TamilSaaga

பட்டுக்கோட்டையில் பிறந்து… சிங்கப்பூரில் “வீரபாண்டிய கட்டபொம்மன்” ஆக உருவெடுத்த “தமிழன்” – 20 ஆண்டு கால போராட்டத்துக்கு கிடைத்த “அடையாளம்”

இந்த உலகில் தமிழர்களின் கால் படாத இடம் என்று ஒன்று உள்ளதா என கேட்டால் அது சற்று சந்தேகத்திற்கு உரிய கேள்வியே. அந்த அளவிற்கு நம் தமிழர்கள் உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் வசித்து வருகின்றனர், அதற்கு நம் சிங்கப்பூரும் விதிவிலக்கில்லை. அந்த வகையில் தமிழ்நாட்டில் பிறந்து சிங்கப்பூரில் வளர்ந்து இன்று பார்போற்றும் நடிகராக, சமூக பங்காளியாக பணியாற்றி வரும் ஒரு சிறந்த மனிதரை பற்றித்தான் காணவிருக்கிறோம்.

சிங்கப்பூரில் பல விருதுகள் பெற்றிருந்தபோதும் தற்போது தமிழகத்தில் திரைப்படங்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான Edison விருதினை பெற்று அசத்தியுள்ளார் நமது இந்த பதிவின் நாயகன் மதியழகன். சிங்கப்பூரிலும் சரி தமிழகத்திலும் சரி, ஏன் உலக அரங்கிலும் இவருக்கு அறிமுகம் தேவையில்லை. “தாயுமானவன்” என்ற ஒற்றை வார்த்தை இவர் வரலாற்றை சொல்லும். இவர் நமது தமிழ் சாகா சிங்கப்பூருக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தனது வாழ்க்கை பயணத்தை பற்றி பகிர்ந்துள்ளார்.

“தமிழகத்தின் தஞ்சை தரணியில் பட்டுக்கோட்டையில் பிறந்தேன், படித்தது வளர்ந்தது எல்லாமே சிங்கையில் தான். 12 வயதில் மேடை ஏறினேன் அதன் பிறகு எனது 35வது வயதில் தான் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதுவே என் முதல் கேமரா அனுபவம். அஜித்தின் “பூவெல்லாம் உன் வாசம்” படத்தில் தான் எனது தமிழ் சினிமா பயணம் துவங்கியது. சுமார் 20 ஆண்டுகளாக சின்னச்சின்ன கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து வந்தேன். இப்பொது “பென்குயின்” எனக்கு ஒரு தனி அடையாளத்தை கொடுத்துள்ளது.

நடிப்புக்காக சிங்கப்பூரில் பல விருதுகள் பெற்றுள்ளேன். ஆசிய அளவிலும் ஒரு விருதினை பெற்றுள்ளேன் ஆனால் தமிழ் மக்களிடம் எனக்கு அங்கீகாரம் கிடைப்பது இதுவே முதல் முறை. மட்டில்லா மகிழ்ச்சி எனக்கு, தமிழ் மக்களுக்கும், இந்த வாய்ப்பை தந்த அனைவருக்கும் குறிப்பாக Edison விருது வழங்கும் குழுவினருக்கும் நன்றி”.

“இத்தனை ஆண்டுகளாக திரைத்துறையில் நடித்தும், நடிப்பினை கற்றுக்கொடுத்தும் நகர்கிறேன், நல்ல சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் எனது திறமைகளை வெளிப்படுத்த இன்றளவும் காத்திருக்கேன். மனைவி மற்றும் எனது மகளை பிரியமுடியாத காரணத்தால் தமிழகத்துக்கு புலம்பெயர முடியாத ஒரு நிலை. ஆனால் தமிழில் இப்பொழுது நிறைய படங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றது, கூடியவிரைவில் அந்த படங்கள் குறித்த தகவல்களை வெளியிடுகிறேன்.”

“நடிப்பு ஒருபுறம் இருக்க, நம் தமிழர்களுக்கு உதவ வேண்டும் என்று உறுதியில் நான் துவங்கியது தான் ARPANA (அர்பணா) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம். கடந்த 8 ஆண்டுகளாக இந்த நிறுவனம் மூலம் பலருக்கு உதவி வருகின்றேன்” என்றார் மதியழகன். சிங்கப்பூரில் நடைபெறும் “பிரதான விழாவில்” வழங்கப்படுகின்ற சிறந்த நடிகருக்கான விருதினை பலமுறை பெற்றவர் தான் நடிகர் மதியழகன்.

12 வயதில் நாடகங்களில் நடிக்கத் தொடங்கிய அவர், சிங்கப்பூரில் அன்றைய காலகட்டத்தில் அரங்கேறிய பல நாடகங்களில் நடித்துள்ளார். வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தில் எட்டப்பனாக நடிக்க தேர்வு செய்பட்டு, பின் வீரபாண்டிய கட்டபொம்மனாகவே நடித்து மக்களின் பாராட்டை பெற்றார். அப்போதே அப்படத்தின் வசனங்கள் எல்லாம் இவருக்கு அத்துப்படியாம்.

நாடங்களில் அசத்தி வந்த மதியழகன் அடுத்தகட்டத்துக்கு செல்ல காரணமாக இருந்தது சிங்கப்பூர் கலைஞர் சங்கம் என்றே கூறலாம். அதன் பிறகு இந்திய கலைஞர் சங்கம் வழியாக வானொலி நாடகத்திற்கு செல்ல வாய்ப்பு கிடைக்க மர்மமேடை உள்ளிட்ட பல நாடகங்களில் நடிக்கத் துவங்கினார். நடிப்பில் ஜொலிக்க துவங்கிய இவருக்கு விருதுகள் வந்து குவிந்தன.1999, 2003 மற்றும் 2004ம் ஆண்டுகளில் பிரதான விழாவில் சிறந்த நடிகருக்கான விருதுகள் கிடைக்க 2006ம் ஆண்டு ஆசியாவிலேயே சிறந்த நடிகர் என்ற விருதும் கிடைத்தது.

அதன் பிறகு தனது 35வது வயதில் தமிழ் சினிமாவில் களமிறங்க வாய்ப்பு கிடைத்தது, அஜித் அவர்களின் பூவெல்லாம் உன் வாசம் என்ற படத்தின் மூலம் 2000மாவது ஆண்டு சினிமாவில் கால்பதித்தார் மதியழகன். அதன் பிறகு சிங்கையில் குருஷேத்ரம், பறந்து செல்லவா, ஜிப்பா ஜிமிக்கி, காஞ்சனா 2 மற்றும் Monkey Man என்ற ஹாலிவுட் படத்திலும் நடித்துள்ளார் மதியழகன். இறுதியாக 2020ம் ஆண்டு ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் வெளியான பென்குயின் என்ற படத்தில் ஒரு நெகடிவ் ரோல் ஏற்று நடித்து நம்மை மெய்சிலிர்க்க வைத்தார். Best Character Artist Overseas என்ற எடிசன் விருதும் இந்த படத்திற்கு வழங்கப்பட்ட விருது என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளித்திரை நடிப்பு மட்டுமில்லாமல் 2008ம் ஆண்டு பிரபல ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் வெளியான காக்கி மற்றும் தாயுமானவன் என்ற நாடகங்களிலும் நடித்துள்ளார் மதியழகன். தற்போது அதிக அளவில் தமிழ் படங்களில் நடிக்க துவங்கியுள்ள மதியழகன் ARPANA என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகின்றார் குறிப்பாக உதவி தேவைப்படும் தமிழ் உள்ளங்களுக்காக இந்த நிறுவனத்தை அவர் நடத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts