TamilSaaga

இறைவன் பெயரில் 7 மில்லியன் மோசடி! மனிதக் கழிவுகளை உண்ணச் சொல்லி தண்டனை! கொடூர மனம் படைத்த சிங்கப்பூர் ஆன்மீகவாதிக்கு 10 வருடம் சிறை!

உலகில் உள்ள அனைத்து மதத்தினரும் கடவுளை அறிந்துகொண்டு சிறப்பாக வாழ ஆன்மீகம் சார்ந்த செயல்பாடுகள் பெரிதும் உதவுகின்றன. என்னதான் கடவுள் நம்பிக்கை இருந்தாலும், கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என நம்பினாலும், கோவிலுக்குச் செல்வது ஆன்மீக சொற்பொழிவுகளைக் கேட்பது போன்ற செயல்கள் பலரின் மனதிற்கு நிம்மதியைத் தரக்கூடியதாக இருக்கும். 

அப்படி இறை சேவை, ஆன்மீக சேவை என்ற பெயரில் ஒவ்வொரு மதத்திலும் பல மதத்தலைவர்கள் இருப்பர். அவர்களை நம்பி அவர்களைப் பின்பற்றவும் ஒரு கூட்டம் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். அப்படி ஆன்மீக சேவை என்ற பெயரில் ஒரு பெண் சாமியார் தான் செய்த அட்டூழியங்களுக்காக தற்பொழுது கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார். 

சிங்கப்பூரைச் சேர்ந்த ஆன்மீக செயல்பாட்டாளர் தான் Woo May Hoe! இவர் தன்னை கடவுளுடைய தூதர் என்றும், கடவுளுக்கு நிகரான அதிகாரம் படைத்தவர் என்றும் கூறிக்கொண்டு, தன்னைப் பின்பற்றும் மக்களை ஏமாற்றியுள்ளார்.

இந்தியாவில் உள்ள ஸ்ரீ சக்தி நாராயணி அம்மா என்ற ஆன்மீக தலைவரைப் பின்பற்றும், சிங்கப்பூரைச் சேர்ந்த மக்களுக்கு தலைமையாக இருந்தவர் தான் 54 வயதான Woo May Hoe. 2012 -ல் 30 பேர் கொண்ட குழுவாக இருந்த இந்த ஆன்மீக அமைப்பில் நாளடைவில் ஏராளமானோர் சேர்ந்துகொண்டுள்ளனர். 

தலைமை என்ற பெயரில் Woo May Hoe நடத்தும் ஆன்மீக சொற்பொழிவைக் கேட்ட மக்கள், அவரைக் கடவுளாக நினைத்து, அவருக்கு பயந்து அவரைப் பின்பற்றினர். 

இவரின் சொற்பொழிவுப்படி கெட்ட கர்ம வினையால் அனைவரும் பாதிக்கப்படாமல் நல்ல கர்ம வினைகளை சம்பாதித்துக் கொள்ள வேண்டும் எனவும் அதற்காக அவரவர் தங்கள் சொத்து விவரங்களைக் கூறும்படியாகவும் ஆணையிட்டுள்ளார். விவரங்களை மறைப்பவர்கள் கடவுளால் தண்டிக்கப்படுவர் என்றும், சொத்துக்களை அவரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். 

அப்படி வசூலிக்கப்படும் பணம் மற்றும் சொத்துக்கள் அனைத்தும் இந்தியாவில் உள்ள அம்மாவுக்கு சென்று சேரும். அதனைக் கொண்டு ஏராளமான பசுக்கள் வாங்கியும், கோவில்கள் கட்டியும், பள்ளிகளுக்கு உதவி புரிந்தும் ஆன்மீகத் தொண்டு ஆற்றப்போவதாக Woo அறிவித்துள்ளார். 

இன்னும் ஒரு படி மேலே போய் தனக்கு காணிக்கையாக வழங்க வீடுகள், விலை உயர்ந்த பொருட்கள், கார்கள் என தேவையான அனைத்தையும் வசூலித்துள்ளார். 

2012 முதல் 2020 வரை ஏறத்தாழ 7 மில்லியன் சிங்கப்பூர் டாலர்கள் வரை இவர் ஏமாற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது. பணம் பறித்ததோடு மட்டுமல்லாமல் தன்னைப் பின்தொடரும் மக்களில் மூன்றில் ஒரு பங்கு ஆட்களை தனது வீட்டு வேலைக்காகவும் சொந்த வேலைக்காகவும் பயன்படுத்திக் கொண்டுள்ளார். அந்த மக்கள் தங்கள் வேலைகளை விட்டு முழு நேரமாக Woo-விற்கு சேவை செய்யவேண்டும். 

அப்படி செய்யாமல் தவறிழைக்கும் மக்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்கியுள்ளார். அடிப்பது, பற்களைப் பிடுங்குவது, கத்தரிக்கோல் கொண்டு குத்துவது, இரண்டாவது மாடியிலிருந்து குத்திக்கச் செய்வது போன்ற உயிருக்கு ஆபத்தான தண்டனைகளை வழங்கியுள்ளார். மேலும் அருவருக்கத்தக்க வகையில் மனிதக் கழிவை உண்ண வைத்தும் தவறிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்கியுள்ளார். 

இதில் பலருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன. வாழ்நாள் முழுவதும் மருத்துவம் பார்க்க வேண்டிய வகையில் நிரந்தரமான உடல் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. யாரேனும் அவரைப் பின்தொடர மறுத்தால் இது போன்ற தண்டனைகளை வழங்குவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இவரின் இந்த கொடூரத்தைக் கண்ட சிலர் 2020-ம் ஆண்டு இவர் பெயரில் புகார் ஒன்றைக் கொடுத்தனர். இவரைப் பின்பற்றியதால் தங்கள் வாழ்நாள் சேமிப்பை இழந்து தவிப்பதாகவும், உடல் ரீதியாக கொடூர தண்டனைகளை அனுபவித்துள்ளதாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து 2020 அக்டோபர்-ல் Woo கைது செய்யப்பட்டார். 

அவருடைய மனநலம் பற்றி பரிசோதனை செய்யப்பட்டு Paranoid schizophrenia அதாவது மனச்சிதைவு நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து நடந்த விசாரணையில் WOO-வின் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு 10.5 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 45 குற்றச்சாட்டுகள் இவர் மேல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்!

 

Related posts