சிங்கப்பூரைப் பொருத்தவரை பல கலாச்சாரம் கொண்ட மக்கள் இங்க வசிக்கறாங்க! பல நாடுகள்ல இருந்து இன்னமும் மக்கள் வந்த வண்ணம் தான் இருக்காங்க. முக்கியமா இந்திய மக்கள் அதிலும் குறிப்பா தமிழ் மக்கள் அங்க ஏராளமா வாழுறாங்க. சிங்கப்பூர் அரசாங்கமே தமிழ் மக்களையும் சிங்கப்பூர் தமிழ் கலாச்சாரத்தையும் அதிகாரப்பூர்வமா அந்த நாட்டோட கலாச்சாரங்களுள் ஒன்றா அறிவிச்சு இருக்காங்க.
அப்படிப்பட்ட இடத்துல நம்ம தமிழ் மரபு உணவுகள் கிடைக்காம இருக்குமா! சுவையான உணவுன்னா பலர் மாமிச உணவுகள சொல்லுவாங்க. ஆனால் சைவ உணவுலயும் பல சுவை இருக்குனு சிலருக்கு தான் தெரியுது.
அதுவும் ஒரு நாட்டோட கலாச்சார உணவுகளை சுவை மற்றும் மரபு மாறாம மற்ற நாட்டுல கொண்டு சேர்க்கற விஷயம் உண்மையாவே சிறப்பு தான். அப்படி சிறப்பு வாய்ந்த ஒரு சைவ உணவு விடுதிய பத்தி தான் இந்த பதிவு!
சிங்கப்பூர் மக்களுக்கு நடுவே இந்திய கலாச்சாரம் என்பது பிரிக்க முடியாத ஒன்று! இந்திய உணவுகளும் அப்படிதான், அப்படி சிங்கப்பூர் வாழ் இந்தியர்களுக்காக 1924-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது தான் சிங்கப்பூர் ஆனந்த பவன்!
மேலே சொன்னது போல சைவ உணவுல சிறந்த சுவை இவங்க கிட்ட இருக்கு. சுவை மட்டுமில்ல நம்ம தென்னிந்தியாவின் மரபு மற்றும் பல வடா இந்திய உணவுகள்-னு இந்தியாவின் மிக விரும்பப்படும் உணவுகள் அனைத்தும் இங்க கிடைக்கும்.
தொடங்கப்பட்ட வருஷத்தை பார்த்ததும் யோசிச்சு இருப்பிங்க, ஆமாம்! இந்த உணவு விடுதி தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட 100 வருடங்கள் ஆகுது. 100 வருடமா அந்த பெயரையும் புகழையும் சுவை மாறாம காக்கிறது அவ்வளவு லேசான காரியமில்ல.
அப்படிப்பட்ட 100 வருட பழமையான உணவு விடுதிக்கு ஓரு அசைவ உணவை விரும்பறவங்க போனா அவங்க ரியாக்க்ஷன் எப்படி இருக்கும்?
தெரிஞ்சுக்கலாம் வாங்க! பொதுவா அசைவம் சாப்பிட்டே பழகினவங்களுக்கு சைவ உணவுகள் அவ்வளவு சந்தோசத்தை தராது. “இப்பயே முடிவு பண்ணிடாதிங்க இதுக்கு மேல தான் கதையே தொடங்குது.”
அப்படி அசைவ விரும்பியான டெனிஸ் டான் என்ற சிங்கப்பூர் பெண் ஒருவர் நம்ம ஆனந்தபவன் உணவை ருசிக்க விரும்பி கடைக்கு போனாங்க. கூட துணைக்கு நட்சத்திர சமையல் கலைஞரான SR பாலா வையும் கூட்டிட்டு போனாங்க.
அங்க அவங்கள வரவேற்றது மூன்றாம் தலைமுறை ஓனர் விரேன். இரண்டு தலைமுறை தாண்டி மூன்றாம் தலைமுறையினர் தான் தற்பொழுது இந்த உணவு விடுதியை இயக்கறாங்க. சிங்கப்பூர் சுதந்திரம் அடையும் முன்னமே இந்த ஹோட்டல் தொடங்கப்பட்டதால இது மிகவும் பிரபலமான உணவு விடுதியா இனமும் இருந்து வருது. சிலேகி ரோட்டில் உள்ள எலிசன் கட்டிடத்துல தான் முதன் முதல்ல இந்த உணவு விடுதி தொடங்கப்பட்டிருக்கு. பல காலமா உணவு விடுதி கீழயும் குடும்பம் மேலேயும் நந்துட்டு வந்திருக்கு. அதன்பிறகு சிங்கப்பூரில் ஏற்பட்ட கட்டுமான வளர்ச்சி காரணமா அந்த கட்டிடத்தில் இருந்து காலி செய்யப்பட்டு மற்றொரு இடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுச்சு.
என்னதான் நினைவுகள் பல அங்க இருந்தாலும் காலத்துக்கு ஏற்றாற்போல மாறி தானே ஆகணும் அப்படி மாறின பின்பு தற்பொழுது 5 கிளைகள் கொண்டு இயங்கி வருது. முதல் உணவு விடுதி 1924 ல் தொடங்கப்பட்டு, அப்பொழுது நடந்த உள்நாட்டு சண்டைகளுக்கு நடுவே இயங்கி, அடுத்த கிளையை 1996-ல செரகூன் சாலையில தொடங்கினாங்க.
அப்பொழுது தான் சுயசேவை என்ற விஷயத்தையும் உள்ள கொண்டுவந்தாங்க. அடுத்ததா 1999 ல பஃபல்லோ சாலை, 2003 ல சையது ஆல்வி சாலை மற்றும் 2009 ல சாங்கி விமான நிலையம்னு இன்னைக்கு மொத்தமா 5 இடங்கள்ல இந்த பாரம்பரியம் உணவுகளை பரிமாறிக்கிட்டு இருக்கு.
பழைய பாரம்பரியம் மட்டுமில்லாம புதிய தொழில்நுட்பங்களையும் சமையல் கலையில் புகுத்தி இன்று வரை சமையலில் சிறந்து விளங்கி வராங்க.
அடுத்ததா நம்ம ஆனந்த பவனில் டெனிஸ் டான் அவர்களுடைய அனுபவம் பற்றி பாப்போம்!
செஃப் SR பாலா சொல்லி முதல்ல அவங்க சாப்பிட்ட டிஷ் தாஹி பூரி. வடா இந்திய உணவானு நெனைக்காதிங்க இங்க வட இந்திய, தென் இந்திய மற்றும் சீன உணவுகள் கூட கிடைக்கும். அதுல குட்டி குட்டி பூரியில உருளைக்கிழங்கு மசாலா தயிர் மற்றும் சேவ் வைத்து செமயா குடுத்து இருக்காங்க!
இரண்டாவதா அவங்க சாப்பிட்ட உணவு செட் தோசை! தென்னிந்திய உணவுலயே தவிர்க்க முடியாத ஒன்னு தோசை. ஆனா ஆனந்த பவன் ஸ்பெஷல் செட் தோசைக்கு சாப்பிட்ட முதலே நீங்க பெரிய விசிறி ஆய்டுவீங்க! டெனிஸ் டான் மாதிரி!
இவங்க ஸ்டைல் செட் தோசைல மாவு புளிக்க வைத்து பயன்படுத்த மாட்டாங்க. அவல், புழுங்கல் அரிசி, வெந்தயம் எல்லாம் சேர்த்து அரைத்து அந்த மாவுல மஞ்சள் தூள் சேர்த்து அந்த மனத்தோடவே ரெண்டு தோசை ஊத்தி அதுக்கு நடுவுல காய்கறி வைத்து, சாம்பார், குருமா மற்றும் இரண்டு வகையான சட்னி என மொத்தம் 5 வகையான சைடு-டிஷ் கொண்டு பரிமாறப்படுது.
தோசை பற்றி தெரிந்த நண்பர்கள் இந்த குறிப்புகள வச்சே சுவையை உணர்ந்திடுவாங்க! என்ன நண்பர்களே நாக்குல எச்சில் ஊருதா….
சரி! அடுத்ததா டென்னிஸ் சாப்பிட்டது நம்ம பிரதான மதிய உணவான மீல்ஸ்! சாதம், சாம்பார், அப்பளம், பாயாசம் , புளிக்குழம்பு, கூட்டு, பொரியல் என ஒரு முழுமையான மீல்ஸ். அறுசுவைகளும் ஆக்யூரெட்டா இருந்துச்சுனு நாங்க சொல்லல சாப்பிட்ட டென்னிஸ் தான் சொன்னாங்க!
இப்படி ஆனந்த பவன்ல அவங்க சாப்பிட்ட அனைத்து உணவுகளும், சைவ உணவுகளின் சுவையையும், இந்திய உணவுகளின் பாரம்பரியத்தையும் அவங்களுக்கு நல்லாவே உணர்த்தியிருக்கும்!
இந்த பழமை மாறா பவனில் சைவம் மட்டுமல்ல, ஜெயின் மற்றும் வீகன் உணவுகளும் கிடைக்குது. நீங்க சிங்கப்பூர் வாழ் மக்களா இருந்தாலும் சரி அப்பப்ப சென்று வரும் பயணியா இருந்தாலும் சரி அடுத்த முறை ஆனந்த பவன் செல்ல மறக்காதீங்க! நன்றி!