TamilSaaga

சிங்கப்பூர் செல்வதற்கு நல்ல ஏஜென்சிகளை கண்டறிவது எப்படி? – வெற்றிப் பெற்றவர்கள் சொல்லும் 10 முக்கிய “டிப்ஸ்”

‘வெளிநாட்டு வேலை’ – குடும்பத்தின் பொருளாதார நிலையை உயர்த்தும் ஒரு அலிபாபா விளக்காகவே இருக்கிறது இன்றைக்கும் ஆயிரக்கணக்கான இந்திய குடும்பங்களில்.

‘சிங்கப்பூர் வேலை’ – தமிழக கிராமப்புறங்களில் இளைஞர்கள் தங்கள் குடும்பங்களின் தேவைகள் நிறைவேற்றப்பட இறுதியாக, இறுதிக்கட்ட நம்பிக்கையாக கொண்டிருப்பது இந்த ஒற்றை வார்த்தையைத் தான்.

காரணம் என்ன என்கிற கேள்வி எழுப்பி, ஆயிரமாயிரம் பதில்களை அடுக்கினாலும் அவைகளின் ஒரே சுருக்கக் குறியீடு அங்குள்ள உயர் பணத்தின் மதிப்பு. இங்கே நாளெல்லாம் வேலை செய்து சம்பாதிக்க நானூறு ரூபாயோடு ஒப்பிட்டால், அதே நாள்பூராமான உழைப்புக்கு சிங்கப்பூரில் கூடுதலாக பல நூறு ரூபாய்களை சம்பாதித்து விடலாம். இந்த ஒரு காரணம் தான் எதற்கும் துணிந்தவர்களாக, எதையும் எதிர்கொள்ளத் தகுந்த மனநிலையோடு, தமிழக இளைஞர்களை சிங்கப்பூர் போகும் முடிவினை எடுக்க வைக்கிறது.

இடைத்தரகர்கள்

ஒரு சாதாரண உள்ளூர்க்காரர் வெளிநாடு போக முடிவு எடுத்த உடனேயே, அடுத்த கட்டமாக முன்னால் வந்து நிற்பது வெளிநாட்டு முகவர்கள் என்று சொல்லக்கூடிய இடைத்தரகர்கள் தான். வெளிநாட்டு நிறுவனங்களோடு தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டு, அவர்களுக்கு தேவையான வேலையாட்களை இங்கிருந்து அனுப்புவது தான் இவர்கள் வேலை. அதற்கு இரு பக்கமும் கணிசமான தொகையை (அல்லது ஒரு பக்கம் மட்டும்) வசூலித்து விடுவது தான் இவர்களுடைய வருமானம். தங்கள் வேலையை சரியான முறையிள் இவர்கள் செய்து விட்டால், எந்த தொந்தரவும் இல்லை. ஆனால் பணத்துக்கு ஆசைப்பட்டு அப்பாவி மனிதர்களை ஏமாற்ற தொடங்கும் போது தான் ஆரம்பிக்கிறது எல்லாமே.

இடைத்தரகர்களும் ஏமாற்று வேலைகளும்.!

மிகமிக நம்பிக்கையாக பேசி, பேச்சிலேயே வெளிநாட்டில் சென்று சம்பாதி முடித்துவிட்ட திருப்தியை உணரும் அளவுக்கு செய்கிற இடைத்தரகர்கள் பலரின் ஏமாற்றுவேலை விமானத்தை விட்டு இறங்கிய உடனேயே தெரிந்துவிடும். அப்படிப்பட்ட ஏமாற்றம் எல்லாம் யாருக்கும் வந்து விடவே கூடாது! என்னும் படியான வலி அது.

ஊர் தெரியாது, மொழி தெரியாது, இடம் தெரியாது எதுவுமே தெரியாது இறங்கும்போதே (கம்பெனியிலிருந்து நிறுவனத்திலிருந்து) ஆள் வந்து அழைத்துச் செல்லும் என்பார்கள். இறங்கிய இடத்தில் ஆட்கள் யாரும் இல்லாமல், போகும் இடம் தெரியாது தவித்து நின்று, விமான நிலைய அதிகாரிகளிடம் சிக்கி, அங்கேயே காத்திருப்பு அறையில் மாதக்கணக்கில் தங்கி இருந்தவர்களும், உதவிக்கு யாரும் இல்லாமல் கொடுத்த பணத்தையும் இழந்து திரும்பி வந்தவர்களும் உண்டு.

அப்படியே ஆள் வந்து நிறுவனத்திற்குள் சென்றுவிட்டாலும், ‘கவுண்டமணி ஏமாந்த கப்பல் தள்ளிவிடுகிற வேலையை’ போல சொன்ன வேலை ஒன்று, சம்பளம் ஒன்று, கிடைத்த வேலை ஒன்று, சம்பளம் ஒன்று, இந்த இரு ஒன்றுக்கும் ஒரு பொருத்தமும் இருக்காது. இப்படி பல பலவிதங்கள் இருக்கிறது ஏமாற்றப்படுவதில்.

பணம் கட்டிய பிறகு விமான நிலையமே போகாமல், உள்நாட்டிலேயே ஏமாந்து ,பணம் கொடுத்தவரை தேடி அலைகிற கோடி கதைகளும் உண்டு இங்கே. அவை இன்னும் பரிதாபம்.

என்ன செய்யலாம் ?
பத்திரமாக போய் வர பத்து கட்டளைகள்!

கல்வித் தகுதியின் அடிப்படையில், நேர்முகத் தேர்வுகளில் கலந்துகொண்டு, அரசாங்கம் வழி ஆவண சரிபார்ப்புக்கு பிறகு, முறைப்படி உயர் பணிகளுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை இன்று கணிசமாக உயர்ந்து இருக்கிறது என்றாலும், குறைவான படிப்பு, இந்த படிப்புக்கு எந்த வேலைக்குப் போய்! என்றைக்கு சம்பாதிப்பது!? என்னும் நிலையில் சாதாரண வேலைகளுக்கு முயற்சி செய்யும் எளிய மனிதர்கள்தான் இப்படி ஏமாந்து போகிறார்கள். அதை முதலில் தவிர்க்க இதோ சில எளிய வழிகள்…

ஒன்று

ஒரு இடைத்தரகரிடம் செல்வதாக முடிவெடுத்த உடனேயே, முதலில் நீங்கள் செய்ய வேண்டியது அந்த நபர், நிறுவனம், எத்தனை ஆண்டுகளாக இந்தத் துறையில் இருக்கிறது!? எவ்வளவு பேரை இதுவரை அனுப்பி இருக்கிறார்கள் !? எந்த மாதிரியான பணிகளுக்கு!? என்பதுதான்.

இரண்டாவது

அவர்கள் அனுப்பியவர்களில் ஓரிருவரையாவது நேரடியாக தொடர்பு கொண்டு, அவர்களது அனுபவங்களை கேட்டு அறிவது மிக முக்கியம்.

மூன்றாவது

வேலை செய்யப்போகும் நிறுவனத்தை பற்றி அறிந்துகொள்ளாமல் எந்த முடிவும் எடுத்து விடாதீர்கள். ‘அங்கே எங்கள் ஆள் ஒரு நல்ல வேலையில் அமர்த்தி விடுவார்’ என்பதை நம்பி போனவர்கள்தான் அதிகம் அவதிப்படுகிறார்கள் அங்கே.

நான்காவது

நிறுவனம் எதுவென அறிய வந்த பிறகு, அந்த நிறுவனத்தைப் பற்றி தீர ஆராயுங்கள். இன்றைய இணைய உலகில் அது ஒன்றும் பெரிய கடினமான ஒன்று இல்லையே!

ஐந்தாவது

உங்கள் முகவர் கேட்கும் தொகையை அந்த வேலையோடும், உங்களுக்கு குறிப்பிடப்படும் சம்பளத்தோடும் முதலில் ஒப்பிட்டுப் பாருங்கள். அப்போதுதான் நீங்கள் செலுத்தும் பணத்தை, அந்த வேலையில் எவ்வளவு நாளில் எடுக்க முடியும் என்பதை கணக்கிட முடியும். சம்பாதிக்கிற காலம் முழுவதும் கடன் கட்டுவதானால் சேமிப்பது எப்போது!?

ஆறாவது

உங்களிடம் உங்கள் இடைத்தரகர் கேட்கும் பணத்தை மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். இன்றைக்குத்தான் சந்தையில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு முகவர்கள், இடைத்தரகர்களின் நிறுவனங்கள் மலிந்து கிடக்கின்றனவே!

ஏழாவது

வேலை ஆண்டு காலம் எவ்வளவு என்பது குறித்த தெளிவான புரிதலை தொடக்கத்திலேயே பெற்றுக்கொள்ளுங்கள்.

எட்டாவது

கூடுமான மட்டும் தங்குமிடம்- நிறுவனம்- இடைப்பட்ட தொலைவு- ஆகும் செலவு- இவைகளை கணக்கிட்டு பார்த்த பிறகே இறுதி முடிவு எடுங்கள்!

ஒன்பதாவது

இடைத்தரகர்களே சொன்னாலும் கூட உங்கள் கடவுச் சீட்டு, தேவைப்படும் வேறு சான்றிதழ்கள், எதிலும் எந்த சமரசமும் செய்து கொள்ளாதீர்கள். எல்லாம் சரியாக இருக்கட்டும்.

பத்தாவது

வெளிநாட்டு வேலைக்காக வரம்புக்கு மீறி பெரும் தொகையை, முழுத் தொகையை கடனாகப் பெற்றுக் கொடுப்பது பற்றியும், வேலையின் சாதக பாதகங்கள் பற்றியும், உங்கள் இடைத்தரகர்கள் பற்றியும், நிறுவனம் பற்றிய எல்லா விபரங்களையும், குடும்பத்தினரோடு பகிர்ந்து கொள்ளுங்கள் !

நண்பர்களே !!!

எந்த தவறான, குழப்பமான ‘அதெல்லாம் பார்த்துக்கலாம்’ என்னும் தெளிவில்லாத, ஒப்பந்தங்களும் ஒத்துக் கொள்ளாமல் இருங்கள். போதும் ! எல்லாம் சிறப்பாகவே அமையும்!!!

Related posts