TamilSaaga

New year Rasi Palan 2022: சிங்கப்பூரில் வேலைப் பார்க்கும் வெளிநாட்டு தொழிலாளர்கள்.. ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் இந்த புதிய ஆண்டு எப்படி இருக்கும்?

கிருமிதொற்று 2021ஆம் ஆண்டில் நிறைய பேரின் பொருளாதார நிலையை பாதித்தது. நிறைய பேருக்கு வேலை இழப்பு ஏற்பட்டது. பிறக்கப் போகும் புத்தாண்டில் பொருளாதார வளம் எப்படி இருக்கும் சிங்கப்பூரில் வசிக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் வேலையில் யாருக்கு புரமோசன் கிடைக்கும். தொழிலில் செய்யும் முதலீடுகள் யாருக்கு லாபத்தை கொடுக்கும் என்று பார்க்கலாம். மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிகளில் பிறந்தவர்களுக்கு இது பொதுவான பலன்தான்.

மேஷம்

மேஷ ராசி நேயர்களே 2022 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். தொழில் ஸ்தானத்தில் இணைந்திருந்த சனி, குருவினால் கடந்த காலங்களில் வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். நிறைய சங்கடங்களையும் சவால்களையும் சந்தித்து இருப்பீர்கள். பிறக்கப் போகும் புத்தாண்டில் வேலையில் புதிய வெற்றிகளை அடைவீர்கள். உங்கள் ராசிக்கு முக்கியமான கிரகங்களான குரு, சனி, ராகு கேதுவின் சஞ்சாரம் சாதகமான நிலையில் உள்ளது. வேலையில் நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். சிலருக்கு புதிய வேலை கிடைக்கும். குரு பகவான் லாப ஸ்தானத்திலும் விரைய ஸ்தானத்திலும் பயணிக்கிறார். தொழிலில் அதிக லாபத்தை அடைவீர்கள். அதே நேரத்தில் இந்த ஆண்டு நிறைய செலவுகளையும் சந்திப்பீர்கள். சுப விரைய செலவுகளாக மாற்றுங்கள். ராகு கேதுவின் மாற்றங்களும் நிறைய பண வரவை தரும். வேலையில் புரமோசனைத் தேடித்தரும். அச்சம் நீங்கும் ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே உங்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துக்கள். பிறக்கப்போகும் புத்தாண்டு உங்களுக்கு நிறைய நன்மைகளைத் தரப்போகும் ஆண்டாக அமையப்போகிறது. குருவின் பயணம் இந்த ஆண்டு தொழில் ஸ்தானத்திலும் லாப ஸ்தானத்திலும் இருப்பதால் வேலையில் சில மாதங்கள் சிக்கலாக இருந்தாலும் ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும். நிறைய சம்பளத்தில் புதிய வேலை கிடைக்கும். சனியின் சஞ்சாரமும் சாதகமாக இருப்பதால் வெளிநாடு பயணங்கள் நன்மையைத் தரும். சிங்கப்பூரில் வேலையிழந்து சொந்த நாடு திரும்பியவர்களுக்கு மீண்டும் சிங்கப்பூரில் நல்ல வேலை கிடைக்கும். ராகு கேதுவின் இடப்பெயர்ச்சியும் சாதகமாக உள்ளதால் அதிக பண வரவு வரும் கடன் பிரச்சினைகள் நீங்கும். நோய் பாதிப்பில் இருந்து விடுதலை கிடைக்கும். எதிர்பார்த்து காத்திருந்த சம்பள உயர்வும் பதவி உயர்வும் தேடி வரும். இந்த ஆண்டு ரிஷப ராசிக்காரர்களுக்கு சவால்களை சமாளிக்கும் ஆண்டாக அமைந்துள்ளது.

சிங்கப்பூர் சாலை பாதுகாப்பு விருதுகள் – சிறந்த டிரைவர்கள் பிரிவில் விருதுகளை குவித்த “தமிழர்கள்” – குவியும் பாராட்டு

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 2021ஆம் ஆண்டு சோதனைகள் நிறைந்த ஆண்டாக இருந்தது. அஷ்டமத்து சனி, அஷ்டமத்து குரு என கடந்த காலங்களில் நிறைய சங்கடங்களை சந்தித்து இருப்பீர்கள். இனி உங்களுக்கு அற்புதங்கள் நிகழ்த்தப்போகும் ஆண்டாக 2022ஆம் ஆண்டு அமைந்துள்ளது. அண்டை நாடான இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு வந்திருப்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கை கூடி வரும். வியாபாரம் தொழிலில் லாபம் அதிகரிக்கும். மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு கடந்த காலங்களில் இருந்த மந்த நிலை நீங்கும். புதிய வியாபாரம் தொடங்கவும் நல்ல காலம் கை கூடி வந்துள்ளது. படித்து விட்டு நல்ல வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு புதிய வேலை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.

கடகம்

கடக ராசிக்காரர்களே உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த ஆண்டு நீங்கள் நிறைய சாதனைகள் புரியப்போகும் ஆண்டாக இருக்கப்போகிறது. உங்களின் பொருளாதார நெருக்கடிகள் நீங்கும். கண்டச்சனி காலமாக இருந்தாலும் மன சங்கடங்கள் நீங்கும். நோய்கள் நீங்கும் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். உங்களுக்கு தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கும். 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரைக்கும் வேலை செய்யும் இடங்களில் கவனமாக இருப்பது நல்லது. ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு பணியிடங்களில் இருந்த சிக்கல்கள் நீங்கும். சிங்கப்பூரில் வசிக்கும் கடக ராசிக்காரர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான லாபம் கிடைக்கும். தொழில் ஸ்தானத்தில் அமரப்போகும் ராகு பகவானால் வெளிநாட்டுப் பயணங்களும் சாதகமாக அமையும். பணம் விசயத்தில் கவனமும் நிதானமும் தேவைப்படும். கிருமித்தொற்று பரவும் காலம் என்பதால் ஆரோக்கியத்தில் கவனமும் அக்கறையோடும் இருப்பது அவசியம்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே உங்களுக்கு அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். குருபகவானின் சஞ்சாரமும் பார்வையும் உங்களுக்கு சாதகமான நிலையைத் தரப்போகிறது. கடந்த காலங்களில் வேலை செய்யும் இடத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கும். கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும் காலம் கை கூடி வந்துள்ளது. பெருந்தொற்று காலத்தில் வேலை தொழில் வியாபாரத்தில் நிறைய நஷ்டங்களை சந்தித்த உங்களுக்கு இனி வரும் காலம் லாபங்கள் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது. கனவுகள் நனவாகும் காலம் கை கூடி வரப்போகிறது சனிபகவான் சஞ்சாரத்தால் பொருளாதார நெருக்கடிகள் நீங்கும். கடன் பிரச்சினைகள் தீரும். ராகு கேதுவின் பயணத்தால் புதிய முயற்சிகளில் வெற்றிகள் கிடைக்கும். மன மகிழ்ச்சி அதிகரிக்கும் ஆண்டாக 2022ஆம் ஆண்டு அமையப்போகிறது. வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகளும் பதவி உயர்வு தேடி வரும் வருமானம் அதிகரிக்கும். முன்னேற்றப்பாதையில் செல்வீர்கள். ஐடி துறையில் வேலை செய்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும் கூட்டுத் தொழில் சிறப்படையும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே உங்களின் கவலைகள் நீங்கும் ஆண்டாக 2022ஆம் ஆண்டு அமைந்துள்ளது. உங்களுக்கு புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். கடந்த காலங்களில் வேலையிழப்பு, பொருளாதார நெருக்கடிகளை சந்தித்த உங்களுக்கு பிறக்கப் போகும் புத்தாண்டு புத்துணர்ச்சி நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது. ஏப்ரல் மாதம் வரை குருவின் பயணம் சாதகமாக இல்லை என்பதால் கிருமித்தொற்று பரவும் இந்த காலத்தில் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். வியாபார நுணுக்கங்களை கற்றுத் தேர்ந்து அதை வெற்றிகரமாக செயல்படுத்துவீர்கள். பணியிடங்களில் உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு ஆண்டின் முற்பகுதியில் சில சோதனைகள் வந்தாலும் ஆண்டின் பிற்பகுதியில் மன மகிழ்ச்சி நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது.

துலாம்

துலாம் ராசிக்காரர்களே புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். இந்த புத்தாண்டில் உங்களுக்கு நெருக்கடிகள் நீங்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். புதிய வேலைக்காக முயற்சி செய்யலாம். அலுவலகத்தில் மேலதிகாரிகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் சிக்கல்கள் நீங்கும். தொழில் சார்ந்த அனுபவங்கள் அதிகரிக்கும். உங்களுக்கு கடந்த காலங்களில் வியாபாரத்தில் இருந்த நெருக்கடிகள் முடிவுக்கு வரும். தேவையற்ற முதலீடுகளைத் தவிர்த்து விடவும். ராகு கேதுவின் பயணங்களால் நிறைய பணம் சம்பாதிக்கப்போகிறீர்கள். சனிபகவானும் சாதகமான வீட்டிற்குச் செல்வதால் உங்களின் புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். இந்த ஆண்டு வெற்றியை நோக்கிய பயணம் தொடங்கப்போகிறது.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே உங்களுக்கு புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். கடந்த காலங்களில் சாதகமற்ற கிரகங்களின் சஞ்சாரங்களினால் வேலையிழப்பை சந்தித்தீர்கள். இந்த ஆண்டு கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும். பொருளாதார நெருக்கடிகள் நீங்கும். அதே நேரத்தில் உங்களின் பயணத்தில் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைப்பது அவசியம். வேலையில் புதிய வெற்றியை அடையப்போகிறீர்கள். அலுவலகத்தில் புதிய பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் இருப்பவர்கள் செய்யும் முதலீடுகளில் கவனமும் நிதானமும் தேவை. சுய தொழில் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் மூலம் லாபம் அதிகரிக்கும். அண்டை நாடுகளில் இருந்து சிங்கப்பூரில் பணிக்காக வந்திருப்பவர்களுக்கு இது நல்லதொரு ஆண்டாக அமைந்துள்ளது. கடந்த காலங்களில் தாய்நாடு திரும்பிய விருச்சிக ராசிக்காரர்கள் மீண்டும் சிங்கப்பூருக்கு வர முயற்சி செய்யலாம் வெற்றி கிடைக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே, உங்களுக்கு புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். வாழ்க்கையே போர்க்களம் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். பிறக்கப்போகும் புத்தாண்டு உங்களுக்கு உற்சாகமான ஆண்டாக அமையப்போகிறது. பொருளாதாரத்தில் இருந்த மந்தநிலை நீங்கப்போகிறது. செலவுகள் கட்டுக்குள் இருக்கும். திட்டமிட்டு செலவு செய்யப்போகிறீர்கள். சொந்த தொழில் தொடங்குவதற்கான காலம் வந்து விட்டது என்றாலும் சில காலங்கள் வேலைக்கு செல்வதுதான் நன்மையைத் தரும். வியாபாரத்தில் அதிக அளவில் முதலீடுகள் செய்து நஷ்டத்தை சந்திக்க வேண்டாம். வேலையில் நல்ல மாற்றங்கள் கிடைக்கும். கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக்கெள்ளுங்கள். ஏழரைச் சனி காலம் என்பதால் கவனமாக செயல்பட வேண்டும். குரு பகவானின் பயணமும் பார்வையும் நன்மையை தரும். கிருமி தொற்று பரவும் காலமாக இருப்பதால் உங்களுடைய ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.

மகரம்

மகர ராசிக்காரர்களே உங்களுக்கு மகிழ்ச்சிகரமான புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். கடந்த காலங்களில் தேவையற்ற சம்பவங்கள் நடைபெற்று உடல் ஆரோக்கியத்திலும் மனரீதியாகவும் சில பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கலாம். பிறக்கப்போகும் புத்தாண்டில் உங்களுக்கு மனம் மகிழ்ச்சியடையும் வகையில் சம்பவங்கள் நடைபெறும். இந்த ஆண்டு உங்களின் பொருளாதார வளம் கூடும் செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். தொழிலில் நஷ்டத்தை சந்தித்து வந்த உங்களுக்கு புதிய யுக்திகளைப் பயன்படுத்தி லாபத்தை அடையப்போகிறீர்கள். தொழில் வியாபாரத்தை இடமாற்றம் செய்வதற்கான காலம் வந்து விட்டது. திறமையானவர்களின் உதவியோடு தொழில் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். வேலையில் இருப்பவர்களுக்கு சில சிக்கல்கள் நீடிக்கத்தான் செய்கிறது. திறமைக்கு ஏற்ற மதிப்பும் அங்கீகாரமும் கிடைப்பதில் கால தாமதம் ஏற்படும். கிருமி தொற்று பரவும் காலமாக இருப்பதால் உங்கள் புதிய முயற்சிகளை ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது.

“ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது..” – அதிகரிக்கப்படும் சிங்கப்பூர் காவல்துறைக்கான அதிகாரங்கள்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே, உங்களுக்கு புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். கடந்த காலங்களில் நிறைய செலவுகளை சந்தித்து இருப்பீர்கள். பொருளாதார நெருக்கடிகளையும் சந்தித்து இருப்பீர்கள் பிறக்கப்போகும் புத்தாண்டு பொருளாதார நெருக்கடிகள் நீங்கும் ஆண்டாக அமைந்துள்ளது. உங்களின் புதிய முயற்சிகளுக்கு வெற்றிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் வருகை அதிகரிக்கும். அதன் மூலம் லாபமும் அதிகரிக்கும். வேலையில் இருப்பவர்கள் கடந்த காலங்களில் சில சோதனைகளை சந்தித்து இருப்பீர்கள். இந்த ஆண்டு திறமைகளை அதிகரித்து கூடுதல் வெற்றிகளைப் பெறுவீர்கள். குடும்பத்தோடு இணைந்து புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் தேடி வரும். சிங்கப்பூரை விட்டு வேறு நாடு சென்றவர்கள்,தாய்நாடு சென்றவர்கள் மீண்டும் சிங்கப்பூர் திரும்புவதற்கான நேரம் கை கூடி வந்துள்ளது.

மீனம்

மீன ராசிக்காரர்களே உங்களுக்கு 2022ஆம் ஆண்டு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். லாப ஸ்தானத்தில் இருந்த குருவும் சனி பகவானும் உங்களுக்கு தொழிலில் நிறைய லாபத்தை கொடுத்திருப்பார்கள். பண வருமானமும் இரட்டிப்பாக இருந்திருக்கும். இனி உங்களுக்கு சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். வேலையில் சுமை கூடும். அழுத்தமும் அதிகரிக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஒத்துழைப்பும் கிடைக்கும். வருடத்தின் பிற்பகுதியில் புதிய வேலைக்காக முயற்சி செய்யலாம். நிறைய சம்பளத்தில் புதிய வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. பதவி உயர்வும் கிடைக்கும் சம்பள உயர்வும் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வருமானம் இரட்டிப்பாகும் கடன் பிரச்சினை நீங்கும். வியாபாரிகளுக்கு வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். லாபமும் அதிகரிக்கும். கூட்டுத்தொழில் மேன்மையடையும்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts