தடுப்பூசி போடப்பட்ட பயண பாதை (VTL) திட்டத்தைப் பயன்படுத்த விரும்பும் அமெரிக்காவிலிருந்து சிங்கப்பூர் வரும் பயணிகள், டிஜிட்டல் முறையில் சரிபார்க்கக்கூடிய தடுப்பூசி சான்றிதழை தயாரிப்பதில் சிரமம் இருந்தால், அவர்கள் தடுப்பூசி நிலையை நிரூபிக்க மற்ற ஆவணங்களை இப்போது சமர்ப்பிக்கலாம் என்று சிங்கப்பூர் CAAS வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நேற்று நவம்பர் 13ம் தேதி Civil Aviation Authority Singapore வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்காவில் இருந்து சிங்கப்பூர் வருபவர்கள் நேரடியாக தடுப்பூசி பதிவேடு சான்றிதழையும் மற்றும் தடுப்பூசி வழங்குநரால் கையொப்பமிடப்பட்ட கடிதத்தையும் சமர்ப்பிக்க முடியும் என்று தெரிவித்துள்ளது. மேலும் கண்டிப்பாக அந்தக் கடிதத்தில் பயணியின் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் அவருக்கு தடுப்பூசி போட்ட விவரங்கள் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்கள் தங்கள் மாநில அல்லது உள்ளூர் சுகாதார ஆணையத்தின் பொது சுகாதார தரவுத்தளத்தின் மூலம் பெறப்பட்ட டிஜிட்டல் தடுப்பூசி பதிவையும் வழங்க முடியும் என்று CAASன் விமான நிலைய செயல்பாடுகள் ஒழுங்குமுறை மற்றும் விமானப் பாதுகாப்பு இயக்குனர் திருமதி மார்கரெட் டான் கூறினார். அதே நேரத்தில் சிங்கப்பூர் குடிமக்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்கள் சிங்கப்பூர் திரும்பும்போது தடுப்பூசி போடப்பட்ட பயண அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டியதில்லை என்றும் ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளித்த திருமதி டான் கூறினார்.
அவர்கள் சிங்கப்பூர் வந்தடைந்தவுடன் விமானச் செக்-இன் கவுண்டரில் குடிவரவு அதிகாரிகளிடமும் புறப்படுவதற்கு முன், அவர்கள் தடுப்பூசியின் டிஜிட்டல் பதிவைக் காட்டலாம் அல்லது சான்றிதழையும் சமர்ப்பிக்கலாம்.