TamilSaaga

“சிங்கப்பூர் உள்பட 6 நாடுகளில் வசிக்கும் ஜப்பான் நாட்டு குடிமக்கள்” – பயங்கரவாத தாக்குதல் குறித்து எச்சரிக்கும் ஜப்பான்

ஜப்பானின் வெளியுறவு அமைச்சகம் 6 தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வசிக்கும் தங்களுடைய குடிமக்களுக்கு ஓர் எச்சரிக்கையை விடுத்துள்ளது. கடந்த செப்டம்பர் 13ம் தேதியன்று ஜப்பான், அதன் தூதரகங்களுக்கு இதுகுறித்த ஆலோசனைகளை அனுப்பியது குறிப்பிடத்தக்கது. அந்த ஆறு நாடுகளில் சிங்கப்பூர் உள்பட மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் மியான்மர் ஆகிய ஆறு நாடுகள் அடங்கும் என்றும் அசோசியேட்டட் பிரஸ் (AP) தெரிவித்துள்ளது.

உள்ளூர் செய்திகளையும் தகவல்களையும் பின்பற்றுமாறு குடிமக்களை வலியுறுத்தும் ஜப்பான்

ஜப்பான் தனது தூதரகங்களுக்கு விடுத்துள்ள ஆலோசனையில், “உள்ளூர் செய்திகள் மற்றும் தகவல்களுக்கு கவனம் செலுத்த வேண்டும் மற்றும் “இப்போதைக்கு” எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தனது குடிமக்களை வலியுறுத்தியது என்று AP தெரிவித்துள்ளது. “தற்கொலைப் படை தாக்குதல்கள் போன்ற அதிக ஆபத்துகள் பற்றிய தகவல் கிடைத்ததால், மத கூடங்கள் மற்றும் கூட்டங்களில் இருந்து விலகி இருக்குமாறு பிற நாடுகளில் உள்ள தங்கள் குடிமக்களை வலியுறுத்தியுள்ளது.

“தி வைப்ஸின்” கூற்றுப்படி, மலேசியாவில் உள்ள ஜப்பானின் தூதரகத்தில் வெளியிடப்பட்ட வெளிநாட்டு பாதுகாப்பு தகவல்களும் தங்கள் குடிமக்களை “பயங்கரவாதத்தால் எளிதில் குறிவைக்கப்படும்” இடங்களுக்கு செல்வதைத் தவிர்க்குமாறு வலியுறுத்தியது. மேலும் இந்த எச்சரிக்கையின் படி, உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் சுற்றுலா வசதிகள் போன்ற “மேற்கத்திய கலாச்சாரம் தொடர்பான” பகுதிகள் அடங்கும்.

மேலும் ஜப்பான் 6 நாடுகளில் உள்ள தூதரகங்களுக்கு அனுப்பிய இந்த அறிவுரைக்கு பதிலளித்த பல நாடுகள், “இதுபோன்ற அச்சுறுத்தல்கள் குறித்து தங்களுக்கு எந்த தகவலும் இல்லை” என்று கூறியுள்ளன. ஆனால் ஜப்பானின் வெளியுறவு அமைச்சகம் இதுகுறித்த தகவல் ஆதாரத்தை வழங்க மறுத்தது அல்லது ஆலோசனை மற்ற நாடுகளுடன் பகிரப்பட்டதா என்பதை வெளிப்படுத்த மறுத்துள்ளது.

Related posts