்ணத்தைத் திருப்பி கொடுக்கிறது… பணம் வாங்குறேன்… ஆக்ட் பண்ணுறேன்… அதுக்கே நீங்க என் மேல் இவ்வளவு அன்பு கொடுக்குறீங்கன்னு சொன்னா… உங்களுக்கு ’DEFINITE’-ஆ…. நீங்கள் எல்லாரும், என் ஃபேன்ஸ் எல்லாரும் ’THROUGH OUT THE WORLD’ தலைநிமிர்ந்து நடக்குற மாதிரி ஏதாவது செய்றேன்… கண்ணா… கடவுள் கிருபை எனக்கு இருக்கு… குருவோட கிருபை எனக்கு இருக்கு… எல்லாத்துக்கும் மேல என் கடவுள் போன்ற உங்கள் கிருபை எனக்கு இருக்கு… நான் சீக்கிரம் வருவேன்… ஓகே. . பை… குட்…’ என்று ரஜினி பேசியிருந்தார். அந்த ஆடியோ ரஜினி ரசிகர்களுக்கு உற்சாகம் கொடுத்தது.

சிங்கப்பூர் சென்ற ரஜினியோடு அவருக்கு ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை அளித்த மருத்துவர் குழுவும் பயணித்திருந்தது. ஆசியாவின் மிகச்சிறந்த மருத்துவமனைகளில் ஒன்றாகக் கருதப்படும் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

நோயாளிகளின் `Privacy’-யை மிகப்பெரியதாக மதிக்கும் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனை ரஜினிக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து தகவல் வெளியிட மறுத்துவிட்டது. இருப்பினும், சிறுநீரகக் கோளாறுக்கு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக அப்போது தகவல் கசிந்தது. பேசவே சிரமப்படும் நிலையில், சிங்கப்பூர் வந்த ரஜினிகாந்துக்கு மவுண்ட் எலிசபெத்தில் உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் உடல்நலன் தேறிவந்தாலும், இனிமேல் நடிப்பது சிரமம்தான் என்று ஒருதரப்பினர் பேசி வந்தனர்.

மேலும் படிக்க – துணிகளுக்கு மறைவில் நின்று “சுய இன்பம்” செய்த நபர்.. அவருக்கே தெரியாமல் வீடியோ எடுத்த மக்கள் – பின்வாசல் வழியாக தப்பியோட்டம்

ஆனால், நடந்ததோ வேறு. சிங்கப்பூரின் ஆகச்சிறந்த மருத்துவமனையாகக் கருதப்படும் மவுண்ட் எலிசபெத் மருத்துவர்கள் அவரைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டார்கள். அவருக்குக் கொடுக்கப்பட்ட உயர்தர சிகிச்சையின் விளைவாக மெல்ல மெல்ல சிறுநீரகப் பிரச்னை அவருக்கு சரியாகத் தொடங்கியது.

அதற்கு முன்னரே பல முக்கியப் பிரபலங்களுக்கு சிகிச்சை அளித்திருந்தது சிங்கப்பூரின் பெருமைமிகு மருத்துவமனைகளுள் ஒன்றான மவுண்ட் எலிசபெத். இந்தியாவில் இருக்கும் உத்தரப்பிரதேச மாநிலத்தை ஆண்ட சமாஜ்வாதிக் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த அமர்சிங்குக்கு இந்த மருத்துவமனையில்தான் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சிறுநீரகத்தில் ஏற்படும் ’renal failure’ எனப்படும் பிரச்னையால் பாதிக்கப்பட்ட ரஜினிகாந்துக்கு சிங்கப்பூரில் தனி கவனம் செலுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது. பிரைவசியோடு அவருக்குக் கொடுக்கப்பட்ட உயர்தர சிகிச்சையால், சிறுநீரகப் பிரச்னையில் இருந்து மெல்ல மெல்ல அவர் மீண்டு வந்தார். தமிழக மக்களால் சூப்பர் ஸ்டார் எனக் கொண்டாடப்படும் ரஜினியின் உடல்நலன் பூரணமாகக் குணமடைய சிங்கப்பூர் மருத்துவர்கள் அளித்த பங்களிப்பு முக்கியமானது. என்றென்றும் மறக்க முடியாதது.

சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 46 நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற்ற ரஜினி பூரண குணமடைந்து 2011 ஜூலையில் வீடு திரும்பினார். ஆசியாவின் மிகச்சிறந்த மருத்துவமனைகளில் ஒன்றான மவுண்ட் எலிசபெத், ரஜினியைக் குணப்படுத்தி இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது. அதன்பிறகு கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில், ரஜினிக்கு சிறுநீரகப் பிரச்னை வரவே இல்லை.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts