மலேசியாவின் Gemencheh Negeri Sembilan பகுதியில் வசித்து வருபவர் வெளிநாட்டு ஊழியர் கணேஷ். விபத்தில் சிக்கியதன் காரணமாக, 41 நாட்களுக்கும் மேலாக கணேஷ் கோமாவில் இருந்த செய்தியை தமிழ் சாகாவில் சமீபத்தில் வெளியிட்டிருந்தோம்.
கணேஷ் கடந்த அக்டோபர் மாதம் 27ம் தேதி விபத்தில் சிக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. மலேசியாவின் Kuala Pilah மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த கணேஷுக்கு, கடந்த டிசம்பர் 10ம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. விபத்தில் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், அறுவை சிகிச்சை மூலம் தொண்டையில் குழாய் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில், அறுவை சிகிச்சைக்கு பிறகு முன்பிருந்த நிலைமையை விட கணேஷ் உடல்நிலை சற்று முன்னேறி இருப்பதாக மனைவி புனிதா தெரிவித்திருந்தார். அதேசமயம், அவருக்கு முற்றிலும் நினைவு திரும்பவில்லை. அறுவை சிகிச்சை முடிந்தும் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் தான் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், கணேஷின் மகள் சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இதுகுறித்து முகநூலில் பதிவிட்டுள்ள புனிதா, “கணேஷின் இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அப்பா பொண்ணு. இந்தாண்டு அப்பா இல்லாமல் பிறந்தநாள் கொண்டாடுகிறாய். அப்பா சீக்கிரம் திரும்பி வந்துடுவார். அம்மா உனக்காக எப்போதும் கூட இருப்பேன்; அப்பாவும் கூட இருப்பாருமா” என்று உருக்கமுடன் பதிவிட்டுள்ளார்.
https://www.facebook.com/thilaga.punitha/posts/3188169564753532
முன்னதாக, கணவர் கோமாவில் இருப்பதால், வீட்டு வாடகை, மின் கட்டணம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாமல் குழந்தையுடன் தவித்து வருவதாக புனிதா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கணேஷ் மீண்டு வரவேண்டும் என்பதே அனைவரின் பிரார்த்தனையாக உள்ளது.