சிங்கப்பூர் உணவு நிறுவனமான (SFA) நேற்று அக்டோபர் 26ம் தேதி வெளியிட்ட ஒரு அறிக்கையில், Proofer Bakery Pte இன் உணவு வணிக நடவடிக்கைகளை நிறுத்திவிட்டதாகத் தெரிவித்துள்ளது இந்த நிறுவனம் KA Foodlink கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று அக்டோபர் 26 அன்று SFA அதிகாரிகள் அந்த குறிப்பிட்ட வளாகத்தை ஆய்வு செய்ததைத் தொடர்ந்து, உணவு தயாரிக்கும் பகுதிகள் மற்றும் உணவு விநியோக லாரிகளில் பெரிய அளவில் பூச்சித் தாக்குதல் இருப்பது தெரியவந்தது.
கரப்பான் பூச்சிகள், இறந்த சில உயிரினங்கள் உயிரினங்கள் அங்கு இருந்ததாகவும், SFA கூறியது. “மேலும், வளாகத்தின் மோசமான பராமரிப்பு தொடர்பான பல குறைபாடுகள் காணப்பட்டன,” என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து proofer பேக்கரி தனது குறைபாடுகளை சரிசெய்யவும், உணவுப் பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் அதன் வளாகத்தின் தூய்மையை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் உத்தரவிட்டதாக SFA உத்தரவிட்டுள்ளது.
கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, Proofer நிறுவனத்தின் 16 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்ட உணவுப் பொருட்களை திரும்பப் பெறுமாறும் SFA அந்த நிறுவனத்திற்கு அறிவுறுத்தியுள்ளது. “உணவுச் சங்கிலியில் எங்கும் உணவு மாசுபடலாம் என்பதால் உணவுப் பாதுகாப்பு என்பது ஒரு கூட்டுப் பொறுப்பாகும். SFA தொடர்ந்து விழிப்புடன் இருந்துவருகின்றது. ஒழுங்குமுறை நடவடிக்கைகள் சரியான முறையில் அமலாக்கப்படுவதை உறுதிசெய்யும் அதே வேளையில், தொழில்துறையும் நுகர்வோரும் தங்கள் பங்கை ஆற்ற வேண்டும்,” என்றது SFA.
விதிமுறைகளை கடைபிடிக்காத அல்லது உணவு பாதுகாப்பு தேவைகளுக்கு இணங்காத உணவு ஆபரேட்டர்களுக்கு எதிராக அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், 10,000 வெள்ளி வரை அபராதம், ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் உட்பட தண்டனைகள் விதிக்கப்படும் என்றும் அது எச்சரித்தது.